Total Pageviews

Monday, October 12, 2015

குடியைக் கெடுத்த குடி!


மது மக்களை, குடும்பங்களை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதற்கு மிகப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. நம் கண்ணெதிரே நெஞ்சைப் பிழியும் ஒரு அவலம் சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் நடந் திருக்கிறது.
அது ராஜஸ்தானிலிருந்து சென்னைக்குக் குடியேறிய குடும்பம், கணவர் சென்னை சவுகார் பேட்டையில் கண்டெய்னர் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள், 7 வயதில் ஒரு மகன் உள்ளனர். பொருளாதாரச் சிக்கல் இல்லை. ஆனால் வாழ்க் கையில்  மட்டும் மகிழ்ச்சி இல்லை; அமைதி தவழ வேண்டிய குடும்பத்தில் நாள்தோறும் அமளி! அமளி!! காரணம் என்ன தெரியுமா? கணவன் மெகாக் குடியர். நாள்தோறும் வீட்டில் சண்டை சச்சரவுதான். மனைவி எல்லா வழிகளிலும் தம் கணவனைத் திருத்தப் பார்த் தார் மன்றாடிப் பார்த்தார் - கடைசியில் தோல்விதான்.
சரி, இன்னும் எத்தனை காலத்திற்கு ஒவ்வொரு நாளும் சண்டைக் கோழிகளாக வாழ்வது! பேதை நெஞ்சம் படபடத்தது ஒரே வழி தற்கொலைதான்? தான் மட்டுமல்ல; தன் இரு பிள்ளைகளையும் சேர்த்துதான்; தான் மட்டும் மறைந்து போனால், பிள்ளைகள் வாழ்வு - இந்தக் குடிகார மனிதனிடம் என்ன பாடுபடுமோ என்ற அச்சம், அந்தத் தாயைப் பிடித்து உலுக்கியது.
ஒரு முடிவுக்கு வந்தார்; இரு பிள்ளைகளுக்கும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை மனதைக் கல்லாக்கிக் கொண்டு கொடுத்து முடித்து விட்டார். தாய் என்ன செய்தார்? தனது மணிக்கட்டில் உள்ள கை நரம்புகளை அறுத்துக் கொண்டு மயங்கி விழுந்தார். அதன் மூலம் தனக்கு மரணம் சம்பவிக்கும் என்று எண்ணினார். தக்க சமயத்தில் வந்த அப் பெண்ணின் சகோதரி, உயிருக்குப் போராடியவரை மருத்துவமனையில சேர்த்து உயிரைக் காப்பாற்றி விட்டார்.
மதுவால் ஒரு குடும்பம் இப்பொழுது உருக்குலைந்து விடடது. இரண்டு பிள்ளைகளையும் தூக்க மாத்திரைக் கொடுத்துக் கொன்று விட்ட அந்தத் தாய் எப்படி நிம்மதியாக உயிரோடு வாழ முடியும்? - ஒவ்வொரு நொடியும் மரண பயங்கரமாகத்தானே கழியும்? நடைப் பிணமாக அல்லவா காலத்தைக் கடத்த வேண்டும்!
இவ்வளவுக்கும் காரணம் என்ன? குடிப் பழக்கம் தானே அந்தக் குடியை அழித்து விட்டது!
இது ஒரு குடும்ப நிகழ்ச்சி மட்டுமல்ல; பெரும் பாலான குடும்பங்களில் இந்த நிலைதான்; குடி குடியை அழித்துக் கொண்டுதான் இருக்கிறது. குடித்து விட்டு குடும்பத்தின் அமைதியை அழிக்கும் சூழலில் பிள்ளை களின் மனநிலை எப்படி இருக்கும்? பெரும் பாதிப்புக்கு ஆளாக மாட்டார்களா?  கல்வியில்தான் கவனம் செலுத்த முடியுமா? இதன் பொருள் என்ன? அடுத்த தலைமுறைக்கும் இந்தக் குடி என்னும் தீ பற்ற வைக்கப்படுகிறது என்றுதானே பொருள்?
இதுபற்றி தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் கட்சி உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு எடுத்துக் கூறியும், பல வடிவங்களிலும் போராட்டங்கள் நடத்திக் காட்டியும் தான் பிடித்த முயலுக்கு மூன்று  கால் என்
ற முரட்டுத்தனத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுவது கண்டனத்துக்கு உரியது.
டாஸ்மாக்கில் கிடைக்கும் 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வருமானம் அரசுக்குக் கிட்டாமல் போய் விடுமே என்பதுதான் அரசின் கவலையாக இருக்கிறதே தவிர, கோடானு கோடி குடும்பங்கள் சீரழிகின்றனவே என்ற கவலை அரசுக்குக் கிஞ்சிற்றும் இல்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா?
மது விலக்கைக் கொண்டு வராததற்குத் தமிழ்நாடு அரசின் அமைச்சர் சட்டப் பேரவையில் சொன்ன காரணங்கள் அசல் சிறுபிள்ளைத்தனமானவை.
மது விலக்கை அமல்படுத்தினால் நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி ஓடுமாம். இப்படி ஓர் அமைச்சர் சொல்லுவதற்கு வெட்கப்பட வேண்டாமா? காவல்துறை என்ற ஒன்று எதற்கு அரசிடம் இருக்கிறது? அதிலும் மது விலக்கு தொடர்பாகக் காவல்துறை தனிப்பிரிவே இருக்கிறதே! இந்தத் துறையைச் சரியாக நிருவகித்தால் கள்ளச் சாராயத்தை அறவே ஒழித்து விட முடியாதா?
பெரும்பாலும் கள்ளச்சாராயம் என்பது காவல் துறையின் ஒத்துழைப்போடுதான் நடந்து கொண்டு இருக்கிறது என்பது பரவலாகப் பொது மக்கள் மத்தியில் நிலவும் கருத்தாகும். அவர்கள் அன்றாடம் ஊர்ப் புறத்தில் நேரடியாகப் பார்க்கும்  காட்சிதானே இது?
மாதத்திற்கு ஒரு முறை பெயரளவுக்கு விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்மீது வழக்குப் போடுவார்கள். அவ்வளவுதான். கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் - காவல்துறைக்கும் இடையே இருக்கும் எழுதப்படாத ஒப்பந்தத்தின்மீது கை வைத்தாலே போதும் - ஒரே நொடியில் கள்ளச்சாராயம் இருந்த இடம் தெரியா மலேயே மண் மூடிப் போகுமே.
எனவே தமிழக அரசு சாக்குப் போக்குகளைப் பொருத்தம் இல்லாமல் கூறி தன்னிலையை இழந்து விடவேண்டாம்.
பண வருவாயைவிட மக்களின் அமைதி வாழ்வு தான் அவசியம். அதுவும் பெண்ணொருவர் முதல் அமைச்சராக இருக்கும் தமிழ்நாட்டில் குடியால் பெண்கள் அனுபவிக்கும் கொடுமையிலிருந்து அவர் களை மீட்க வேண்டாமா? எங்கே பார்ப்போம்!

0 comments: