Tuesday, June 23, 2015

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் இடஒதுக்கீடு கிடையாதா?

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே பல்கலைக் கழகம் மத்திய அரசின் சார்பில் இயங்கும் மத்திய பல்கலைக் கழகமாகும். புதுச்சேரி காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டுப் பகுதியில் 780 ஏக்கர் பரப்பளவில், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு 1985இல் தொடங்கப்பட்டது.
இந்தியா முழுமையும் மட்டுமல்ல; வெளிநாடுகளில் இருந்தும்கூட வந்து படிக்கின்றனர்; இவ்வாறு 6500 இருபால் மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இப்பல் கலைக் கழகத்தில் 87 கல்லூரிகள் இணைக்கப்பட்டும் உள்ளன. புதுச்சேரி மாநிலம் என்று சொல்கிறபோது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என்று பல பிரிவுகளிலும் வாழும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாக இருந்துவருகிறது; மாணவர்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
துணைவேந்தராக டாக்டர் ஞானம் அவர்கள் வந்தபோது 25 சதவீத இடஒதுக்கீட்டை அப்பல்கலைக் கழகத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார். 71 பட்ட மேற்படிப்புகள் இப்பல்கலைக் கழகத்தில் இருந்தாலும் 18 படிப்புகளுக்கு மட்டுமேதான் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது.
51 முனைவர் பட்ட (பி.எச்.டி.) ஆய்வுப் படிப்பிலோ இடஒதுக்கீடு அறவே கிடையாது. இதுகுறித்து பேராசிரியர் முனைவர் இராமதாஸ் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றைப் பல்கலைக் கழகமே நியமித்து அறிக்கையினைக் கோரியது.
பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பிரிவுப் படிப்புகளிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அந்த ஆய்வுக் குழு அறிக்கை கூறியது. இதில் வேடிக்கை என்னவென்றால் பல்கலைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையை அந்தப் பல்கலைக் கழக நிருவாகமே நிராகரித்த கொடுமையாகும்.
பொதுவாக ஒன்றை முடிவு செய்து கொள்ள வேண்டும். மத்திய அரசு சம்பந்தப்படுத்தப்பட்ட எந்த நிறுவனமும், அமைப்பும் பெரும்பாலும் அவை பார்ப்பனிய ஆதிக்கப்புரி தர்பாராகவே இருக்கும். 
 சட்டப்படி இடஒதுக்கீடு இல்லை என்று மத்திய அரசு சொல்ல முடியுமா என்றால் சட்டப்படி அவ்வாறு கூற முடியாது. மத்திய அரசுத் துறைகளில் கல்வி, வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டவர் களுக்கும், 15 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏழரை சதவீதம் மலைவாழ் மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டப்படியான நிலைப்பாடாகும். 
அப்படி இருக்கும் பொழுது பல்கலைக் கழக நிருவாகம் தானடித்த மூப்பாக நடந்து கொள்வது எப்படி? 
ஏற்கெனவே புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் தமிழ் விரோத நடவடிக்கையை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டத்தில் ஈடுபட்டதுண்டு; மறுபடியும் அதற்கு மேற்பட்ட போராட்டத்தை நடத்திட திராவிடர் கழகம் என்றைக்கும் தயாராகவே இருக்கிறது. காரணம் திராவிடர் கழகம் சமூக நீதிக்கு உரத்தக் குரல் கொடுத்து போராடிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி அமைப்பாகும். 
மண்டல் குழுப் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் அகில இந்திய அளவில் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தி, தன் வரலாற்றுக் கடமையைத் திராவிடர் கழகம் செய்து வந்திருக்கிறது. அதன் விளைச்சல்தான் மத்திய அரசு கல்வி, மற்றும் வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு கிடைத்திட உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தைப் பொறுத்த வரையில் பேராசிரியர் முனைவர் இராமதாசு அவர்கள் தலைமையிலான மூவர் குழு அளித்த பரிந்துரையைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டு, மறுபடியும் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றும் இடஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் இடஒதுக்கீடு கொடுக் கக் கூடாது என்று சொல்லவில்லை; மத்திய அரசின் அனுமதியைப் பெற்று தாராளமாக இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தலாம் என்றுதான் கூறியுள்ளது.
மத்திய அரசு இதுவரை அதற்கான பச்சைக் கொடியைக் காட்டவில்லை; கல்வியாண்டு தொடங்கப் பட்ட நிலையில், இதுவரை மத்திய அரசின் ஆணை கிடைக்கப் பெறாத நிலையில், இவ்வாண்டில் இடஒதுக்கீடு என்னும் சமூகநீதிக்கு வாய்ப்பு இல்லாமலேயே தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்களும் பெரும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளனர். துணைவேந்தரும், நிருவாக குழுவும் நினைத் திருந்தால் பேராசிரியர் முனைவர் இராமதாஸ் அவர்கள் தலைமையிலான மூவர் ஆய்வுக் குழு அளித்த அறிக் கையின் அடிப்படையிலேயே இடஒதுக்கீட்டைத் தாராள மாக செயல்படுத்தி இருக்கலாம்; இதற்கு முன்னோடியாக இதே பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஞானம் அவர்களே வழிகாட்டியும் இருக்கிறார்கள். பெரும்பாலும் மத்திய பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுபவர்கள் பார்ப்பனர்களாகவே இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டைப் போடுவதைத் தங்களின் பரிசுத்த ரத்த ஓட்டக் கடமையாகவே கருதிக் கொண்டுள்ளனர்.  அகில இந்திய அளவில் துணைவேந்தர்களை நியமிக்கும்போது அதில்கூட சமூகநீதி - இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண் டும் என்ற உரிமைக் குரலைக் கொடுக்க வேண்டியவர் களாகவே இருக்கிறோம்.
மத்திய அரசுத் துறைகளில் சில குறிப்பிட்ட துறைகள் இடஒதுக்கீடு முறையிலிருந்து விதி விலக்கு அளிக்கப்படும் சூழ்ச்சியும் உள்ளன; இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதுண்டு - அதற்கான மசோதாவை அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலம் முடிவுறும் தறுவாயில் அவசர அவசரமாக மாநிலங்கள வையில் தாக்கல் செய்யப்பட்ட சூழ்ச்சியைத் திராவிடர் கழகம்தான் அம்பலப்படுத்தியது அதற்காகப் போராட் டமும் நடத்தப்பட்டது. மக்களவைக்கு கொண்டு வரப் படவில்லை.
எந்த ஒரு சிறு வாய்ப்புகள் கிடைத்தாலும் பார்ப் பனர்கள் அதிகார நிலையில் இருக்கும் எந்த இடத்திலி ருந்தும் இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்து கொண்டு தானிருக்கும். கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் நின்று சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு போராடுவோம் வாரீர் என்று திராவிடர் கழகம் அன்பு அழைப்பை விடுக்கிறது. தமிழ்நாட்டைப் போல புதுச்சேரி மாநிலத்திலும் 69 சதவீத இடஒதுக்கீட்டு உரிமைகளைப்  பெற போராடுவோம்  - வெற்றி பெறுவோம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...