Tuesday, July 7, 2015

சமூக பொருளாதார புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வெளியிடாதது ஏன்?

சமூக பொருளாதார புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வெளியிடாதது ஏன்?
ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து களத்தில் இறங்கும் திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் எச்சரிக்கை!


சமூக பொருளாதாரப் புள்ளி விவரங்களை வெளியிட்ட பிஜேபியின் மத்திய அரசு, பெரும்பாலான மக்கள் மிகவும் எதிர்பார்த்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வெளியிடாதது ஏன் என்ற வினாவை எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், வெளியிடா விட்டால் ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துக் களம் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஆங்கிலேயர் ஆட்சியின்போது (1931) எடுக்கப்பட்டது. அதற்குப்பின் இத்தகைய கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது (UPA) மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நாடு தழுவிய அளவில் சமூக நீதிச் சிந்தனையாளர்கள் வலியுறுத்தினார்கள்.
தொடர்ந்து வலியுறுத்தி வருவது திராவிடர் கழகம்
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். மாநாடுகளில் தீர்மானங்களையும் நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கும் கொண்டு சென்றுள்ளோம்; குறிப்பாக சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் அணி மாநாட்டிலும் தீர்மானமாகவே நிறைவேற்றினோம். (14.4.2010)
தொடக்கத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பைத் தட்டிக் கழித்த மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தாமதப்படுத்தும் வகையில் இடையில் குறுக்குச் சால் ஒட்டியது. பயோ மெட்ரிக் முறையில் இத்தகைய கணக்கெடுப்பை எடுப்பது என்ற அறிவிப்பு வெளிவந்தது. அதனைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன். (விடுதலை 13.8.2010)
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போன்று  ஜாதி வாரிக் கணக்கெடுப்பு பயோமெட்ரிக் (Bio-Metric) என்ற முறையைக் கையாண்டால், அது இந்த யுகத்தில் எளிதில் முடியாது ; பல ஆண்டுகள் நீடிக்கும் அபாயம் உண்டு என்று குறிப்பிட்டு இருந்தோம்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் ஓர் அறிக் கையை விடுதலையில் வெளியிட்டோம் (27.8.2010).
நீதிமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி விவரம் சேர்க்கப்படுவது அவசர அவசியமாகும். 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்  மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி மக்கள் தொகைக்கான சரியான புள்ளி விவரங்கள் இல்லை என்பதால், இது மிக முக்கியம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் வலியுறுத்தியதோடு, உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு சமூக நீதி சம்பந்தமான வழக்குகள் நடைபெறும் போதெல்லாம் நீதிபதிகள் வழக்கமாக எழுப்பும் கேள்விகளாகவும் இவை உள்ளன.
எனவே மத்தியக் கணக்கெடுப்பு (சென்சஸ்) 2011இல் நடப்பதில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்க, கட்சித் தலைமைகள், மத்திய அமைச்சரவை அதன் குழு எல்லாம் முடிவு செய்த பிறகும் தாமதம் செய்வது மிகப் பெரிய சமூக அநீதியாகும். ஆட்சியில் உள்ள உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் ஆளுமை காரணமான சூழ்ச்சியாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம் (விடுதலை 27.8.2010).
பல தடைக் கற்களைத் தாண்டி கடைசி கடைசியாக கடந்த 3.7.2015 அன்று மத்திய நிதி அமைச்சர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
இதில் என்ன கொடுமையென்றால் சமூக  - பொருளாதாரப் புள்ளி விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளதே தவிர - நாடே முக்கியமாக எதிர்பார்த்த - நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஜாதிவாரியான விவரத்தை மட்டும் வெளியிட வில்லை.
கேட்டால், நாடாளுமன்றத்தில் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தலைவர் திரு. பிரனாப் சென் கூறுவது வேடிக்கையானதும் - பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற செயலுமாகும்.
பூனைக்கு ஓர் ஓட்டை குட்டிக்கு இன்னொரு ஓட்டையா?
தாய்ப் பூனைக்கு ஓர் ஓட்டை குட்டிக்கு வேறு ஒரு ஓட்டையா என்று சொல்லுவதுண்டு. அது இந்த இடத்தில் மிகவும் பொருத்தமானதாகும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை மற்ற புள்ளி விவரத்தோடு வெளியிடாமல், நாடாளுமன்றத்தில் அதுவும் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று சொல்லுவதற்கு விசேடமான காரணம் என்னவோ! அதனை விளக்கி இருக்க வேண்டாமா?
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் அவர்கள்   15 சதவீத உயர் ஜாதி பார்ப்பனர்களுக் காக 85 சதவீத மக்களின் விருப்பத்தை, உரிமை யைத் தடுப்பதா என்ற வினாவை எழுப்பியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் எதிர்ப்பு!
தொடக்க முதலே பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்தே வந்துள்ளன. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கூடவே கூடாது. இந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு என்ற தலைப்பிட்டு ஏடுகளில் செய்திகள் வெளிவந்த துண்டு.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ். கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு நடத்தினால் ஜாதி, இனம், மொழி, மதம் போன்றவற்றால் இந்தியாவில் பிரிவினை எண்ணம் தலை தூக்கும் என்று கூறியுள்ளனர். (தினமணி 26.5.2010, தினமலர் 20.6.2010).
பார்ப்பனர்களின் இரட்டை வேடங்கள்!
இன்றைக்கும் என்றைக்கும் ஜாதியைக் காப்பாற்றுவதில் கண்ணும், கருத்துமாக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் ஆண்டுக்கொருமுறை ஜாதியின் சின்னமான பூணூலைப் புதுப்பிப்பதற் காகவே ஆவணி அவிட்டம் என்ற மதச் சடங்கு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு இருக்கும் பார்ப்பனர்கள், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை இல்லை, துவி ஜாதியாரான  நாங்கள் மட்டுமே அதற்கான தகுதி படைத்த வர்கள் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று ஆகமங்களைத் துணைக்கழைத்து, ஜாதியைக் காப்பாற்றிக் கொள்ளும் இந்தச் சக்திகள், திருப்பதி ஏழுமலையானுக்கே மூன்றரை கிலோ தங்கத்தில் பூணூல் சாத்தும் சங்கராச்சாரி கூட்டங்கள் (ஜெயேந்திர சரஸ்வதி தான் அவ்வாறு செய்தவர்) ஜாதி வாரிக் கணக்கெடுப்பு என்றால் விண்ணுக் கும், மண்ணுக்குமாகக் குதிப்பது ஏன்? இதில் மறைந்திருக்கும் சூழ்ச்சி என்ன?
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வெளியில் வந்தால் மக்கள் தொகையில் பெரும் பகுதியாக இருந்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு களில் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளனர்; அதே நேரத்தில் மக்கள் தொகையில் மூன்று சதவீதம்கூட இல்லாத பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற குட்டு உடைபட்டுப் போகுமே எதிர்ப்புக் குரல் பீறிட்டு எழுமே என்பதாலேயே ஜாதி ஒழிப்பு வீரர்கள் போலப் பாசாங்கு செய்கிறார்கள்.
களம் காண்போம்!
பார்ப்பனர்களின் இந்த இரட்டை வேடத்தை நம் மக்கள் புரிந்து கொள்ளட்டும்! ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உடனே வெளியிடா விட்டால் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்துக் கழகம் களத்தில் இறங்கத் தயங்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...