Total Pageviews

Monday, October 12, 2015

மன நலம் - மன வளம் - முக்கியம்! (2)மனவளம் என்பது பொருள் வளத்தைவிட மேலானது; தேவை யானது - அடிப்படையானது.
நம் உடலின் மூளை என்ற கருவியே இதன் மூலமாகும்.
சிலர் இல்லாதவைகளையும் கற்பனைகளையும் காட்டி மக்களை இன்றும் குழப்பிக் கொண்டுள்ளனர்!
சிந்தனை எப்படி எதன் மூலம் சிறகடித்துப் பறக்க முடிகிறது? மூளை யின் பலத்தாலும், பழுதுபடாத செயலி லும்தானே!
மனநலம் குன்றியவர்கள், மனநலம் பாதித்தவர் என்பது எதைப் பொறுத்துக் கூறப்படுகிறது? எதனை அடிப்படையாகக் கொண்டு மனநல மருத்துவர்கள் மருத்துவம் செய்ய முனைகின்றனர்?
மூளை! மூளை!! மூளை!!!
மூளையின் முடங்காத பணி, முற்றாகி விடாது மூளை நன்கு உள்ளவரை; இது மருத்துவ இயல்.
மூளைச்சாவு (Brain Death)என்ற ஒன்றுபற்றி இப்போது அடிக்கடி ஏடுகளில் வருகின்றதே, அதன்படி மற்ற உடல் உறுப்புகளையெல்லாம் பயன்படுத்த உடல் உறுப்புக் கொடை தரும் மனிதநேயர்கள் பலர் வரலாறு படைக்க எது அடிப்படை?
அத்தகைய மூளையை வளப் படுத்தி, பலப்படுத்திட வேண்டும்; விண்வெளி ஆய்வு போலவே மூளை ஆய்வும் - அது பயன்படும் முறையும், அதன் பரப்பில் எவ்வளவு சிந்தனை யால் உழுது பயன் விளைவிக்கப்பட்ட பகுதி; எஞ்சிய பரப்பும் அதன் எதிர் காலமும் எப்படி அமையும் என்பதை மூளை ஆராய்ச்சி அறிவியலாளர்; மனோ தத்துவ நிபுணர்கள் மருத்துவர்களின் ஆய்வு ஓர் தொடர் கதை;  அது முடிந்து விட்ட சிறுகதை அல்ல!
மூளை சிறந்த முறையில், நல்ல வழியில் நேர்கோட்டில் செல்லும்போது, மிகு பயன் உருவாகிறது!
அதே மூளை சிந்தனை ஆக்கபூர்வ மற்று, தீய வழியில், வெறும் உணர்ச்சி களுக்கு அடிமைப்பட்டு, தனது அறிவுப் பாதைப் பயணத்தை மாற்றிக் கொள்ளும் போது, அது தற்காலிக மகிழ்ச்சியையும், நிரந்தரத் தோல்வியையும் நமக்குப் பரிசாக வழங்குகிறது!
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது இலக்குக்காக மட்டும் வள்ளுவர் கூறியது என்பதை விட, அது நம் மூளைக்குச் செலுத்தும் நல்ல நல வாழ் வுக்கான பாதுகாப்பும்கூட என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்மறை எண்ணங்கள் இதன் மூலம் விரட்டியடிக்கப்படுகிறது!
வாழ்க்கையின் வெற்றி - தோல்வி, இன்ப - துன்பம் எல்லாம் இதன் விளை வாகவே முகிழ்த்துக் கிளம்புகின்றன! முத்தெடுக்க மூழ்குவோர் முழுக் கடலின் அடியிலே சென்று விட்டதாக முடிவு செய்து விட முடியுமா?
ஆழ் கடல் - கீழ் கடல் எல்லாம் தொட்டுத் துருவி விட்டுத் திரும்பி விட் டார் என்று அறுதியிட்டுக் கூற முடியுமா?
எனவே மனவேகம் போலவே, மன ஆழமும் எளிதில் அளந்து கூற இயலாத ஒன்று. இன்றுவரை (நாளை என்னவோ! அறிவியல் நுழையாத பகுதிதான் அனைத்து அண்டங்களிலும் ஏது)
புறந்தூய்மை நீரான், அமையும் அகந் தூய்மை
வாய்மையால் காணப் படும்               - குறள் 298
இதன் பொருள்: ஒருவனின் உடம்பு தூய்மையாக ஆதல் என்பது, தண்ணீரால் ஏற்படும். அவனது உள்ளம் தூய்மையாக ஆதல் என்பது, அவன் வெளிப்படுத்தும் உண்மையால் உணரப்படும்.
ஏன் நமக்குக் குளியல் தேவைப் படுகிறது? குளிப்பது என்பது சடங்கா? சம்பிரதாயமா? நிச்சயம் இல்லை. அழுக் கினைப் போக்கி உடலைக் கழுவிய வுடன் நமக்கொரு புத்துணர்ச்சி, புது மகிழ்ச்சி உண்டாகிறதே!
அதுபோல ஏற்கெனவே அழுக் காறு, அளவுமீறிய ஆசை, குறுக்கு வழிகளில் பொருளையும் புகழையும், பதவிகளையும் ஈட்டிட முயற்சி, எல்லையற்ற சுயநலம் - இவைகளால் அழுக்கேறிய மனத்தை தூய்மைப் படுத்துதல் எதன் மூலம்?
வாய்மை மூலம்!
வாய்மை என்பது வெறும் உண்மை மட்டுமல்ல. சிற்சில தேவைப்படும் நிலைமைகளில் பொய்மையும் கூட இணைந்தாலும், பொன்னகை  செய்ய சேர்க்கப்பட்ட மற்ற தங்கத்தைவிட மாற்றுக் குறைவான உலோகங்களின் சரி நிகர் கலவைபோல - ஒளி வீசப் பயன்படும்.
ஆனால், அதைவிட முக்கியம் - தம் நெஞ்சம் அறிந்த உண்மைகளை - சுயநலம் கருதி - மாற்றிக் கூறும் பொய் ஒருபோதும் - மன அழுக்கினைப் போக்காது என்கிறார் வள்ளுவர்!
பகுத்தறிவுவாதிகள் விளைவுகளை ஏற்கத் தயங்காத வீரர்கள். எனவே அவர்கள் அகராதியில் வாய்மை எனப்படுவது அறிவு நாணயம் தான்.
தன் நெஞ்சு அறிவதை  ஒளிவு மறைவு இன்றி ஒப்புக் கொண்டு சொல்லல். வரும் அல்லல் கருதி மறைத்துப் பிழைக்கத் தெரியாதவர்கள் அவர்கள்.
(மேலும் சில செய்திகள் நாளை)

0 comments: