Total Pageviews

Saturday, October 24, 2015

அன்று அண்ணாவிடம் கேட்ட கேள்வி


(திராவிட நாடு ஏட்டிலே அறிஞர் அண்ணா அவர்கள் கேள்வியும் பதிலும் என்ற பகுதியிலே வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடுத்த முக்கிய பதில்கள். ஆதாரம்: 21.11.1947, திராவிட நாடு)
கல்லூரி மாணவர்கள், மக்கள் மனதிலே பதிய  பகுத்தறிவு இயக்கத்துக்கு எந்த வகையில் பணியாற்ற முடியும்?
கட்சிமாச்சரியங்களை மறந்து, பகுத்தறிவு பரவ வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக கூடி, நமது நாட்டு மக்களின் வாழ்க்கையிலே ஊறிப்போயுள்ள பழைய, பயனற்ற, கேடுதரும், எண்ணங்களை அகற்றும் வகையிலே பேசுவது, பாடுபடுவது, ஓவியங்கள் தீட்டுவது, பொருட் காட்சிகள் நடத்துவது, நாடகங்கள் நடத்துவது, விஞ் ஞானிகள்,
வீரர்கள், அறிஞர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கதை வடிவில் கூறுவது, உலகிலே எங்கெங்கு, என்னென்ன வகையான மூட நம்பிக்கைகள் இருந்து வந்ததை அவை எப்படி அகற்றப்பட்டன என்பவற்றை விளக்குவது - இவ்விதமாகப் பணியாற் றலாம் - பலன் உண்டு.
கூடுமானவரையில் நடைமுறை அரசியல் பூசல்களிலிருந்து ஒதுங்கியிருந்து நடத்துவதே நல்லது. பெரிய நகர்களிலே நடத்தப்படுவதைவிட, கிராமங்களில் இந்தப் பிரச்சாரம் நடைபெற வேண்டும். எழுச்சியூட்டும் சொற்பொழிவு விழாக்களாக மட்டுமே அமையாமல் மக்கள் மனதிலே பதியக் கூடிய விதமான உரையாடல்களாக அமைவது நல்லது.
கம்பன் கவிதைகளிலே காமரசம் பற்றி...
கம்பன் கவிதைகளிலே காமரசம் அதிகம் என்று கண்டித்து எழுதிவிட்டு, ரோமாபுரி ராணிகள் என்ற புத்தகத்தில் காமரசத்தைக் கலக்கியது சரியா?
சரியல்ல, கலக்கி இருந்தால்! காமரசக் களஞ்சியம், அந்த அரசிகளின் வாழ்க்கை அதன்பயனாக அரசு அழிந்தது என்பதை முன்னுரையில் கூறிவிட்டு, வெறும் போக போக்கியத்தில் மிருக இயல்புடன் புரள்வோர் நாடாள்வோராக இருக்கக்கூடாதென்று எச்சரிக்கவே இப்புத்தகம் தீட்டுகிறேன் என்பதை விளக்கினேன்.
எனவே காமரசத்தைக் கலக்கிய குற்றம் என்பாலில்லை. அது போலவே, அந்த ரசத்தைப் போற்றியதாகவோ, பாராட்டு வதாகவோ, அதனை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டுமென்று சிபாரிசு செய்வதாகவோ என்மீது குற்றம் சுமத்தக்காரணம் இல்லை. குற்றம் ஏதேனும் சுமத்தலாம் என்று தேடிடும் போது இது மட்டுமா இன்னும் உருவற்ற பலனற்ற பல கிடைக்கும் தேவையுள்ளோர் அந்தத் திருப்பணியில் தாராளமாக ஈடுபடட்டும்.
நிற்க! ரோமாபுரி ராணிகள், கம்பன் ஏடுபோல, கடவுள் கதை அல்ல, பஜனை ஏடல்ல, புண்ணிய கதையாகவும், பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் பெரும் துணையாகவும், பெருமானின் அருளைப் பெற்றுத் தரவல்ல புனித ஏடாகவும் கூறப்படும் இராம கதையிலே ஏன் காமரசம் கலக்கினார் கம்பர் என்பது என்கேள்வி.
அந்தக் கேள்வியும் கண்டனமும், நான் ரோமாபுரி ராணிகள் வெளி யிட்டதால் பயனற்றுப் போய்விடாது, பழி கூறு படலத்துக்குப் பரபரப்புடன் சிலபல தேடுவோர், என்மீது பழுதையை வீசிவிட்டு, பாம்பை வீசிவிட்டோம் என்று களிப்பதிலே, எனக்கோர் நஷ்டமும் இல்லை. அவர்கள் ஆசையும் தீர்ந்து போகட்டுமே, நமக்கென்ன நஷ்டம், என்ற கைவல்ய வாக்கியந்தான் கவனத்திற்கு வருகிறது.
வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?
வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், என்று பகுத்தறிவு வாதிகளாகிய நீங்கள் கருதுகிறீர்கள்? மாயப் பிரபஞ்சம் - நீர்மேற்குமிழி என்பன போன்ற கருத்துக்களை விரும்பாத பகுத்தறிவாளர்கள், வாழ்க் கையைப் பற்றிக் கொண்டுள்ள கருத்து, வெறும் மிருக இச்சை பூர்த்திதான் என்ற தப்புப் பிரச்சாரம் பரவி இருக்கும் இந்நாளில், இந்தக் கேள்வி கேட்கப்பட்டது பற்றி மிக மகிழ்ச்சி - உண்மையை விளக்க ஓர் வாய்ப்பு ஏற்படுவதால்.
இவ்வுலகில் உயிரோடு இருப்பது மட்டுமல்ல வாழ்க்கை - கல்வி கேள்விகளில் சிறந்து, மக்களை மக்களாக மதித்து நடந்து, சோம்பித்திரியாது சுறுசுறுப்பாக உழைத்து, செல்வத்தைப் பெருக்கி, தேவைக்கேற்ற அளவு பெற்று, இன்பம் பயக்கும் பல சாதனங்களையும் கண்டு வாழ்வதுதான் - மனித வாழ்வின் முடிந்த லட்சியம் என் பதை நாம் ஒவ்வொருவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
இந்த உயர்ந்த வாழ்வு நினைத்த மாத்திரத்தில் நினைப்புக் கொள்வதால் மட்டும் சித்தியாகிவிடாது. எடுத்து விளக்குவது முக்கியமாயினும், வெறும் விளக்க உரையால் மட்டும் சாத்திய மாகக் கூடியதென்று இந்த லட்சியத்தைப் பெறுவதற்காக நம்மில் பலரின் சுகபோகங்களை - கிடைத்தற்கரிய உயிர்களைப் பணயம் வைக்க வேண்டும்.
ஒரே நாளில் வெற்றிப் பெற்று விடக் கூடியதுமன்று. இந்த இன்ப வாழ்வைப் பெறமுடியாமல், மனிதனின் அறி வையும், முயற்சியையும் குலைப்பதற்கு அவனுக்குப் பூட்டப்பட்டுள்ள விலங்குகளோ அனைத்தும் வன்மை மிக்கது.  ஒவ்வொன்றாகத் தான் நொறுக்க முடியும் ஒரு விலங்கு ஒடிந்ததும், எதிர்பார்த்த லட்சியம் கூடவில்லையே என  மனச் சோர்வுக்கு இடங் கொடாமல் மேலும் மேலும் விலங்கொடிக்கும் வேலையில்,
முன்னிலும் மும்முரமாகப் பங்கு கொள்ள வேண்டும். இத்தகைய பணி எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறுகிய கால அளவில் முடிவுற்றாலும் முடியலாம் - நாள் கூடினாலும் கூடலாம் எதற்கும் இப்போராட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள சக்தி - எதிர்ச் சக்தியின் பலத்தைப் பொறுத்திருக்கிறது.
அவதிக்குக் காரணம்
வாழ்க்கை இன்பம் சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய அவ்வளவு பொருள் பஞ்சம் பூமியில் இல்லை. அறிவுப் பஞ்சம் கூட அல்ல, இன்றுள்ள அவதிக்குக் காரணம் தன்னலம், பிறர் நலத்துடன் பிணைந் திருக்கிறது என்ற பேருண்மையை உணராததாலேயே,
சுரண்டல் முறை வளருகிறது. அதன் விளைவாக பெரும்பாலோர் வாழ்வு தேய்கிறது. தேயும் வாழ்வினருக்கு, எதையேனும் கூறித் திருப்தியைத் திணிக்க விரும்பும் தத்துவார்த்திகள் கிளம்பி, வாழ்க்கை வானவில் போன்றது, பொம் மலாட்டம் என்ற சில பல கூறி, வாழ்க்கையின் அடிப்படை உண்மையை மறைக்கின்றனர்.

0 comments: