Thursday, October 15, 2015

நீதித் துறைக்கே காவல்துறைமீது நம்பிக்கை இல்லையெனில் சாதாரண குடிமக்களுக்குப் பாதுகாப்பு எங்கே? தேவை முதல்வரின் விளக்கம்

சென்னையில் உயர்நீதிமன்ற பாதுகாப்புப் பிரச்சினை
மாநிலக் காவல்துறைக்குப் பதிலாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை தேவை என்று
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து முதல் அமைச்சரின் விளக்கம் என்ன?
நீதித் துறைக்கே காவல்துறைமீது நம்பிக்கை இல்லையெனில்
சாதாரண குடிமக்களுக்குப் பாதுகாப்பு எங்கே? தேவை முதல்வரின் விளக்கம்

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி  தலைமையிலான  முதல் அமர்வு  அளித்துள்ள தீர்ப்பு, மாநிலக் காவல் துறையின் மீதான நம்பிக்கை யின்மையைக் குறிக்கிறது. முதல் அமைச்சர் இது குறித்து  விளக்கம் அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
சென்னை உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறித்து, மத்திய தொழில்  பாதுகாப்புப் படை தேவை; மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசி ஒரு முடிவினை அறிவிக்க வேண் டும். ஆறு மாதங்களுக்கு இவ்வேற்பாடு தவிர்க்க முடியாது என்று தலைமை நீதிபதி உள்ளடங்கிய முதலாவது அமர்வு கூறியுள்ளது இதற்கு முன் எப்போதும் கேட்டிராத மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தியாகும் இது!
தமிழகக் காவல்துறைமீது உயர்நீதிமன்றத்தின் கணிப்பு
இதன் அப்பட்டமான பொருள் தமிழக காவல்துறை - போலீஸ் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருதுகிறது என்பதுதானே!
தமிழ்நாட்டில் காவல்துறை, முதல் அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள், நேரடி நிர்வாகத்தின்கீழ் இருக்கும் ஒரு முக்கிய துறையாகும். சட்டம், ஒழுங்கினை, பராமரிக்கும் காக்கும் அதி முக்கிய துறையாகும்.
போதிய விளக்கம் அளிக்க வேண்டும் முதல் அமைச்சர்
இந்நிலையில் இப்படி ஒரு முக்கிய அதிர்ச்சி தரும் தகவல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிட மிருந்தே வருகிறது என்றால் அதுபற்றி தமிழ்நாட்டு மக்களுக்குப் போதிய விளக்கம் அளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு முதல் அமைச்சருக்கு உண்டு.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டும் அல்ல; இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இதுவரை கேட்டிராத அதிசய கோரிக்கை இது!
ஜனநாயகத்தின் முப்பெரும் அங்கங்கள்
நமது ஜனநாயக அரசின் முப்பெரும் அங்கங்கள்! நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை (The Executive, Legislature and Judiciary) - இவை மூன்றும் சுதந்திரமாக இயங்குவதே ஆரோக்கியமான நிலையாகும். நான்காம் தூண் ஊடகங்கள் - சுட்டிக் காட்டிட வேண்டியவைகளை சுட்டிக் காட்டிப் பரிகாரம் தேடிட, தீர்வுகளை நோக்கி ஆயத்தப்படுத்த வேண்டியதும் அதன் பணியாகும்.
சாமான்ய மக்களுக்குப் பாதுகாப்பு எங்கே?
சென்னை உயர்நீதிமன்றத்திற்கே தமிழக காவல் துறையின்மீது நம்பிக்கையில்லாத ஓர் அவலம்! வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தப்படுவது போன்ற ஒரு அசாதாரண சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியிருந்தால், சாதாரண, சாமான்யர்களான குடி மக்களுக்கு நமது காவல்துறையின்மீது - அதன் கடமையாற்றும் பணியின்மீது நம்பிக்கை எப்படி ஏற்படும்?
மற்ற மாநில நிகழ்வுகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள், அண்மையில் உ.பி. மாட்டிறைச்சி வதந்தியின் அடிப் படையில் முகமது  அக்லாக் படுகொலைபற்றி என்ன கூறினார்? மகாராஷ்டிர மாநில நிகழ்வுகள் பற்றிக் கேட்டால், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, மாநிலங்களின் பொறுப்பு - அந்தந்த மாநிலங்கள்தான். செயல்பட வேண்டும்; எங்களிடம் உதவி கேட்டால் நாங்கள் செய்ய முன் வரக் கூடும் என்று தானே கூறுகிறார்!
மாநில உரிமைப் பிரச்சினை மட்டுமல்ல!
அப்படி இருக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை தமிழக அரசும் முதல் அமைச்சரும் எப்படி எதிர் கொள்ளப்போகிறார்கள்? தீர்வு காணவிருக்கிறார்கள் என்பதை உடனடியாக தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
இதில் மாநில அதிகார உரிமைப் பிரச்சினை மட்டும் அடங்கியிருக்கவில்லை; 4 ஆண்டு காலம் ஆட்சி செய் துள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சி செல்வி ஜெயலலிதா தலை மையில் நடைபெறும் ஆட்சியின் நம்பகத் தன்மையும் அதற்குரிய மரியாதையும் அடங்கியிருக்கிறது! தெளிவு படுத்த வேண்டும் முதல் அமைச்சர், அது அவரது பொறுப்பும், கடமையும் ஆகும்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
14-10-2015
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...