Total Pageviews

Friday, September 25, 2015

திராவிட இயக்கத்தின் பிள்ளை காமராசர்!

- பழ. கருப்பையா
சட்டப்பேரவை உறுப்பினர்
காமராசர் ஒப்பற்ற தலைவர்; தலையாய ஆட்சியாளர்; அறிவு தெளிந்த வயதிலேயே தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்; விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு ஏறத்தாழப் பத்தாண்டுகளைச் சிறையில் கழித்தவர்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காகப் பத்து ஆண்டுகள் நாடாண்டவர்!
"தாய் மகனை மணந்து கொள்ளக் கட்டாயப்படுத்தியபோது, "விடுதலைக்குப் பிறகு பார்க்கலாம்' என்றவர்! ஆனால் அவருடைய வயதைப் போக்கிவிட்டுத்தான் விடுதலை வந்தது!
முறைசார்ந்த பள்ளிக் கல்வியைப் பெற்றவரில்லை; ஆனால் இணையற்ற அறிஞர்களுக்கு இணையாக அரசியல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் அவரை ஏராளமாகப் படிக்க வைத்தது!
அவர் அரசியலில் இணைந்த காலம் எம்மான் காந்தி இந்த நாட்டை வழி நடத்திய காலம்!
தன்னலமின்மை, உண்மை, தூய்மை, தியாகம், தேசியம், எந்த ஒன்றிலும் அறிவு சார்ந்த பார்வை என்னும் இவையே பொது வாழ்வின் அடிப்படை நிலைப்பாடுகள்! இவற்றில் நனைந்து ஊறி வளர்ந்தவர்தான் காமராசர்!
அரசியல் என்றால் "அகப்பட்டுக் கொள்ளாமல் அகப்பட்டதைச் சுருட்டுவது' என்னும் "அரிய அரசியல் தத்துவம்' அறியப்படாத காலம் அது!
சாதிகள் இருந்தன; ஆனால் அவை தலைதூக்கி ஆட முடியவில்லை; அவற்றிற்குப் பொதுவாழ்வில் எந்தப் பங்களிப்பும் இல்லை. மதத்தின் நிலையும் அதுதான்!
தாய் தளைப்பட்டிருக்கிறாள் என்னும் நிலை, "நாம் ஒரு தாய் மக்கள்' என்னும் உணர்வுப் பெருக்கத்திற்குக் காரணமானது!
1907-இல் வெள்ளைக்கார ஆட்சி வங்காளத்தில், இசுலாமியர்கள் மிகுதியும் வாழ்ந்த பகுதியைக் கிழக்கு வங்காளமாகத் தனித்துப் பிரித்தபோது, இசுலாமியர்களும் இந்திய சமயத்தவர்களும் ஒன்றாக இணைந்து, "நாங்கள் இந்தியர்கள்; எங்களைப் பிரிக்க நீ யார்?' என்று கடுமையாகப் போராடியதன் விளைவு, அந்த பிளவு மூடப்பட்டு மீண்டும் ஒரே வங்கமாக்கப்பட்டது. அந்தப் பிரிவினையை உண்டாக்கிய தலைமை ஆளுநர் கர்சான், பாரதியால் "கர்சான் என்னும் குரங்கு' என்று வாயார வசைபாடப் படுகிறார்!
ஆனால் அந்த வங்கப் பிரிவினையோடுதான் இந்திய விடுதலை மலர முடிந்தது என்னும் கால முரண் வேறு கதை!
ஆயினும் வங்கப் பிரிவினை நிகழ்ந்து சீர்செய்யப்பட்ட சிறிது காலத்தில் தமிழ்நாட்டில் "பார்ப்பனரல்லாதார் இயக்கம்' என்றொரு இயக்கம் பிட்டி தியாகராயர் தலைமையில் முளைவிட்டது!
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்றும் நீதிக்கட்சி என்றும், பல்வேறாக அது அறியப்பட்டாலும், அதனுடைய அடிப்படை பார்ப்பன மறுப்பே!
அடிமட்ட நீதிபதியிலிருந்து உயர்நீதிபதி வரை, அரசு அலுவலகங்களில் அடிநிலை எழுத்தரிலிருந்து, வெள்ளைக்காரனின் அதிகாரப் பகட்டில் ஒளிரும் நிருவாக சபை உறுப்பினர்கள் வரை, வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்று எல்லா வகை அலுவல்களும் அதிகாரங்களும் பார்ப்பனமயமாய் இருந்த காலம் அது!
கல்விக்குச் சாதியில்லை என்பதும், மேல், கீழ் என்னும் வேற்றுமை இல்லை என்பதும், கல்வி வாயில்கள் அனைவருக்கும் பொது என்பதும் வெள்ளைக்காரனால் நமக்கு ஏற்பட்ட நன்மைகளிலெல்லாம் பெரிய நன்மை!
கடலனைய பார்ப்பனரல்லாத பெருங் கூட்டத்தில் புதிதாகப் படித்துவிட்டு வந்த சிலருக்குக் கூட அலுவலுமில்லை; அதிகாரமுமில்லை என்பது சூட்டைக் கிளப்பியது!
அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசு முழுக்கப் பார்ப்பனவசமாகி இருந்தது!
ஆங்கிலக் கல்வியின் முதற் பயனைப் பெற்றவர்கள் அவர்கள்தாம்! அதன் காரணமாக கோட்டைக்கு நெருக்கமாகி வெள்ளைக்காரனுக்கு நடைபாவாடை விரித்தவர்களும் அவர்கள்தாம்; "வெள்ளைக்காரனுக்கு இந்த மண்ணில் என்ன வேலை!' என்று முதலில் கேட்டவர்களும் அவர்கள்தாம்!
வெள்ளைக்காரனைக் கனவிலும் கலவரப்படுத்திய கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுச் செக்கிழுக்கும் கொடிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஒரு பார்ப்பனரல்லாத தலைமை காமராசர் வாயிலாகக் கிளர்ந்தெழும் காலம் வரை, காங்கிரசு பார்ப்பனப் பிடிக்குள்தான் இருந்தது!
வ.உ. சிதம்பரம் பிள்ளை காலத்திற்குப் பிறகு காங்கிரசு மிதவாதத் தன்மையை அடைந்துவிட்டது!
காங்கிரசுக்காகக் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிடுபவர்கள் மூவர் என்றால் அந்த மூவரும் சேலம் விசயராகவாச்சாரியார், டி. ரங்காச்சாரியார், டி.ஆர். ராமச்சந்திர ஐயர் என்பன போன்ற பெயருக்குரியவர்களாகத்தான் இருப்பார்கள்! அந்தக் காலகட்டத்தில் மயிலாப்பூர்க் குழுவின் தலைவராயிருந்த மயிலாப்பூர் வி. கிருட்டிணசாமி ஐயர் வெள்ளைக்கார அரசில் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்தார்!
வாஞ்சி ஐயர், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் போன்றவர்கள் நாட்டுப்பற்றில் குறைந்தவர்களல்லர்; தியாகத்திற்குப் பின்வாங்கியவர்களும் அல்லர்!
ஆனால் சாதியால் மேல், கீழ் என்பதல்லாத வெள்ளைக்காரன் ஆட்சி போன பிறகு, ஏற்படப் போகும் காங்கிரசின் ஆட்சி உயர்வு, தாழ்வை நிலைநிறுத்தும் பார்ப்பன ஆட்சியாகவே இருக்கும் என்று பார்ப்பனரல்லாதார் இயக்கம் கருதியதால், அவர்கள் வெள்ளைக்காரனுக்குச் சார்புநிலை எடுக்கும் அளவுக்குச் சென்றார்கள்!
இந்தச் சார்பு நிலை வரலாற்றில் பெரும் அதிர்வை உண்டாக்கிய ஈரோடு வெங்கடப்ப நாயக்கரின் மகன் இராமசாமி விடுதலை அடைந்த நாளைத் "துக்க நாள்' என்று வெளிப்படையாக அறிவிக்கும் நிலைக்கு இழுத்துச் சென்றது!
ஒரு பெருந் தேசபக்தராகவும், காந்தி பக்தராகவும் விளங்கிய ஈ.வெ.ரா., காந்தி கள்ளுக்கடை ஒழிப்பைச் சமூக உருவாக்கப் பணிகளில் ஒன்றாகக் கொண்டபோது, அதற்காகத் தன் தோட்டத்திலிருந்த விலைபெற்ற ஐநூறு தென்னை மரங்களை வெட்டி வீழ்த்திய பெருந்தகை; கதரைத் தலையில் தூக்கி விற்ற சீமான் வீட்டுப் பிள்ளை; தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராகத் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு பெருந் தலைவர், ஒருநாள் "எது தேசம்? எதற்கு அதன்மீது பக்தி? யார் இந்தக் காந்தி?' என்னும் தலைகீழ் மாற்றத்தை அடைந்தார் என்றால், அதற்குக் காரணம் என்ன என்பது வரலாற்றில் பெரிய கேள்வி அல்லவா?
அதற்கு அடிப்படையான காரணங்கள் பல உண்டு என்றாலும், காங்கிரசில் பெரியாரோடு சேர்ந்து பணியாற்றிய வ.வே.சு. ஐயரின் ஒரு நிலைப்பாடு, அந்த "ஈரோட்டு வெடிமருந்துக் கிடங்கு' தீப்பற்றிக் கொள்வதற்கும், அது வெடித்துச் சிதறி, தமிழ் நிலத்தில் ஒரு பூகம்பம் ஏற்படுவதற்கும் காரணமானது!
அண்ணல் காந்தி ஆங்கிலேயக் கல்வி நிறுவனங்களை மறுத்துத் தாய்மொழி வழியாகக் கல்வி என்பதை முன் வைத்ததை ஒட்டி சுதேசக் கல்வி நிறுவனங்கள் தோன்றின!
வ.வே.சு. ஐயர் அத்தகையதொரு கல்வி நிறுவனத்தைக் குருகுலம் என்னும் பெயரில் 1922-இல் சேரன்மாதேவியில் தொடங்கினார்!
காங்கிரசின் கல்விக் கொள்கையை வ.வே.சு. ஐயர் நடைமுறைப் படுத்த முன் வந்ததை ஒட்டி, காங்கிரசு அவருடைய நிறுவனத்திற்கு நிதி உதவி செய்தது; தனியார்களும் உதவினார்கள்!
ஆனால் குருகுலத்தில் உணவு உண்ணச் செய்யும்போது மாணவர்களை அமர்த்தி வைப்பதில் வேறுபாடு காட்டப்பட்டது என்பது பெருஞ் சலசலப்பை ஏற்படுத்தியது.
பார்ப்பனப் பிள்ளைகள் வேறு இடத்திலும், பார்ப்பனரல்லாத பிள்ளைகள் வேறு இடத்திலும் உணவு உண்ணுமாறு செய்யப்பட்டார்கள்!
சொ. முருகப்பா, வரதராசலு நாயுடு, அன்றையத் தமிழ்நாடு காங்கிரசின் செயலாளராக இருந்த ஈ.வெ.ரா. எனப் பலர் கொதித்தெழுந்தனர்! காந்தி வரையிலும் குறுக்கிட நேர்ந்தது!
"எங்களை இழிவுபடுத்துவதற்கா நாங்கள் பணம் கொடுத்தோம்? கொடுத்த பணத்தைத் திருப்பித் தாருங்கள்' என்றார் ஈ.வெ.ரா.!
"தருமம் செய்துவிட்ட பணத்தைத் திருப்பிக் கேட்கிறவர் நமது நாயக்கர் ஒருவர்தான்' என்று வ.வே.சு. ஐயர் நகையாடினாரே ஒழியப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவுமில்லை; முறையை மாற்றிக் கொள்ளவும் இல்லை!
""சன சமூகத்தில் இருக்கும் ஆசாரங்களை ஒட்டியே குருகுல ஆசாரங்களும் இருக்கும்'' என்னும் நிலைப்பாட்டில் திண்ணமாக இருந்தவர் வ.வே.சு. ஐயர்!
அருவியில் தவறி விழுந்த மகளைக் காப்பாற்றப் போய், தானும் தவறி விழுந்து வ.வே.சு. ஐயர் இயற்கை எய்தும் காலம் வரை இந்தச் சச்சரவு நீடித்தது.
பெரியார் காங்கிரசிலிருந்து வெளிவந்ததற்கு இடஒதுக்கீடு போன்ற இன்னும் பல காரணங்கள் உண்டெனினும், விடுதலை அடைந்த இந்தியாவில் பார்ப்பனரல்லாதாரின் நிலை எவ்வளவு இழிந்ததாக இருக்கும் என்று பெரியாரை உணரச் செய்தது சேரன்மாதேவி குருகுல நிலைப்பாடுதான்!
தன்மான இயக்கம் பிறக்கிறது. பார்ப்பனரல்லாதாரின் நலன் நீதிக்கட்சியினும் கூடுதலாக வலியுறுத்தப்படுகிறது.
"சமூகம் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் குருகுலமும் இருக்கும்' என்று அதை நியாயப்படுத்த முயன்றவர்களை முறியடிக்க வேண்டுமென்றால், சமூகத்தை மாற்றியமைக்க வேண்டுமெனப் பெரியார் எண்ணினார்.
பார்ப்பன எதிர்ப்பு நிலை வேகம் பெற்றது! நாம் திராவிடர்கள் என்னும் புதிய நிலை முன்னெடுக்கப்பட்டது. நம்முடைய மொழி வேறு; நாகரிகம் வேறு; பழக்கவழக்கங்கள் வேறு; சமூக மதிப்பீடுகள் (Social Values) வேறு என்பது பார்ப்பனரல்லாதாருக்கு விளங்குமாறு எடுத்துரைக்கப்பட்டது! பெரியார் இந்த அரும்பெரும் பணியை வெல்லத்தக்க வகையில் செய்வதற்கு அண்ணா பெருந்துணையாக இருந்தார்!
வ.வே.சு. ஐயர் காலத்திற்கு முந்தியும் பிந்தியும் காங்கிரசில் பார்ப்பனத் தலைமையே நிலைபெற்றிருந்தது. 1937ல் இராசாசி தமிழ்நாட்டின் முதல்வரானார்!
ஆனால் பெரியாரின் திராவிட இயக்கம் தமிழ்நாட்டைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. பெரும் மாறுதல்கள் நிகழத் தொடங்கிவிட்டன!
காங்கிரசு பார்ப்பனர் கட்சி என்னும் நிலை காங்கிரசையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் பதவிக்குத் தேர்தல் வருகிறது.
காங்கிரசின் தலைமைக்குப் போட்டியிட வேண்டியவர்கள் அதைத் தங்களின் பிடியில் வைத்திருந்த இராசாசியும் சத்தியமூர்த்தியும்தான்! அவர்கள் ஒருவருக்கொருவர் பகை!
நாடு திராவிட உணர்வுகளுக்கு ஆளாகி நிற்கும் நிலையில் காங்கிரசு மக்களிடையே வாழ வேண்டும் என்றால், தாங்கள் தமிழ் மக்களின் கண்ணை உறுத்தாமல் பின்னால் இருந்துதான் இயங்கியாக வேண்டும் என்னும் நிலைக்கு இரு தலைவர்களும் உள்ளாகினர்.
எந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க முடியாமல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினாரோ, அந்தக் கட்சியின் பார்ப்பனத் தலைவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையைப் பெரியார் வெளியில் இருந்து ஏற்படுத்தி விட்டார்!
காங்கிரசு மக்களிடம் நிலை கொள்ள வேண்டும் என்றால், பார்ப்பனரல்லாத ஒருவரின் தலைமை மலர்ந்தாக வேண்டும் என்பது காலக் கட்டாயம்!
1940-இல் நடைபெற்ற அந்தத் தேர்தலில் சத்தியமூர்த்தி தன் சீடர் காமராசரையும், இராசாசி தன் சார்பாக சி.பி. சுப்பையாவையும் நிறுத்துகின்றனர்!
காமராசர் வெறும் இரண்டே இரண்டு வாக்குகளில் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராகிறார். ஒரு பார்ப்பனரல்லாதார் தலைவராகி, அவருடைய அதிகாரத்தால் சத்தியமூர்த்தி செயலாளராக நியமனம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது!
ஆயினும் காமராசர் சத்தியமூர்த்தியை ஒரு குருவுக்குரிய இடத்தில் வைத்து இறுதி வரை போற்றினார்!
சத்தியமூர்த்தி காலத்திற்குப் பிறகு வலிமைமிக்க தலைவராக உருவானார் காமராசர்! பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்தார்! இறக்கும்வரை தமிழ்நாடு காங்கிரசு அவர் கைப்பிடிக்குள் இருந்தது.
1945-இல் திருப்பரங்குன்றத்தில் இராசாசிக்கும் காமராசருக்கும் நடந்த மோதலிலே காமராசர் மேலும் ஊன்றிக் கொண்டார்!
1952-இல் குற்றாலத்தில் குளித்து விட்டுக் காற்று வாங்கிக் கொண்டிருந்த இராசாசியை அழைத்து வந்து முதல்வராக்கினார்! அவருடைய கல்வித் திட்டம் "குலக் கல்வித் திட்டம்' எனத் திராவிட இயக்கத்தாரால் பழிக்கப்பட்டு, தமிழ்நாடு போர்க்களமானபோது, அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு இராசாசியிடம் காமராசர் வலியுறுத்தினார்! இராசாசி மறுத்துவிட்டுப் பதவியை உதறிவிட்டு வெளியேறினார்!
காமராசர் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார். பத்தாண்டுகள் நிகரற்ற ஆட்சி நடத்தினார்! ஒரு நாள் அந்த நாற்காலியைப் புறங் காலால் எற்றி விட்டு தில்லி போனார்!
இராசாசி வெளியேற்றத்தோடு தமிழ்நாட்டு அரசியலில் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது. பெரியாரின் நோக்கம் முற்றுப் பெற்றது!
செயலலிதாவின் எழுச்சி அவரின் திராவிட இயக்க நுழைவின் காரணமாக வேறுவகையானது. அது தனி ஆய்வுக்குரியது!
பற்றற்ற மனநிலையினரான இராசாசியின் பார்ப்பனத் தலைமை, இன்னொரு பற்றற்ற மனநிலையினரான காமராசரின் பார்ப்பனரல்லாத் தலைமையில் வெல்லப்பட்டது!
பார்ப்பனப் பிடியிலிருந்த காங்கிரசு பார்ப்பனரல்லாதாரைத் தலைவராக ஏற்றாக வேண்டும் என்னும் காலநிலையைப் பெரியாரின் போராட்டமும், அவருக்குத் துணையிருந்த அண்ணாவின் அருந்தமிழ் ஆற்றலும் ஏற்படுத்தின!
காமராசரின் தனி ஆற்றலும் பெருமையும் தான் அவருடைய உயர்வுக்குக் காரணம் என்றாலும், பெரியாரின் திராவிட இயக்கம்தான், ஓர் எளிய பார்ப்பனரல்லாதாரின் பயணத்தை இயலும் நிலைக்கு உள்ளாக்கியது!
பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டிருக்காவிட்டால், பதினாறாம் லூயியின் வாரிசுகள்தாம் நாடாண்டு கொண்டிருப்பார்கள்! பிரெஞ்சுப் புரட்சி பதினாறாம் லூயியை ஒழித்துக் கட்டியது! காலியாக இருந்த அரியணையில் நெப்போலியன் ஏறி அமர்ந்து கொண்டான்.
அதனால் நெப்போலியனைப் பிரெஞ்சுப் புரட்சியின் பிள்ளை என்பார்கள் வரலாற்றாசிரியர்கள்!
அதுபோல, தலைவர்களுக்கெல்லாம் தலைவரான காமராசர் திராவிட இயக்கத்தின் பிள்ளை!
நன்றி: தினமணி 23.9.2015

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: