நீதிபதிகள் நியமனம் பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு
தேசிய நீதிபதிகள் கமிஷனில் அரசியல் குறுக்கீடுகளுக்கு அதிக வாய்ப்புள்ளதால்
இன்றைய சூழலில் கொலிஜியம் முறையே வரவேற்கத்தக்கது
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய நீதிபதிகள் கமிஷனில் அரசியல் குறுக்கீடுகளுக்கு அதிக வாய்ப்பு இருப்பதால் இப்பொழுதுள்ள கொலிஜியம் முறையே சிறந்தது என்றும், இதில் சில அய்யப்பாடுகள் குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
16.10.2015 அன்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு - அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது; அதன்பிறகு 20 மாநில சட்டமன்றங்களால் ஆதரவு தெரிவிக்கப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமனக் கமிஷன் நியமனம் இந்திய அரசியல் சட்டத்தின் 99ஆவது அரசியல் சட்டத் திருத்தப்படி செல்லாது என்று தீர்ப்பில் கூறப்பட்டு விட்டது.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் - கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையிலிருந்த - கொலிஜியம் முறையே சரியானது; நீதித் துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் தன்மையது; புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமனக் கமிஷனில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற மூத்த இரண்டு நீதிபதிகள், மத்திய சட்டத்துறை அமைச்சர், இரண்டு பிரபல உறுப்பினர்கள் ஆக ஆறு பேர்கள் இருப்பார்கள். இவர்கள் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவர்.
அந்த இரண்டு பிரபல உறுப்பினர்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும்; அக்குழுவில் பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவர் இருப்பர். இம்மூவரும் தேர்வு செய்வர்; இந்த பிரபலங்களுக்கு - உறுப்பினர்கள் தேர்வு பெரிதும் அரசியல் சார்புள்ளதாக இருக்க வாய்ப்பு ஏற்படலாம்.
அதனால் நீதித்துறையின் சுதந்திரம் - அரசியல் குறுக்கீடு - அரசியலில் அவர்களது பரிந்துரைகளில் நீதிபதி யானவர்கள், திரும்ப சில வாய்ப்பில் அவர்களுக்கு உதவிட வேண்டிய எழுதப்படாத நிர்ப்பந்தம் - திருப்பி நன்றி செலுத்த வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படலாம் என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு கூறுகிறது!
இது மத்திய அரசுக்கு - மோடி அரசுக்குப் பின்னடைவு ஆகும். என்றாலும் - உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாம் வரவேற்க வேண்டிய நிலையே இருக்கிறது!
நீதித்துறைக்கு எவ்வித ஊனமும் ஏற்பட்டு விடக் கூடாது
நீதித்துறை என்பது ஜனநாயகத்தின் மூன்றாம் முக்கிய அங்கம் - மூன்றாம் தூண் சுதந்திரமான நீதித்துறைதான் மக்களின் ஒரே கடைசி நம்பிக்கையாகும். அதற்கு எவ்வித ஊனமும் ஏற்பட்டு விடக் கூடாது.
மாநில உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளை நிரப்புவதில் தலைமை நீதிபதி மற்ற இரு மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்து, உச்சநீதிமன்றத்திற்கு அனுப்புவது, அது போலவே, உச்சநீதிமன்றத்தில் காலியான பதவிகளை நிரப்ப 5 மூத்த நீதிபதிகள் தலைமை நீதிபதி உட்பட கொலிஜியம் அமைப்பின் மூலம் பரிந்துரைக்கப் பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நியமனம் ஆகும் முறை இருக்கிறது!
நீதித்துறை சுதந்தரமாக இயங்க இந்த முறையே சிறந்தது என்று இந்த 5 பேர் அடங்கிய அரசியல் சட்ட சாசன அமர்வு தெளிவாக எழுதி விட்டது.
அதில் ஜஸ்டீஸ் சலமேசுவர் அவர்கள் மாறுபட்டாலும் - கொலிஜியத்தில் உள்ள வெளிப்படையற்ற தன்மை பற்றியும் 99ஆவது அரசியல் சட்டத்திருத்தம் - செல்லுபடி பற்றியும் வேறு கருத்துக் கூறினாலும், அடிப்படை மெஜாரிட்டி நீதிபதிகளோடு இறுதியில் ஒத்துப் போயுள்ளார். கொலிஜியம் என்ற முறையில், மூன்று உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்கின்றனர் என்றாலும் - நடைமுறையில் 2 முக்கிய குறைபாடுகள் அதில் உள்ளன.
சமூகநீதியைப் பின்பற்றக் கூடியவராகவோ இருப்பதில்லை
சமூகநீதியைப் பின்பற்றக் கூடியவராகவோ இருப்பதில்லை
1) உயர்நீதிமன்றங்களில் வெளி மாநிலத்திலிருந்து வந்து நீதி பரிபாலனம் செய்யும் தலைமை நீதிபதி அந்த மாநிலத் தின் வழக்குரைஞர் மற்றும் மாவட்ட நீதிபதிகள்பற்றி போதிய தகவல் அறிந்தவராகவோ, சமூகநீதியைப் பின்பற்றக்கூடியவராகவோ இருப்பதில்லை.
சீனியாரிட்டி அடிப்படையில், வந்துள்ள அடுத்த இரண்டு மூத்த நீதிபதிகளும்கூட அம்மாநிலத்தவர் அல்லாதவராகவே அமைந்துவிடும் அபாயமும் உண்டு. நடைமுறையில் இதை நாம் பார்க்கும்போது அனைவர்க் கும் அனைத்தும் என்ற சமூகநீதியோ, சரியான புரிதலுடன் கூடிய பரிந்துரையோ இல்லாமல் சென்று விடுகிறது!
இதனால் மாநிலங்களில் சமூக நீதி போராட்டங்கள் வெடித்துக் கிளம்புவது தவிர்க்க இயலாததாகிறது.
2). வெளிப்படைத் தன்மை இல்லாத நிலை. இவ்விரண்டு குறைபாடுகளும்; நீக்கப்பட்டால் கொலிஜியம் முறையில் தேர்வு செய்யப்படுவது வரவேற்கத்தக்கதே!
பல துறைகள் காவிமயமாக்கிக் கொண்டு வருகின்ற சூழ்நிலை
பல துறைகளையும் தற்போதுள்ள பா.ஜ.க. தலைமையில் உள்ள அரசு காவிமயமாக்கிக் கொண்டு வருகின்ற சூழ்நிலையில், நீதிபதிகள் நியமனக் கமிஷன் மூலம் நியமிக்கப்படுபவர்கள் பெரிதும் அப்படிப்பட்டவர்களே வரக் கூடும் என்ற அச்சம் ஆதாரமற்றது அல்ல; அதுதான் யதார்த்தமான நிலையாகும்.
தற்போது ஏராளமான நீதிபதி இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. அவர்களில் இளையர்களாக உள்ள வர்கள் எதிர் காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகும் வாய்ப்பும் உண்டு. அவர்கள் முத்திரை குத்தப்பட்டவர் களானால் - அதன் விளைவு என்னவாகும்? நமது ஜனநாயகத்தில்கூட குறைகள் இல்லாமலா இருக்கின்றது? உண்டு என்றாலும், சர்வாதிகாரமா? பாசிசமா? ஜனநாயகமா? என்பதில், நாம் ஆயிரம் குறை என்றாலும் ஜனநாயகத்தில் தானே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்?
அதுபோலத்தான் கொலிஜியம் என்ற முறையிலும் குறைகள் உண்டு; என்றாலும் நாம் சுட்டிக்காட்டிய குறை களை நிவர்த்தி செய்து நியமனங்கள் நடைபெற்றால், நீதித் துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட, பலப்பட வாய்ப்பு அதிகம். நமது அரசியல் சட்ட கர்த்தாக்களின் நோக்கம், அரசின் இரண்டு அங்கங்கள் - தண்டவாளத்திலிருந்து கீழே இறங்காமல் பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் நீதித் துறையுடையது என்பது தான். ஆகவே இந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பை, திராவிடர் கழகம் - இப்போதைய சூழ் நிலையில் - வரவேற்கவே செய்கிறது.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை18-10-2015
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை18-10-2015
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மதவாதக் கொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்து விட்டன - அமெரிக்கா கவலை
- மாட்டிறைச்சி சாப்பிடும் முஸ்லிம்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள்! - அரியானா முதல் அமைச்சர் (பிஜேபி)
- தவறு நடக்கும்போது அதனைக் கண்டிக்க பிரதமர் முன்வர வேண்டாமா? பொறுப்பைத் தட்டிக் கழிப்பது பிரதமருக்கு அழகல்ல
- நீதித் துறைக்கே காவல்துறைமீது நம்பிக்கை இல்லையெனில் சாதாரண குடிமக்களுக்குப் பாதுகாப்பு எங்கே?
- மோடிமீது பன்னாட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு : தென் ஆப்பிரிக்க அரசு தொடுத்தது
No comments:
Post a Comment