Total Pageviews

Friday, October 9, 2015

ஏழுமலையானுக்கும் போட்டிக் கடை!


திருப்பதி ஏழுமலையானுக்குப் போட்டிக் கடை தெலுங்கானாவில் ஏற்பாடாகிறது. திருப்பதி ஆந்திர மாநிலத்திற்குச் சென்று விட்டதால் தெலங்கானாவுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் நட்டம் என்று நினைக்கிறவர்கள் தெலுங்கானா மக்கள் மட்டுமல்ல - தெலுங்கானா அரசும்கூடத் தான்!
திருப்பதி ஏழுமலையானின் ஆண்டு உண்டியல் வருமானம் மட்டும் ரூ.907 கோடி, நாள் ஒன்றுக்குச் சராசரியாக 85 ஆயிரம் பக்த கோடிகள் வந்து கொட்டிக் கொடுக்கிறார்களே!
இவை எல்லாம் ஆந்திராவுக்குப் போய் விட்டதே என்ற ஆதங்கத்தில், அய்தராபாத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் யதாகிரி குட்டாவில் ஒரு கோயில் இருக்கிறது. 900 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலுக்குப் பெயர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இந்தக் கோயிலைத்தான் திருப்பதி ஏழுமலையானுக்குப் போட்டியாக உருவாக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது - தெலங்கானா மாநில அரசால். பக்தியில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைவிட பல மடங்குப் பைத்தியம் பிடித்தவர் தெலங்கானா மாநில முதல் அமைச்சர் சந்திரசேகரராவ்; வரிந்து கட்டிக் கொண்டு திருப்பதி ஏழுமலையானுக்குப் போட்டியாகக் களத்தில் குதித்துள்ளார்.
ஒரு சிறிய குன்றின்மீது இந்தக் கோயில் இருக்கிறது. இதனைச் சுற்றி மேலும் எட்டு குன்றுகள் இருக்கின்றன. இவை அத்தனையையும் ஒன்றாக இணைக்கப்படுமாம். திருப்பதி ஏழுமலைகளைச் சூழ்ந்தது (அதுதான் ஏழுமலை யான் என்பது) இதுவோ ஒன்பது மலைகளால் சூழப்பட்ட ஒன்று. ஏற்கனவே இருந்த லட்சுமிநரசிம்ம சுவாமி என்பதற்குப் பதிலாக யதாத்ரி என்று புது நாமகரணம் சூட்டப்படுகிறது. ஜீயர்கள் பலர் ஆலோசனைகளைக் கூறுகிறார்கள்.
அய்தராபாத்திலிருந்து இந்தக் கோயிலுக்குச் செல்ல நான்கு வழிச் சாலை, மலையில் ஏறுவதற்கு அகலமான சாலைகள் அமைக்கப்பட உள்ளன. திருப்பதி போலவே பக்தர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும். திருப்பதியில் இருப்பது போலவே தரிசன முறைகள், விசேடங்கள் பின்பற்றப்படுமாம்.
பிரபல தெலுங்குப்படக் கலை இயக்குநர் ஆனந்தசாய், (இவர்தான் அமெரிக்கா நியூஜெர்சியில் சாயிபாபா கோயிலை வடிவமைத்தவர்). இவரைக் கொண்டுதான் இந்த யதாத்ரி கோயிலும் வடிவமைக்கப்படுகிறது. இதற்காக 1500கோடி ரூபாயில் மிகப் பெரிய அளவில் திட்டங்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன.
பக்தி - ஒரு வியாபாரம் என்று கிருபானந்தவாரியாரி லிருந்து சங்கராச்சாரியார் வரை வேறு வழயில்லாமல் ஏற்கனவே சொல்லி வைத்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கான தகவல் அலுவலகம் சென்னையில் - இருந்தது; இப்பொழுது அதுகூட ஏழுமலையானின் கிளைக் கோயிலாகவே ஆகி விட்டது; பக்தர்கள் வர ஆரம்பித்து விட்டனர்.
திரு. சோ ராமசாமி அவர்களேகூட பக்தி வியாபாரம் ஆகியுள்ளதுபற்றித் தலையில் அடித்துக் கொண்டு எழுதினார்.
கேள்வி: சென்னைத் தீவுத் திடலில் திருப்பதி ஏழு மலையான் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடை பெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து?
சோவின் பதில்: இவ்வளவுப் பணம் செலுத்தினால், வெங்கடேஸ்வரப் பெருமாளை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை.
(துக்ளக் 23.4.2008 பக்கம் 17).
என்று புலம்பினாரே!
பொதுவாகக் கோயில் வழிபாடு என்பது புத்தி குறைந்தவர்களுக்குத்தான் என்பதுதான் பக்தி நிலைகூட! இதுகுறித்து உத்தர கீதை என்ன சொல்லுகிறது? துவி ஜாதியினருக்கு (அதாவது பார்ப்பனர்களுக்கு) தெய்வம் அக்னி, முனிவர்களுக்குத் தெய்வம் இருதயம், புத்தி குறைந் தவர்களுக்குத் தெய்வம் சிலை; சமப் பார்வை உள்ளவர் களுக்கு எங்கும் தெய்வம் என்று உத்திர கீதை கூறுகிறது.
இதன் மூலம் என்ன தெரிகிறது? கோயில்கள் கட்டப் படுவதெல்லாம் புத்தி குறைந்தவர்களுக்காகத்தான்! திருப்பதியில் நாள் ஒன்றுக்கு 85 ஆயிரம் பேர்கள் வருகிறார்கள் என்றால் இதன் பொருள் நாள் ஒன்றுக்கு 85 ஆயிரம் புத்தி குறைந்தவர்கள் வருகிறார்கள் என்பதாகும்.
இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணங்கள் என்ற புளுகு மூட்டைகளை எழுதி வைத்து மக்களைச் சுரண்டுவதுதான்.
ஆரூரில் பிறக்க முக்தி, தில்லையம்பதியைத் தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, ஆனால் அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று எழுதி வைத்துள்ளனர். கோயில் கடவுள்களுக்குள்ளேயே இப்படியெல்லாம் ஏற்றத் தாழ்வு! சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாளைத் தரிசித்தால் 108 திவ்ய தேசங்களையும் ஒரே நாளில் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது அய்தீகமாம்.
வணிகக் கடைகளில் தங்கள் சரக்குதான் உயர்ந்தது என்று விளம்பரம் செய்வது போலத்தான் இந்தக் கோயில்கள் நிலையும்; அதனால்தான் பக்தி என்பது ஒரு பிசினஸ் என்று மதக் குருக்களே சொல்லும் நிலை ஏற்பட்டு விட்டது.
திருப்பதி உண்டியலில் பணம் வசூல் நடக்கிறதே - ஏன் தெரியுமா? - அதற்கும் ஒரு கதை தயாராகவே வைத்துள்ளனர்.
வெங்கடாசலபதி திருமணம் செய்வதற்காகக் குபேரனிடம் கடன் வாங்கினாராம். அதற்கான வட்டியை ஆண்டுதோறும் கட்டுவதற்காகத்தான் பக்தர்களிடம் உண்டியலில் நிதி போடச் சொல்லிக் கேட்கிறாராம்.
எப்படி இருக்கிறது!? இதுவரை எத்தனைக் கோடி பணம் சேர்ந்திருக்கும்? அப்படியும்  கடன் தீரவில்லை என்றால். இதன் பொருள் என்ன? கடவுளே கடன் வாங்குகிறார் என்றால், அவர் எப்படி கடவுள் என்று மதிக்கத் தகுந்தவர்?
இப்படியெல்லாம் கேட்டால் ஒரே வரியில் நாத்திகன் என்று சொன்னால் அது சமாதானம் ஆகி விடுமா?
சிந்திப்பீர் பக்தர்களே!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: