Total Pageviews

Monday, October 26, 2015

அடுத்து தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும்!


இதை உணர்ந்து மற்றவர்களும் நெருங்குவார்கள்
சேலத்தில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி


சேலம், அக்.26- அடுத்து தமிழ் நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும், அதைப் புரிந்து கொண்டு மற்றவர்களும் நெருங்கி வருவார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.  25.10.2015 அன்று சேலத்தில் நடைபெற்ற மாணவர் கழகக் கலந்துரையாடல் - திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட் டில் பங்கேற்க சேலத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
சேலம் மண்டலம், தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய மண்டலங்கள் சார்ந்த திராவிடர் மாணவர் கழக கலந்துரையாடல் - தந்தை பெரியார் அவர்களின் 137 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன் னிறுத்தி சட்டக்கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் இன்றைக்கு இங்கே குழுமியுள்ளார்கள்.
மாணவர்களே பகுத்தறிவு சுடரேந்துவீர்!
மாணவர்கள் மத்தியில் தந்தை பெரியார் அவர் களுடைய கருத்துகளை வேரூன்ற  இன்றைக்குச் சூழ்ந் திருக்கின்ற ஜாதி வெறி, மதவெறி இவைகளை எதிர்த்து, இளைய தலைமுறையினர் தங்களுடைய கடமைகளை ஆற்றவேண்டும் என்பதை வலியுறுத்தி - அவற்றை விளக்குவதற்காக பகுத்தறிவு சுடரேந்துவீர்! என்கிற தலைப்பில் நான் கருத்துரையாற்ற இங்கே வந்திருக்கிறேன்.
அந்த வகையில் மாணவர்கள் ஒரு பேரணியாக வந்தார்கள். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கின்ற மாணவர்கள், பதவிகளைப்பற்றி கவலைப்படாமல், தேர்தலைப்பற்றி கவலைப்படாமல் அடுத்த தலை முறையைப்பற்றி கவலைப்படக்கூடிய மாணவர்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.
மோடி அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். என்கிற மூக்கணாங்கயிறு போடப்பட்டிருக்கிறது
செய்தியாளர்: இன்றைய சூழலில் தொடர்ந்து வட இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் சிவசேனா கட்சியினர் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார்கள் அதுபற்றி...?
தமிழர் தலைவர் பதில்: இது அவ்வளவும் ஏற்பட்டது, மத்திய அரசு தங்களைக் கண்டும் காணாமல் இருப்பார்கள் என்கிற அந்த ஒரு தைரியத்தில் இவையெல் லாம் இன்றைக்கு நடைபெறுகின்றன. மகாராஷ்டிரத்தில் இருக்கின்ற பா.ஜ.க. அரசு  சிவசேனாவினுடைய தயவில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்கிற காரணத்தினால், சிவசேனாவினர் என்ன செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அல்லது பாம்புக்கும் நோகாமல், பாம்பை அடிக்கும் கோலுக்கும் நோகாமல் நடவடிக்கை எடுப்பது போன்ற ஒரு நிலையை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்த நாட்டில் இருக் கக்கூடிய சகிப்புத்தன்மை குறைகிறது, குறைகிறது என்று குடியரசுத் தலை வரிலிருந்து எல்லோரும் உபதேசம் செய்வதில் பயனில்லை. நிச்சயமாக சட்டம் - ஒழுங்கு பிரச் சினையை ஏற்படுத்துப வர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கடும் நட வடிக்கை எடுக்கவேண்டும்.
சொந்த அமைச்ச ரவையில் இருக்கக்கூடிய வர்களே, தாறுமாறாகப் பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு வகுப்பெடுப் பதைப்போல உபதேசம் செய்வது பயன்படாது. கட்டுப்பாடு உள்ள ஒரு தலைமை என்று சொன் னால், அவர்களை நீக்கக் கூடிய துணிச்சலும், மற்றவர்களை அவர்களுடைய இடத் திற்குக் கொண்டுவரக்கூடிய செயல்பாடுகளும் தேவை.
ஆனால், இன்றைய மோடி அரசில், இதனை எதிர்பார்க்க முடியாது. காரணம் என்னவென்றால், அவர் சுதந்திரமான அமைச்சரவையை அமைத்துக் கொண்டி ருக்கவில்லை. அப்படி அமைத்திருந்தால், இந்நேரம் தாறுமாறாகப் பேசுகிறவர்களை வெளியேற்றியிருப்பார். மாறாக, ஆர்.எஸ்.எஸ். என்கிற மூக்கணாங்கயிறு போடப் பட்டிருக்கிறது. ஆகவே, அந்த மூக்கணாங்கயிறு எப்படி இழுக்கிறதோ அப்படித்தான் இந்த அமைச்சரவை செயல் படும். ஆகவேதான், இன்றைக்கு நாட்டில் இந்நிலை இருக்கிறது.
அதற்குப் பெயர்தான் தமிழக முதல்வர்
செய்தியாளர்: பால் விலை முதல் பருப்பு விலை வரை உயர்ந்து மக்கள் மிகப்பெரும் அவதிக்குள்ளாகியிருக் கின்றனர். ஆனால், தமிழக முதல்வர் இதனைக் கண்டு கொள்ளவில்லையே?
தமிழர் தலைவர்: அதற்குப் பெயர்தான் தமிழக முதல்வர்.
உலக நாடுகள் மத்தியில் நமக்கு இருக்கின்ற பெருமையும், தன்னம்பிக்கையும் வெகுவாகக் குறைகிறது
செய்தியாளர்: மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் பல்வேறு விதமான கருத்துகளைத் தெரிவித் துள்ளனர். பிரதமர் மோடியின் மவுனம் அசாத்தியமான ஒன்றாக இருக்கிறது. அவருடைய நிலைப்பாடுபற்றியும், மத்திய அமைச்சர்களின் கருத்துகளைப்பற்றியும் உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: எங்களுடைய கருத்துகளை கடந்த சில நாள்களாக தெளிவாகச்  சொல்லி வருகிறோம்.  இப்பொழுதுகூட அதனை புத்தகமாக வெளியிட்டிருக் கிறோம். இது பெரும் ஆபத்தான போக்கு. மனிதனைக் காப்பாற்றுவதற்காக ஆட்சிகள் இருக்கவேண்டும். மனிதர் களைக் காப்பாற்றாமல், மாடுகளுக்காக மனிதனை கொலை செய்யக்கூடிய அளவிற்கு, அதுவும் வெறும் வதந்தியின் பேரால் கொலை செய்கிறார்கள் என்று சொன்னால், நாம் எவ்வளவு பின்நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை காட்டக்கூடிய அளவில் இருக்கிறது.
உலக நாடுகள் மத்தியில் நமக்கு இருக்கின்ற பெருமையும், இந்தியாவில் வந்து முதலீடு செய்யலாம் என்று சொல்லக்கூடிய தன்னம்பிக்கையும் இதன்மூலம் வெகுவாகக் குறைகிறது என்பதை பல நாடுகளுடைய ஏடுகளும், மற்றவைகளும் சொல்வதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
எனவேதான், ஆக்க ரீதியான ஒரு சரியான கூட்டணி  உருவாகவேண்டியது அவசியம், காலத்தின் கட்டாயம்.
செய்தியாளர்: யாருடைய தலைமையில் கூட்டணி அமையவேண்டும் என்று சொல்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: காலம் இதற்குப் பதில் சொல்லும். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இதற்கான விடை தெரியும்.
மக்கள் நல கூட்டணிபற்றி...!
செய்தியாளர்: மக்கள் நல கூட்டணி
என்று இப்பொழுது அறிவித்திருக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: அவர்களுடைய நலக் கூட்டணி என்பதிருக்கிறதே, முதலில் அவர்கள் கூட்டணியை அறிவித்துவிட்டு, பிறகு கொள்கையை அறிவிக்கிறார்கள். எந்த அமைப்பாக இருந்தாலும், கொள்கையை அறிவித்துவிட்டு, கூட்டணியை அறிவித்தால்தான், அந்தக் கூட்டணி நீடிக்க வாய்ப்பிருக்கிறது.
தி.மு.க.வினால்தான் ஆட்சி மாற்றம் ஏற்படும்!
செய்தியாளர்: அ.தி.மு.க.விற்கு அடுத்தபடியாக பெரிய கட்சியாக தி.மு.க.தான் இருக்கிறது. அதனால் தி.மு.க. தலைமையில் கூட்டணி அமையவேண்டும் என்று நீங்கள்  முயற்சி செய்வீர்களா?
தமிழர் தலைவர்: நாங்கள் அரசியலுக்கு அப்பாற் பட்டவர்கள். ஆட்சிக்கு வருகின்ற வாய்ப்பு நிச்சயமாக இப்பொழுது தி.மு.க.விற்குத்தான் இருக்கிறது. ஏனென்றால், அ.தி.மு.க. - தி.மு.க. இரண்டு கட்சிகளுக்குத்தான் அதிகமான வாக்கு வங்கி இருக்கிறது. இவர்களோடு கூட்டணி சேர்ந்தால்தான், வெற்றி பெற முடியும் என்பது தெளிவான, நாட்டில் இருக்கக்கூடிய சுவரெழுத்துப் போன்ற உண்மையாகும். அந்த வகையில், ஒரு ஆட்சி மாற்றம் வரவேண்டுமானால், நிச்சயமாக அது தி.மு.க.வினால்தான் கொண்டு வரப்படும். மற்றவர்களும் உணர்ந்து நெருங்குவார்கள்.
அவருக்கே தெரியாது!
செய்தியாளர்: ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று விஜயகாந்த் சொல்லியிருப்பதுபற்றி...?
தமிழர் தலைவர்: அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்று அவருக்கே தெரியாத போது, அதுபற்றி நாம் எப்படி முடிவு சொல்ல முடியும்?
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

மக்களைச் சந்திக்க வேண்டும் என்ற அவசியத்தை மு.க. ஸ்டாலின் உருவாக்கி விட்டார்
செய்தியாளர்: தமிழக அரசைக் கண்டித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நமக்கு நாமே விடியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தப் பயணம் எந்த அளவிற்கு சாத்தியமானது?
தமிழர் தலைவர்: தலைவர்கள், மக்களை  சந்திக்கவேண்டும். எங்கோ ஒரு   வெள்ளைக் கோபுரத்திற்குள் இருக்க முடியாது என்பதை மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகத் தெளிவாக அவருடைய பயணத்தின்மூலமாக உணர்த்தியிருக் கிறார். மக்களுடைய உணர்வுகளை அவர் ஒரு ஜனநாயகவாதியாக இருந்து புரிந்து கொள்கிறார். அவருக்கு வாழ்த்துகள்!
இதேபோல, மற்ற தலைவர்கள்கூட மக்களைச் சந்திக்க வந்துதான் ஆகவேண்டும் என்கிற ஒரு நல்ல முன்மாதிரியை, அவசியத்தை இதன்மூலம் ஏற்படுத்தியிருக்கிறார்.
பொதுவான நோக்கத்தோடு ஆட்சியை மாற்ற வேண்டும்; மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும்; பொதுவாக ஊழல் மலிந்துவிட்டது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், எல்லோரும் அங்கே தனித்தனியாக இருந்தால், அது யாருக்கு லாபம்? இவர்கள் எந்த நோக்கத்தில் கூறுகின்றார்களோ, அந்த நோக்கத்தை அவர்களே முறியடித்துக் கொள்கிறார்கள் என்றுதான் பொருள்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: