Total Pageviews

Tuesday, October 6, 2015

இடஒதுக்கீட்டு ஆய்வுக்கு இப்போது என்ன கட்டாயம்? தினமணி 26.9.2015 கட்டுரைக்கு மறுப்பு

இடஒதுக்கீட்டு ஆய்வுக்கு இப்போது என்ன கட்டாயம்?

தினமணி 26.9.2015 கட்டுரைக்கு மறுப்பு

- மஞ்சை வசந்தன்

தாலி பற்றி தவறான செய்திகளை ஊகங்களின் அடிப்படையில் உளறிக் கொட்டிய (தினமணியில்) அதே பத்மன் இப்போது இடஒதுக்கீடு பற்றி எழுதியுள்ளார்.
பத்மன் கட்டுரையைப் பதிப்பிக் கும் தினமணி, நான் மறுப்பு எழு தினால் மறைத்துவிடுவது வாடிக்கை. நடுநிலையாளர் போலும், நியாய வான்கள் போலும் பேசுவதாக, எழுதுவதாகக் காட்டிக் கொண்டு, தங்கள் உள்ளத்து வேட்கைகளை எப்படியாவது அடைய வேண்டும் என்ற உள்நோக்க உந்துதலிலேதான் பத்மன்கள் எழுத்துக்களும், திணமணி யின் பதிப்பும் இருக்கும்.
இதையெல்லாம் புரிந்து கொள்ள கூர்ந்து நோக்கலும் பொருள்புலமை யும் வேண்டும். அரைகுறையாக அறிந்து அதிமேதாவிகளாக எழுத முயல்வதும், உள்நோக்கத்தோடு ஒரு சார்பாய் ஒரு பிரச்சினையை அணுகு வதும் ஆதிக்கவாதிகளின் இயல்பு என்பது அப்போது விளங்கும். எனவே பத்மன் ஏதோ பரந்த நோக்கில் உயர்ந்த உள்ளத்தோடு எளிய மக் களின் ஏற்றம் சார்ந்து எழுதிவிட்டார் என்று எண்ணினால் நீங்கள் ஏமாந்து போனீர்கள் என்று பொருள். எனவே, இவரது கருத்துக்கள் சரியா என்பதை இனி ஆய்வோம்!
உயிர் காக்கும் மருந்துகளே மறு ஆய்வுக்குட்படுத்தப்படும்போது இடஒதுக்கீட்டை ஆய்வுக்கு உட்படுத்தக் கூடாதா?
இடஒதுக்கீட்டின் பயன் உரியவர்க் குக் கிடைக்காமல் யார்யாரோ கேட் கும் சூழலில் இதை ஆய்வுக்குட்படுத் துவதானே சரியாகும்.
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினரில் பெரும்பா லோர் சமூக பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கிறார்கள். அவர் களுக்கு இடஒதுக்கீட்டுச் சலுகை வேண்டும் என்பது நியாயம் தான். அதே நியாயம் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் முதல் தலை முறை பட்டப்படிப்பில் நுழையும் உயர்சாதியினருக்கும் பொருந்தாதா?
தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப் பினருக்கான இடஒதுக்கீட்டுப்பயனை அப்பிரிவுகளில் உள்ள முன்னேறிய வர்களே அனுபவிக்கிறார்கள்!
படேல் போன்ற உயர்நிலை சாதியினரும் இடஒதுக்கீடு கேட்கத் தொடங்கியுள்ளதால் ஆய்வு அவசியம்.
மத்திய அரசு மறு ஆய்வு செய் யாமல், இடஒதுக்கீட்டு ஆதரவாளர் களுக்கு அஞ்சி விலகி ஓடுவது வாக்கு நோக்கு உடையதாகும்!
என்பவையே இந்த நியாயவான் எழுப்பும் நியாயக்குரல்! இவை எந்த அளவிற்கு சரி? அல்லது எந்த அளவிற்கு உள்நோக்கம் உடையது? என்பதை இனி பார்ப்போம்.
இடஒதுக்கீடும் சாதியென்னும் நோய் ஒழிப்பு மருந்து என்பதால் மற்ற மருந்து களுக்கான மறு ஆய்வு போல இதற்கும் மறு ஆய்வு வேண்டுவது சரி தானே?
இது பத்மனின் முதல் கேள்வி
மறு ஆய்வு என்பது எதற்கு மேற் கொள்ளப்பட்டாலும் அதன் நோக்கு எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்தே அது தேவையா? சரியா என்பதை முடிவு செய்ய முடியும். ஒரு கம்பெனியின் நிர்வாகத்தை ஆய்வகத்தை ஆய்வு செய்வது அதிலுள்ள குறைகளைக் கண்டறிந்து அகற்றுவதற்கு. ஒரு மருந்தை ஆய்வுக்கு உட்படுத்துவது அதனுடைய பயன் எப்படிப்பட்டது, விளைவு எப்படிப் பட்டது என்பதை அறிந்து அதை அப்படியே தொடரலாமா? அல்லது அதை மாற்றி, மேம்படுத்தி, சரிசெய்து தயாரிக்க வேண்டுமா? என்பதற்குத்தான்.
ஆனால், இடஒதுக்கீட்டை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்கின்றவர்களின் கோரிக்கை அதிலுள்ள குறைகளைச் சரி செய்ய அல்ல, அது இன்னும் தேவையா? அதையே ஏன் கைவிடக்கூடாது? என்பதற்கு.
இடஒதுக்கீடு தேவை, அது ஒரு மருந்து என்பதை இவர்கள் உண்மையில் ஏற்றுக் கொள்வதாயின் அதைத் தனியார் துறை யிலும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் வைத்துப் போராடி அதை அடைந்தப்பின் அதி லுள்ள குறைகளைக் களைய முற்படு வார்களானால் அவர்களோடு சேர்ந்து கைகொடுக்க நாமும் தயார். ஆனால் அதைப் பற்றி வாய்திறக்காமல், இருக்கின்ற இடஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துக் கட்ட இதன் அடிப்படையைத் தகர்க்க பொருளாதார அளவுகோலைப் புகுத்த இவர்கள் செய்கின்ற சதியின் ஓர் அங்கம் தானே இந்த ஆய்வுக்குட்படுத்து என்ற முழக்கம்! உண்மையிலே இடஒதுக்கீட்டின் நியாயத்தை இவர்கள் உணர்ந்தவர்கள் என்றால் தனியார் துறையில் இடஒதுக் கீட்டை வற்புறுத்தி அடைய போராட வருவார்களா?
உள்ளத்தைத் தொட்டு நேர்மையாய் பதில் சொல்ல வேண்டும். அதைச் சொல்ல மாட்டேன் என்றால் வாயைப் பொத்திக் கொண்டு மூலையில் முடங்க வேண்டும்! நியாயவான்போல் பேசவும் எழுதவும் வருவது மோசடிச் செயலாகும்!
இடஒதுக்கீட்டை யார் யாரோ கேட்கிறார்கள்! தற்போது படேல் என்ற மேல்சாதியினர் கேட்கிறார்கள். எனவே இட ஒதுக்கீட்டை ஆய்வு செய்ய வேண்டும். இது இவரது இரண் டாவது கருத்து. இதில் எங்காவது நியாயமோ, நேர் மையோ தர்க்க அடிப்படையோ இருக் கிறதா? சிந்தித்துப் பாருங்கள்!
தகுதியில்லாதவர்கள், உயர்சாதியினர் கேட்கிறார்கள் என்றால் உங்களுக்கு உரியதல்ல இது. நீங்கள் கேட்பது சமூக நீதிக்கு எதிரானது என்று அவர்களிடம் திட்டவட்டமாய், உறுதியாய்ச் சொல்லி விட வேண்டியது தானே! அதைவிட்டு விட்டு இடஒதுக்கீட்டை ஆய்வுக்குட் படுத்து என்பதன் நோக்கம் என்ன?
படேல் சாதியினர் சொல்வது போல எனக்குக்கொடு, இல்லையேல் இடஒதுக் கீட்டை எடு! என்ற கோரிக்கை போல இடஒதுக்கீட்டையே நீக்க வேண்டும் என்ற முயற்சிக்கு இதைச் சாக்காகப் பயன்படுத்தும் சூழ்ச்சிக்குத் தானே ஆய்வு என்பது. இப்போது ஆய்வுக்கு அவசியம் என்ன வந்தது? படேல் பிரிவினர் கேட்பது சரியல்ல என்று சொல்வதற்கு ஆய்வு எதற்கு? பதில் சொல்லுங்கள்!
சமூக ரீதியில் பின் தங்கியவர் களுக்கு இடஒதுக்கீடு நியாயம் என்றால், பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள உயர் சாதியினருக்கும் ஏன் பொருந்தாது? அவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது  என்பது இவரது மூன்றாவது கருத்து.
இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது பாருங்கள்! இதுதான் இவர்கள் நோக்கம். இதற்குத்தான் இவர்கள் நியாயவான்களாகக் காட்டிக் கொண்டு கருத்துக் கூறுகிறார்கள்.
முதலில் இவர் இடஒதுக்கீடு பொருளா தார ரீதியில் நலிந்தவர்களுக்கு என்று கூறும் கருத்தே தவறானது.
இடஒதுக்கீடு சமூகத்திலும், கல்வி யிலும் பின் தங்கியவர்களுக்கே (Socialy and Educationaly Bacward) உரியது. பொருளாதாரம் என்ற அளவு கோல் அரசியல் சாசனத்தில் இல்லை. இல்லாத ஒன்றை இவர்கள் புகுத்த முனைவது இடஒதுக்கீட்டின்  அடிப்படையையே தகர்ப்பதற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
பொருளாதாரம் என்பது நிலையானது அல்ல. ஒரு ஆண்டுக்கு முன் பொருளா தாரத்தில் தாழ்ந்து கிடந்தவன் இன்று உயரலாம். நேற்று உயர்ந்து இருந்தவன் இன்று தாழலாம். எனவே பொருளாதாரம் இடஒதுக்கீட்டின் அளவுகோல் ஆகாது. எம்.ஜி.ஆர். இந்தப் பொருளாதார அளவு கோலைப் பயன்படுத்தி படுதோல்வி யடைந்து அதைத் திருப்பப்பெற்றது வரலாறு. தோற்றுப்போன ஒரு அடிப் படையை மீண்டும் புகுத்த முனைவது சூழ்ச்சியும், வஞ்சகமும் அல்லவா?
இவர் இறுதியாக முன்வைக் கும் வாதம், இடஒதுக்கீட்டுச் சாதியினரில் முன்னேறியவர்களே பலன் பெறுகின்றனர். அதிலுள்ள அடித்தட்டு நலிந்த பிரிவினர் பெறவில்லை என்பது முதலில் இக்கோரிக்கையை வைக்க வேண்டியவர்கள் பாதிக்கப் படக் கூடிய அடித்தட்டுப் பிரிவினர். உயர் சாதியினர் இதுபற்றி பேசுவது அவர்கள் மீதான அக்கறையில் அல்ல. அதை வைத்து பொருளா தாரத்தைப் புகுத்துவதற்கே! ஆடு நனைவதற்கு ஓநாய் அழுவதைப் போன்றது தான் இது.
இடஒதுக்கீட்டுச் சாதியினர் ஒரு தலைமுறைதான் முன்னேறியுள்ளனர். அதற்குள் அதில் புகுந்து குழப்பம் ஏற்படுத்துவது சரியாகாது. முதலில்  ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான நீதி கிடைக்கட்டும். அதன்பின் நலிந்த வர்க்கும் உரியநீதி கிட்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களிலே உயர்ந்த பிரிவு, கீழ் பிரிவு என்பது கிரிமி லேயர் சிந்தாந்தம். இதற்குத்தான் கிராமப்புற மக்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. அதையும் எதிர்த் தவர்கள் இவர்கள் தானே!
இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அவர் களுக்குரிய பாதிப்பை அவர்கள் கோரிக்கை வைத்து பெறுவர். உயர் சாதியினர் அவர்களுக்காக வக் காலத்து போடத் தேவையில்லை.
உண்மையைச் சொல்வதாயின். நடைமுறையில் இடஒதுக்கீட்டில் உயர்ந்த குடும்பத்துப் பிள்ளைகளை விட அடிமட்ட பிள்ளைகளே நன்றா கப்படித்து இடஒதுக்கீட்டைப் பெறு கின்றனர். தள்ளுவண்டி வியாபாரி, மலம் எடுக்கும் குடும்பத்துப்பெண், குடிசையில் வாழும் பிள்ளை, படிக்க வசதியற்ற பிள்ளைகள் மருத்துவப் படிப்பிற்கு இடம் பெறுவது இதை உறுதி செய்கிறது.
மத்திய அரசு மறுஆய்வு செய் யாது என்று பின்வாங்குவது வாக்கு களைப் பெறவே என்று ஒரு குற்றச் சாட்டை இவர் வைத்து கட்டுரையை முடிக்கிறார்.
வாக்குரிமை இருப்பதால் தான் இந்த இடஒதுக்கீடு இன்றும் நிலைத் திருக்கிறது. இல்லையென்றால் எப் போதோ அப்புறப்படுத்தியிருப்பீர்களே!
தினமணிக்கும் பத்மனுக்கும் நாங்கள் சொல்லிக்கொள்வது இது தான். முதலில் உங்கள் நடுநிலையை, நியாயத்தன்மையை அனைத்து சாதி யினரும் அர்ச்சகராவதில் காட்டி விட்டு அப்புறம் நியாயம் பேசுங்கள் நாணயமாய் இருக்கும்!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: