Total Pageviews

Saturday, July 4, 2015

சூத்திரர் வரிப் பணம் பிராமண மொழிக்கா?

பாங்காக்கில் நடந்த உலகசமஸ்கிருத மாநாட்டில் பேசிய சுஷ்மா சுவராஜ் சமஸ்கிருதம் உலக மொழிகளின் தாய்மொழி போன்றது என்றும், குழப்பமான மனநிலையில் உள்ளவர்களுக்கு சமஸ்கிருதம் துணையாக இருக்கும், ஆகையால் சமஸ்கிருதம் உலகளாவிய மொழியாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்று உலகம் முழுவதும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் திறமையான ஆட்சியை வியந்து பெருமையுடன் பார்க்கிறது. மோடியின் கோரிக்கைகளை உலகம் கேட்கத் துவங்கி விட்டது. இந்திய மண்ணில் பிறந்ததற்கான நன்றிக் கடனாக இந்தியக் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார். அதன் ஒரு பகுதியாக இந்தியப் பாரம்பரியக் கலையான யோகாவை உலகம் முழுவதும் கொண்டுசெல்வதில் வெற்றி பெற்று விட்டார் என்றும் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.  இப்போது இந்திய பாரம்பரிய மொழியான சமஸ் கிருதத்தையும் உலகம் முழுவதிலும் கொண்டு செல்வதன் ஆரம்பமாக இந்த மாநாட்டை நடத்திக் கொண்டு இருக்கிறோம். சமஸ்கிருத மொழி உலக மொழிகளின் தாய்மொழி போன்றதாகும், உலகின் பழைமையான மொழிகளில் சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளதே இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்,யோகாவும், சமஸ்கிருதமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. யோகாவை ஏற்றுக் கொண் டவர்கள் சமஸ்கிருதத்தைத் தாராளமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சமஸ்கிருத மொழியை பேசுவதாலும், கற்றுக் கொள்வதாலும் மன அமைதிபெறும், உலகில் நிம்மதியற்ற சூழலுக்கு சமஸ்கிருதம் தெளிவைத்தரும். மனித இனத்திற்கு அமைதியை வழங்க வந்த மொழி என்பதனால் தான் இதை தேவமொழி என்று அழைக்கின்றனர்.
அமெரிக்காவில் சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு அறிவியல் ஆய்வுகளில் சமஸ்கிருதம் கற்ற மாணவர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். மேலும் கற்பதற்கு எளிதாக உள்ளதாக பல்வேறு நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் கூறியுள்ளனர்.   சமஸ்கிருதம் கற்பிப்பதை நாம் மேலும் எளிமைப் படுத்தவேண்டும், அதே நேரத்தில் சமஸ்கிருதம் கற்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல சலுகை களை அவர்களுக்கு வழங்கவேண்டும், சமஸ்கிருதம் வழக்கொழிந்து போகவில்லை, அது வழமையாக உள்ளது. இந்த மொழி ஒரு பொக்கிசம் ஆகும், அதை பாதுகாப்பது நமது கடமை நவீன மயமாகும் இந்தக்காலகட்டத்தில் சமஸ்கிருதம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்கும் மொழியாகும். இதற்கென்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருதத்தில் பல்வேறு அறிவியல் வார்த்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் இப்போது பயன்படுத்தவேண்டும் என்றெல்லாம் நீட்டி முழங்கி இருக்கிறார் இந்தியாவின் வெளியுறவுத்துறை  அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.
சுஷ்மா சுவராஜ் இப்படிப் பேசி இருப்பதில் ஒன்றும் அதிசயம் இல்லை. அமைச்சராகப் பதவி ஏற்க இவர் உறுதி மொழி எடுத்துக் கொண்டது சமஸ்கிருதத்தில்தான். பார்ப்பன அம்மையாரிடம் இதனைத்தானே எதிர்பார்க்க முடியும்.
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது தொடங்கப்பட்ட சமஸ்கிருத பாரதி என்ற அமைப்பின் தலைவரும் இவரே! யோகாவைத் தொடர்ந்து சமஸ்கிருதத்தை உலகம் முழுமையும் கொண்டு செல்ல உலக சமஸ்கிருதமயத்தை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடியால் பாங்காங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கூட!
மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சியின் கொள்கை இந்துத்துவா என்கிறபோது, அவர்கள் செத்துச் சுண்ணாம் பாகிப் போன சமஸ்கிருதத்திற்கு உயிரூட்டத்தானே முயல்வார்கள்.
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, அப்பொழுது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவிருந்த முரளி மனோகர் ஜோஷியும் இதனைத்தானே செய்தார் ஒர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டு என்று அறிவித்து கோடிக் கணக்கான தொகையைக் கொட்டி அழவில்லையா?
இந்தியாவில் ஆட்சி மொழிக்குத் தீர்வு சமஸ்கிருதமே என்பதுதானே ஆர்.எஸ்.எஸ். கொள்கை அவர்களின் குரு நாதரான கோல்வால்கரின் கருத்தும்கூட.
இன்றைக்கு சமஸ்கிருதம் சமஸ்கிருதம் என்று ஆலாய்ப் பறக்கிறார்களோ செத்துச் சவமான மொழிக்கு உயிரூட்ட முயல்கிறார்களே - இந்த மொழி இந்தக்  கதிக்கு ஆளானதற்குக் காரணமே இந்தப் பார்ப்பனர்கள் தானே - மறுக்க முடியுமா?
சமஸ்கிருதம் தேவமொழி வேதமொழி -சூத்திரர்கள் படிக்கக் கூடாது - என்று குறிப்பிட்ட வட்டத்துக்குள் அதனைச் சிறை வைத்ததால் ஏற்பட்ட பலன் தானே இது.
யோகாவை ஏற்றுக் கொண்டவர்கள் சமஸ்கிருதத் தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பாங்காக் மாநாட்டில் பேசி இருக்கிறார். இதிலிருந்து எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறார். யோகா என்பது சமஸ்கிருதத்துடன் சம்பந்தப்பட்டது என்று அவர்கள் நம்புவதால் தான் யோகாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதும் விளங்கி விட்டதல்லவா.
சூத்திரன் வேதம் ஓதுவதைக்  கேட்டால் அவன் காதில் ஈயத்தை ஊற்று, கேட்டதில் ஒரு வரியை ஞாபகத்தில் வைத்து விட்டானென்றால் அவன் நாக்கை வெட்டு என்பன போன்ற கடுமையான வாசகங்கள் உள்ள புத்தகங்கள் உள்ளன. இது மிகவும் காட்டுமிராண்டித்தனம்
இத்தகைய காரியங்களைச் செய்த பேய்கள் முன் காலங்களில் இருந்திருக்கின்றன என்று கூறுகிறார் இந்துத்துவாவாதிகள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்.
(ஆதாரம்; இராம கிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “The Man Making Message of ViveKananda for the Use of College Students”).
பாங்காக்கில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா கொட்டி அளந்தாரே சமஸ்கிருதத்தில் இருக்கிற கருத்து வளங்கள் குறித்து அதற்குச் சரியான சாட்டையடிதான் இந்த விவேகானந்தர் கூற்றும் கணிப்பும். சூத்திர மக்களின்  வரிப் பணத்தை பிராமண மொழிக்கு வாரி இறைப்பதை நாடு அனுமதிக்காது- எச்சரிக்கை!

0 comments: