Friday, July 3, 2015

ஊழல் சகதியில் பிஜேபி

பொருளாதார மோசடிக்குற்றவாளியான லலித் மோடிக்கு உதவிய விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். இந்த நிலையில் அரசுக்குச் சொந்தமான அரண்மனையை தனது பெயருக்கு மாற்றினார் என்றும் இந்த விவகாரத்தில் லலித்மோடி வசுந்தரா ராஜேவிற்கு உதவியுள்ளார் என்று அது தொடர்பான ஆவணங்களுடன் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக  காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் சில ஆவணங்களை தலைநகர் டில்லியில் வெளியிட்டார்.
தவுல்பூர் அரண்மனை ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமானது. 1954-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான வருவாய்த்துறை ஆவணங்களில் இந்த அரண்மனை அரசுக்குச் சொந்தமானது என்றே காணப்படுகிறது. 1980-ஆம் ஆண்டு இது தொடர்பாக வசுந்தரா ராஜேயின் கணவர் ஹேமந்த் சிங் அளித்த வாக்குமூலத்திலும், தவுல்பூர் அரண்மனை  ராஜஸ்தான் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்றே கூறி இருக்கிறார். வசுந்தரா ராஜேவும் கூட அதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
2013-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது வசுந்தரா ராஜே தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டல்ஸ் நிறுவனத்தில் தனது மகன் துஷ்யந்த் சிங், மருமகள் நிஹாரிகா மற்றும் லலித் மோடி ஆகியோருக்கும் பங்குகள் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இந்த அரண்மனையை துஷ்யந்த் சிங், தான் நடத்தும் நியாந்த் ஹெரிடேஜ் ஓட்டல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தனியார் ஓட்டலாக மாற்றிக்கொண்டுவிட்டார். இந்த நிறுவனம் லலித் மோடியும், வசுந்தரா ராஜேவும் இணைந்து நடத்துவதாகும். இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், வசுந்தரா ராஜே, அவருடைய குடும்பம் மற்றும் லலித் மோடி ஆகியோர் இணைந்து ராஜஸ்தான் அரசுக்கு சொந்தமான இடத்தில் சொகுசு ஓட்டலை கட்டி இருக்கின்றனர். இதில் மாநிலத்தின் பங்களிப்பு இல்லாமலேயே ரூ.100 கோடியை இருவரும் முதலீடு செய்தும் உள்ளனர்.
இந்த ஓட்டலை கட்டுவதற்கு மொரீஷியஸ் வழியாக லலித் மோடி பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இது திட்டமிட்டே அரசாங்க சொத்தை தங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்டதாகும். சட்டவிரோதமும் ஆகும். இதன் மூலம் தலைமறைவாக உள்ள லலித் மோடியுடன், வசுந்தரா ராஜே வர்த்தக தொடர்பு கொண்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது.       லலித் மோடி விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். வெளிப் படையான ஆட்சி, ஊழலில்லாத ஆட்சி என்று கூறிக்கொண்டு வந்த மோடி இப்போது அவரது அமைச்சரவையிலேயே பலர் தொடர்ந்து ஊழல் வழக்குகளில் சிக்கிவருகின்றனர். இது குறித்து இன்னும் பதில் ஏன் கூறவில்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது என்றாலும் இது மக்கள் முன் வெகுவாக எழுந்து நிற்கும் கேள்வியும்கூட!
ஓராண்டு பிஜேபி ஆட்சியின் சாதனை என்ன என்று கேள்வி கேட்டால், ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்திருக்கிறோமே அது போதாதா என்று நெஞ்சை நிமிர்த்தியும், குரலை உயர்த்தியும் பேசிக் கொண்டிருந்த வர்களுக்கு லலித்மோடி தொண்டைக்குள் சிக்கிய முள்ளாகி  விட்டார்.
ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் மட்டுமல்ல; இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் பலமாக சிக்கிக் கொண்டு விட்டாரே - பிரதமர் நரேந்திர மோடியோ மவுன சாமியாராகி விட்டார். மன்மோகன் சிங்கைத்தான் அப்படி அழைத் தார்கள். அவரின் இயல்புப்படி அதிகம் பேசாதவர்! அவர்கூட நாடாளுமன்றத்தில் தேவைப்பட்ட நேரத்தில் எழுந்து பேசததான் செய்தார்.
ஆனால், 56 அங்குல மார்பளவு கொண்ட மாபெரும் வீரரான வாய் நீளம் காட்டும் மோடியோ இப்பொழுது - மன்மோகன் சிங்கையே தோற்கடிக்கும் அளவுக்குத் தமக்குத் தாமே தம் வாய்க்குள் அலிகார் பூட்டைப் போட்டுக் கொண்டு விட்டாரே ஏன்? மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் என்பது இது தானோ?

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...