Sunday, April 12, 2015

அழைக்கிறது பெரியார் திடல்!

அண்ணல் அம்பேத்கர்
பிறந்த நாளில் (ஏப்ரல் 14)
புரட்சிப் பெண்கள்
படைத்திடும்
புறநானூறு
தாலியாம் தாலி!
யாருக்கு?
பெண்ணுக்கு மட்டுமாம்
கல்யாணம் ஆயிற்றா என்று
அடையாளம் காட்டவாம்!
ஆணுக்கு அடையாளம்
எங்கே என்றால்
அடேயப்பா
ஆவேசத்தைப் பாருங்கள்
மீசையின் துடிப்பின்
வேகத்தைக் கேளுங்கள்
அவனுக்கென்ன
ஆண் பிள்ளை
ஆயிரம் பெண்களோடு
சுற்றுவானாம்
அதைக் கேட்க நீ யார்
என்ற ஆணவம்!
அந்தக் காலம்
மலையேறி விட்டது அப்பனே!
என்று காட்ட
மானமிகு
மங்கையர் வருகிறார்
உரிமை முரசொலித்து!
அடிமைத் தளையாம்
தாலியை அகற்றிட
இணையரோடு வருகிறார்
இணையில்லா
இலட்சிய மங்கையர்!
தாலியறுப்பல்ல - அகற்றம்!
ஆனாலும் உண்மை
ஆண் எஜமானன்
பெண் அடிமை எனும்
ஆரியக் கலாச்சாரத்தின்
ஆணி வேரை அறுக்கும்
அனல்வாதம்
பெண்ணென்றால்
துரோகச் சிந்தை என்றும்
படுக்கையறைப் பாவையென்றும்
பிதற்றும் மனுதர்மத்துக்குப்
பேரிடி காத்திருக்கிறது.
பெரியார் திடலுக்கு
வாருங்கள்
பெரியார் சகாப்தம்
பெண்டீரே!
மற்றொன்று கேளிர்
மாட்டிறைச்சிக்குத் தடையாம்
மாட்டிலும் பசு
கோமாதாவாம்!
உண்ணக் கூடாதாம்
உறுமுகின்றன
உதவாக் கறைகள்!
கோமாதாவை
கூட்டம் கூட்டமாக
உண்ட
வேதியக் கூட்டம்
கூறுகிறது கூசாமல்!
அன்று யாகத் தீயில்
ஆவினத்தைப் பொசுக்கி
கண்டங்களைத் தின்றிட
அடித்துக் கொண்ட
ஆரியக் கூட்டம்
பசப்புகிறது இன்று!
கோமாதா கூச்சல் போடும்
குல்லூகக் கூட்டத்திற்கு
ஒரே ஒரு கேள்வி
அந்த மாதா செத்தால்
தூக்க வேண்டியது தானே?
அதற்கு மட்டும் எங்கள்
தோழன்தான் கிடைத்தானா?
ஒரு வேளை
புல் போட்டாயா?
குளத்திற்கு ஓட்டிச் சென்று
குளிப்பாட்டியதுண்டா?
பால் கறந்தாயா?
பால் கறந்து
பக்குவம் செய்து கொடுத்தால்
வெண்ணெயும் தயிருமாய்
வெட்டுவதுதானே
உங்கள் வேலை?
இனி எடுபடாது உங்கள்
ஏமாற்று வேலை
ஈரோட்டுப் பூகம்பத்
தோளின்மீது
இன்று எங்கள் இனம்!
உரசிப் பார்க்க
ஆசைப்பட வேண்டாம்!
கிடைச் சிங்கதோடு
கீரைத் தண்டுகள் மோத வேண்டாம்
எருமையைச்
சாப்பிடலாமாம்
எருமை கறுப்பு என்பதால்
இழிவோ!
இதிலும் வருணாசிரமமோ!
எலி கத்தி
புலியா அஞ்சும்?
கோழி குரல் கொடுத்தா
கொல் யானை  பதுங்கும்?
இந்து முன்னணி கத்தி
எழுச்சிக் கூடல்
கருஞ்சட்டையா
பின்வாங்கும்?
வாருங்கள் தோழர்காள்!
மாட்டுக்கறி உண்டு
பலமாய்க் குரல்
கொடுப்போம்!
பஞ்சாங்கக் குப்பைகள்
பறக்கட்டும் -
பாய்ந்து வருக பகுத்தறிவுப் பெரும்படையே!
திராவிடப் புலியின் வாலை
சீண்ட ஆசையாம் -
தீண்டட்டும் பார்ப்போம்!
தினவெடுத்தால்
நாம் என்ன செய்ய?

- கவிஞர் கலி. பூங்குன்றன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...