Friday, October 2, 2015

இடஒதுக்கீட்டை யாராலும் ஒழிக்க முடியாது!

இடஒதுக்கீட்டை யாராலும் ஒழிக்க முடியாது!
உடுமலைப்பேட்டை வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் உரை வீச்சு
உடுமலை, அக்.2_ இடஒதுக்கீட்டை யாராலும் ஒழிக்கமுடியாது என்று உடுமலைப்பேட்டை வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் உரை வீச்சு நிகழ்த் தினார்.
வட்டார மாநாடு
அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் _ திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாடு 30.9.2015 அன்று மாலை 6 மணியளவில் உடுமலைப்பேட்டை வெங்கிட கிருஷ்ணா சாலையில் உடுமலை நகர, ஒன்றிய திராவி டர் கழகம் சார்பில் சிறப்போடு தொடங்கி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் கழக மாவட்ட தலைவர் க.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். கோவை மண்டல செயலாளர் வழக் குரைஞர் நா.சக்திவேல், மாவட்ட அமைப்பாளர் கி.மயில்சாமி, மாவட்ட ப.க.தலைவர் ச.ஆறுமுகம், நகர தலைவர் போடிபட்டி, காஞ்சி மலையான், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் நா.மாயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழர் தலைவர் உரை
மாநாட்டில் சிறப்பாக பங்கேற்று உரையாற்றிய திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்கள் உரை வீச்சு நிகழ்த்தியதாவது;
மிகக்குறுகிய காலத்தில் வெகு சிறப்போடு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிற தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாள் பிரச்சாரத்திருவிழாவிற்கு திரளாக வருகை புரிந்திருக்கின்ற அனைவருக்கும் அன்பான வணக்கம்!
மத்திய - மாநில அரசின் போக்கு
மழை வந்து சென்றது. மழை வருவது இந்த நேரத்தில் பாராட்டப் படவேண்டிய விஷயம் டெல்டா மாவட்டத்தில் விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை. கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கிறது. தமிழக முதல்வர் அவர்கள் கடிதம் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.
காவிரி பிரச்சினையில் தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக செயல்பட்டு வரும் கர்நாடகத்தை கண்டிக் காமல் மத்திய அரசு கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறது.
மரமும், மழையும்
மழைவேண்டி வருணஜெபம் செய்கிறார்கள்! ஆனால், மழை வருவதில்லை! கடவுள் இல்லை என்று சொல்கிற நாங்கள் வரும்போது மழை பெய்கிறது! எங்களுக்கு இதுவே சிறந்த பகுத்தறிவுப் பிரச்சார மாகும். மழை வேண்டி யாகம் நடத்த மரத்தை வெட்டி நெருப்பில் போடுகிறார்கள்.
காடுகளை அழித் தால் மழையும் பெய்யாது! மிருகங்களும் ஊருக்குள் வரும்! இடஒதுக்கீடு அதுக்கும் சரியாக இருந்தால் அது சரியாகி விடும்!
பெரியாருக்கு விழா ஏன்?
தந்தை பெரியார் பிறந்த நாளை கொண்டாடு கிறோம். எதற்காக? சடங்கிற்காகவா? சம்பிரதாயத் திற்காகவா? இல்லை இது ஒரு நன்றி திருவிழா! இனத் தால் திராவிடர்களாகவும், மொழியால் தமிழர் களாகவும் உள்ள மக்களே ஒன்றை எண்ணிப் பாருங் கள், 100 ஆண்டுகளுக்கு முன் எப்படிப்பட்ட நிலை? இப்போது திரும்புகிற பக்கம் எல்லாம் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவர்கள், இந்த நிலை எப்படி வந்தது?
இதை அருள் கூர்ந்து நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தந்தை பெரியாரின் ஒப்பற்ற, தன்னலமற்ற, புகழ் தேடாத தொண்டாலும், இனமானத்துக்காக தன் மானம் போனாலும் பரவா யில்லை என்று கருதியதால் தான் இப்படி பட்ட நிலை வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் தந்தை பெரியாரை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.
இடஒதுக்கீடு
பெரியார் இல்லை என்றால் இடஒதுக்கீடு இல்லை என்று காந்தி அவர்களின் பேரன் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கூறியுள்ளது. இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தியாகும். வேட்டிகட்டுவதே பெரியாரின் தொண்டால் கிடைத்த உரிமையாகும். திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்கிறார்கள்!
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை அவர் கள் சிந்திக்க வேண்டும். இடஒதுக்கீடு யாரால் கிடைத் தது என்பதையும் திராவிடத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க வேண்டும்! ஆர்.எஸ்.எஸ்.சங்பரிவாரின் கொள்கை என்ன?
வருணாசிரமத்தைப் பாதுகாப்பது, சமூகநீதியை ஒழிப்பது என்பது தான்! ஆனால் தந்தை பெரியாரின் சமூகநீதி தத்துவமான இடஒதுக்கீட்டை யாராலும் ஒழித்துவிட முடியாது! எந்த கொம்பனும் கை வைக்க முடியாத அளவுக்கு அரசியல் அமைப்புச் சட்ட அட்டவணை 9 இல் பாதுகாப்பாக இருக்கிறது.
இது திராவிடர் கழகத்தாலும், இன்றைய ஆளும் கட்சி யாலும் ஏற்பட்டதாகும். இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழித்தது திராவிடர் கழகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த வருமான வரம்பு ஆணையை ஒழித்தது திராவிடர் கழகம்! சமூக நீதியை ஒழித்துவிடலாம் என்று ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி வகை யறாக்கள் நினைத்தால் அது நடக்காது! எதிரிகளை அடையாளம் காட்டும் கலங்கரை விளக்கமாக இருப்பது திராவிடர் கழகம்!
இளைஞர்களே! திராவிடர் கழகத்தை நோக்கி வாருங்கள்! லட்சியத்திற்காக எந்த விலையையும் கொடுக்க அனைவரும் தயாராகுவோம்! மழை தோற்றது நாம் வென்றோம்! நன்றி! வணக்கம்! இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
தொடக்கவுரை
தமிழர் தலைவர் உரைக்கு முன்பாக தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் புலியகுளம் க.வீரமணி அவர்கள் பெரியார் ஏன் கடவுள் இல்லை என்றார்? மதம், ஜாதி, மூடப்பழக்க வழக்கங்கள் ஏன் ஒழிக்கப் படவேண்டும் என்றார்? என்று ஆதாரத்தோடு விளக்கியும் புராணம், கடவுள் லீலை, பார்ப்பன சூழ்ச்சி ஆகியவற்றை தோலுரித்து காட்டியும், கிரிக் கெட் மற்றும் திரைப்படங்களினால் ஏற்படும் கெடுதியையும் இளைஞர்கள், மாணவர்கள் புரிந்து கொள்ளும்
வகையில் சிறப்போடு உரையாற்றி மாநாட் டின் தொடக்கவுரையை நிறைவு செய்தார்.
மந்திரமா! தந்திரமா!
ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு - மாநாட்டில் கழக நூல்கள் விற்பனை
மாநாட்டில் மந்திரமா? தந்திரமா? எனும் பகுத் தறிவு நிகழ்ச்சியை திராவிடர் கழகத்தின் ஊழியர் ஈட்டி கணேசன் அவர்கள் மாணவர்களை மேடைக்கு அழைத்து மந்திரவாதிகளின் பித்தலாட்டங்கள், பில்லி, சூனியம், மை தடவுதல், லிங்கம் கக்குதல், திருநீறு தருதல் ஆகியவை அனைத்தும் தந்திரமே! என்பதை செய்து காட்டியதோடு ஜாதகம், ஜோதிடம் என்பதும் பித்தலாட்டமே என்பதை வெகு மக்களிடையே எடுத்துக்கூறி பகுத்தறிவு பாய்ச்சினார்.
கலந்துகொண்டோர்
கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் பொதுக்குழு உறுப்பினர் நா.சாமிநாதன், உடுமலை ஒன்றிய தலைவர் ச.பெரியார் பித்தன், செயலாளர் திருமுருகன், மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் ந.ஜெயப்பிரகாசு, செயலாளர் பழ.நாகராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் ம.பரிதிஇளம்வழுதி, உடுமலை நகர இளைஞரணி தலைவர் ஜெ.பெஞ்சமின் கிரு பாகரன், காங்கேயம் நகர தலைவர் முத்து முருகேசன்,
உடுமலை முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.வேலுச் சாமி (திமுக), திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சார்ந்த மாவட்ட தலைவர் சு.தண்டபாணி, திக சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பாண்டியன், திருப்பூர் மாவட்ட ப.க. தலைவர் கோபி.வெ.குமார ராசா, கோவை மாவட்ட செய லாளர் ம.சந்திரசேகர், கோவை மாநகரத் தலைவர் சிற்றரசு, பொதுக்குழு உறுப்பினர் பொள்ளாச்சி தி.பரமசிவம், ஆனந்தசாமி,
இமயவரம்பன், பழனி இரணியன், கன்னிமுத்து, கோவை மண்டல இளைஞரணி செயலாளர் மணிகண்டன், மாணவரணி செயலாளர் பிரபாகரன், துங்காவி வெங்கடாஜலம், திருப்பூர் மாவட்ட திமுக வழக்கறிஞரணி அமைப் பாளர் க.செல்வராஜ், திராவிட இயக்க தமிழர் பேரவை மேற்கு மண்டல செயலாளர் வே.இளங் கோவன், தென்றல் சேகர், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் க.தங்கவேல்,
சிந்தனையாளர் பேரவையைச் சார்ந்த ஆ.நடராசன், தாராபுரம் ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம், மாரிமுத்து, முனிஸ்வரன் உள்ளிட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திமுக, திராவிட இயக்க தமிழர் பேரவை, தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் முற்போக்கு சக்திகள், வெகுமக்கள் பெருந்திரளாக அடாத மழையிலும் விடாது பங்கேற்றுச் சிறப்பித்தனர். நன்றி யுரையை நகர செயலாளர் அ.ப.நடராசன் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...