Saturday, April 11, 2015

சென்னை பெரியார் திடலில் நடப்பது தாலி அகற்றும் நிகழ்வே தவிர போராட்டமல்ல!

அண்ணல் அம்பேத்கர் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில்

சென்னை பெரியார் திடலில் நடப்பது தாலி அகற்றும் நிகழ்வே தவிர போராட்டமல்ல!

பெண்ணுரிமை அடிப்படையில் தானாக முன்வந்து

தாலியை அகற்றிக் கொள்வது சட்டப்படியானதே!

வழக்கு வரும்போது நீதிமன்றத்தில் முறைப்படி சந்திப்போம்! தமிழர் தலைவர் அறிக்கை

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் (ஏப்ரல் 14 காலை) சென்னை பெரியார் திடலில் நடக்க இருக்கும் தாலி அகற்றும் நிகழ்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பெரியார் திடலில் நடைபெற உள்ள அந்த நிகழ்ச்சியின் சட்டப்படி யான கொள்கைப்படியான நிலையை எடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

 
14ஆம் தேதி தாலி அகற்றும் நிகழ்ச்சி

திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு எதிரான புகார்மீது வழக்குப் பதிவு,
வேப்பேரி போலீசுக்கு, அய்க்கோர்ட் உத்தரவு, என்று தலைப்புகளிட்ட  ஒரு செய்தி தினத்தந்தி (11.4.2015) நாளேட்டில் வெளி வந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

 அதில் ஒரு நபர் அகில இந்திய இந்து மகாசபையின் மாநிலத் துணைத் தலைவராம்; இன்னும் ஒரு வழக்குரைஞர் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் அளித்துள்ளனர்.

கடந்த 6ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் வீரமணிக்கு எதிராக நான் புகார் மனுவை அளித்துள்ளேன்.

அதில் (செய்தியில் உள்ளபடி)

திராவிடர் கழகத்தின்  தலைவர் கி. வீரமணி வருகிற 14ஆம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களைக் கொண்டு தாலி அகற்றம் என்ற நிகழ்ச்சியை நடத்திட  திட்டமிட்டு அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு மன வேதனை அளிக்கும் அவரது செயல்பாட்டை, தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து கடந்த 6ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை. எனவே என்னுடைய புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் இந்த மனுக்களையெல்லாம் தன்னுடைய சேம்பரில்   வைத்து நேற்று விசாரித்தார்!

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மனுதாரர்கள் புகாரை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள்ளனர். அவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டரிடம் தான் இந்த புகாரைக் கொடுக்க வேண்டும். அந்தப் புகாரில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருந்தால், லலிதாகுமாரி வழக்கில்  சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படை யில், வேப்பேரி - போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று  செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறை ஆணையருக்கு இதற்கு முன்பே கழகத்தின் சார்பில் தகவல்

நாம் இதற்கு முன்னாலேயே சென்னை போலீஸ் கமிஷனருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வரும் 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் அண்ணல் அம்பேத் கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை வெகு சிறப்புடன் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்துவது என்றும் அதில் பெண்ணுரிமை, உண்ணுரிமை, கருத்து ரிமைகள் வலியுறுத்தும் நிகழ்ச்சிகளும் இடம் பெறும் என்றும் அது பெரியார் திடலில் நடைபெறும் என்றும் முறைப்படி கடிதம் கொடுத்துள்ளோம். (30.3.2015).

 ஏனிந்த அறிவிப்பு?

ஒரு தொலைக்காட்சி தாலி பற்றிய ஒரு விவாதத்தை ஒளிபரப்பக் கூடாது என்று அச்சுறுத்தப்பட்டது;  இந்துத்துவ மதவெறியர்கள் உள்ளே புகுந்து பணியாளர்களை அடித்தனர். காமிராவை உடைத்தனர்.

பிறகு அவ்வலு வலகத்தை நோக்கி டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசி அச்சுறுத்தி, தாலிபற்றிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப விடாமல் மிரட்டி, கருத்துரிமையைத் தடுத்ததை எதிர்த்து, சென்னையில் நடந்த பல கட்சியினர் தலைவர்கள் கூட்டத்தில் பலத்த கண்டனம் எழுந்தது. அதில் கலந்து கொண்ட தாய்மார்களும் முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்களும், தாலிகளைப் பொறுத்த வரை ஒரு அடிமைச் சின்னம், அதை அகற்றிக் கொள்வ தாகவும், அதன் மூலம் எங்களது கருத்துரிமையைப் பாதுகாக்க விழைகிறோம் என்றும் என்னை சந்தித்துக் கூறிய நிலையில், அம்பேத்கர் விழாவையொட்டி அதில் தாங்களே விருப்பப்பட்டு முன்வரும் பெண்கள் - தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் திட்டமிட்டே சிலர் தாலி அறுப்புப் போராட் டம் என்று விஷமத்தனமாகத் தலைப்பிட்டு, தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

இதைக் கண்டித்து ஊடகங்களுக்கு, சில நாள்களுக்கு முன்பு கழகத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்றினை அனுப்பிய நிலையில் (1.4.2015) அவர்கள் அறுப்பு என்பதை மாற்றிக் கொண்டனர்.

சில விஷமிகளும், மதவெறியர்களும்,இதை வைத்து விளம்பரம் தேடிட முனையும் சில வெட்டி ஆசாமிகளும், இன்னமும்  அறுப்பு அறுப்பு என்றும், போராட்டம் என்றும் எழுதி வருகின்றனர்.

இது தாலி அறுப்பும் அல்ல. (மதச் சடங்கு செய்வோர் தான் பெண்களை விதவையாக்கச் செய்யும் செயல் அது)  போராட்டமும் அல்ல!

இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளது என்று சிலர் பேசுவது, எழுதுவது, புகாரில் கூறுவது ஒன்று அறியாமை அல்லது விஷமத்தனமே!

காரணம், தாலி கட்டாது திருமணம் செய்ய இந்து திருமணச் சட்டத் திருத்தமாகத்தான் (Act No.21 of 1967 - Hindu Marriage Act 1955 - -  இது போலவே புதுச்சேரி அரசும் சட்டத் திருத்தம் செய்துள்ளது - சிங்கப்பூர், மலேசியாவிலும்கூட சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று ஆக்கப்பட்டுள்ளது) அறிஞர் அண்ணா முதலமைச்சரான நிலையில், ஏகமனதாக சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமண சட்டம் நிறைவேறியதோடு, பின்னோக்கி, முன்பு நடந்த சுயமரியாதைத் திருமணங் களும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்துக்கள் மனம் புண்படுகிறது என்ற வாதம் பொய்யானது. புரட்டானது - பொருளற்றது.

காரணம் ஹிந்து மதத்தில் - வேத மதத்தில் இப்படி ஒரு சடங்கே இல்லை.
இது போராட்டமும் அல்ல. பெண்ணுரிமைப் பெம் மானான டாக்டர்அம்பேத்கர் 125ஆம் ஆண்டு விழா  அன்று.

பெண்கள் தாங்களே - எவ்வித கட்டாயமோ, நிர்ப்பந்தமோ, இன்றி, தெளிவான துணிவான உணர்வுடன் முன் வந்து நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளுகின்றனர்.
இது அவர்களது தனி மனித சுதந்திரம்! இதைப்பறிக்க - தடுக்க எவருக்கும் சட்டப்படியும், நியாயப்படியும் உரிமை இல்லை.

எங்களது வற்புறுத்துதலோ, அல்லது தவறான ஈர்ப்போ (Lure)
கூட கிடையாது.


சுயமரியாதைத் திருமணத்தில் தாலி கட்டாயமல்ல!

அறிஞர் அண்ணா ஆட்சியில் தந்தை பெரியார் விருப்பப்படி நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமண செல்லுபடிச் சட்டத்தில் தாலி அணிந்து கொள்ளாத திருமணமும் சட்டப்படி செல்லும் என்று கூறப்பட்டுள்ளதே!


சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாது

இதுதான் நமது விளக்கம்; எந்தவித ஆர்ப்பாட்டம், அமளி இன்றி, அம்பேத்கர் 125ஆம் ஆண்டு விழா பெரியார் திடலில் நடைபெறும்; எங்களால் எந்தச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையோ, அமைதியின்மையோ ஏற்படாது என்பது உறுதி!

ஆனால், இதற்கிடையில் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த இராம. கோபாலன்  நாங்கள் அன்றைக்கு (14 அன்று) என்ன செய்வோம் என்று இப்போது சொல்ல மாட்டேன் ஒன்று நடக்கும் இப்போது சொன்னால் போலீஸ் என்னைப் பிடித்துக் கொண்டு போய் விடும் என்றும் கூறியுள்ளார். இத்தகவல் மூலம் கலவரம்  - வன்முறையை அவர்கள் நம்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

வழக்கம்போல் திராவிடர் கழகத் தொண்டர்கள் தோழர்கள் எவ்வளவு உணர்ச்சி வயப்பட்டாலும் கட்டுப்பாடு காத்து நடந்து கொள்ளுவார்கள்.

இந்து மதம் என்பதில் பார்ப்பனப் பெண்கள் உட்பட பலர் அணிவதில்லை என்பதும் மறுக்க முடியாது.

கட்டுப்பாடுள்ள ஒரு இயக்கம் இது! சட்டப்படி நமக்குள்ள உரிமையை எவரும் பறிக்க முயன்றால் அவர்கள் தோல்வியை அடைவர். அதனை உரிய முறையிலும் சந்திப்போம்.  இது உறுதி!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
11.4.2015, சென்னை

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...