Wednesday, April 8, 2015

ஆந்திரக் காட்டில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொலை - நெஞ்சைப் பிளக்கக் கூடியதாகும்

ஆந்திரக் காட்டில் அப்பாவி தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொலை - நெஞ்சைப் பிளக்கக் கூடியதாகும்

உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் மட்டுமே நீதிவிசாரணை நடத்திடவேண்டும்!

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்)  தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

ஆந்திர மாநிலத்தில், ஆந்திர காவல்துறையினரால் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; இதற்கு உடனடியாக உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் நீதி விசாரணை நடத்திடவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

காக்கை, குருவிகள் போல சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

திருப்பதி அருகே சேஷாசலம் காட்டில், செம்மரம் வெட்டச் சென்றவர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த, திருவண்ணாமலை, வேலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவித் தமிழர்கள் 12 பேர்கள் உள்பட, மொத்தம் 20 பேர்கள் காக்கை, குருவிகள் போல சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி - நம் நெஞ்சைப் பிளக்கும் செய்தியாகும்!

இது ஒரு அரச பயங்கரவாதம்!

அவர்கள் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட ஏழைக் கூலித் தொழிலாளர்கள்; தவறு செய்தவர்களை சட்டப்படி ஆந்திர அரசும், அந்தக் காவல்துறையும் தண்டிக்கவேண்டுமே தவிர, இப்படி என்கவுண்டர் என்று சொல்லி, திட்டமிட்டு சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்கள் தாக்கினார்கள் என்று பழி போடுவது, எவ்வகையில் ஏற்கத்தக்கது? தமிழர்கள் என்றால் நாதியற்ற மக்களா?

அண்டை மாநிலங்களில் இப்படிப்பட்ட அவலங்களும், அக்கிரமமான முறையில் உயிர்ப் பறிப்புகளும் ஏற்பட்டால், அதன் எதிர்வினை இங்கே தொடங்கப்பட்டால் என்னவாகும் என்று ஆந்திர அரசும், காவல்துறையும், முதலமைச்சரும் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

தமிழர்கள் என்று பார்ப்பதுகூட ஒருபுறம் இருக்கட்டும்; அவர்கள் மனிதர்கள் அல்லவா?

திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை!

மனித உயிர்களைப் பறிப்பது என்ன ஆந்திரக் காவல்துறைக்குப் பிள்ளை விளையாட்டா?

தவறு செய்தவர்கள் என்றால், அவர்கள் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்படவேண்டுமே தவிர, இப்படி ஒரு பாசிசப் போக்கினை மேற்கொண்டிருப்பது எவ்வகையில் ஜனநாயகத்தில் ஏற்கத்தக்கது?

ஆந்திரக் காவல்துறை நினைத்திருந்தால் சம்மந்தப்பட்டவர்களை சுட்டுக்கொல்லாமல் சுற்றி வளைத்துக் கைது செய்திருக்க முடியாதா? சுட்டுத் தள்ளவேண்டும் என்ற மூர்க்கத்தனத்துடன்தான் திட்டமிட்டே இதில் செயல்பட்டுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை.

இது அப்பட்டமான படுகொலை என்று தமிழகக் காவல்துறை மாத்திரமல்ல; ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., அமைச்சர் சிந்தாமோகன் போன்றவர்களும், ஏனைய நடுநிலையாளர்களும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை - (ஜாலியன் வாலாபாக் போன்ற) என்றே கூறியுள்ளனர்!

1. உடல்களுக்குப் பக்கத்தில் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், அறுபடாத செருப்புகள் திட்டமிட்டு வைக்கப்பட்டவை - எல்லாம் ஜோடிக்கப்பட்டவை!

2. பழைய செம்மரக்கட்டைகளை உடல்களுக்கு அருகில் வைத்துள்ளனர்; அவை புதிதாக வெட்டப்பட்டவை அல்ல.

3. சுடப்பட்டவர்கள் 20 பேர்களும் நெற்றிப் பொட்டு, மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன!

4. பெருங்கூட்டம், பெரும் கலவரங்களில்கூட முதலில் எடுத்த எடுப்பிலேயே, துப்பாக்கிச் சூடு என்று நடத்தி விடுவதில்லையே!

காவல்துறையினரைத் தாக்க வந்திருந்தால், அவர்களை அடக்க இப்படியா நெற்றிப் பொட்டில்; மார்பில் குறி வைத்துச் சுட முடியும்?

இந்த ஆந்திராவின் அத்தை - பாட்டிக் கதையை அறிவுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள்!

உடனடியாக இதற்கு உச்சநீதிமன்றம் அல்லது வெளிமாநில உயர்நீதிமன்ற நீதிபதியின்மூலம் நீதி விசாரணை நடத்திடவேண்டும்.

தமிழ்நாடு அரசும் - ஆந்திர அரசும் இழப்பீடு வழங்குக!

மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் இங்கு சட்ட நடவடிக்கைகளை ஆந்திரக் காவல்துறை, பொறுப்பாளர்கள்மீது தொடங்கவேண்டும்.

இவர்களுக்கு ஆந்திர அரசும், தமிழ்நாடு அரசும் பெருந்தொகைகளை, உயிர் இழந்த ஏழைத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்குத் தர முன்வரவேண்டும் (பணம் உயிருக்கு ஈடாகாது என்ற போதிலும்கூட, ஏழைக் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கு அது ஓரளவு உதவக்கூடும்).

அண்டை மாநிலம், இப்படி நடந்துகொள்ளலாமா? உயிர் இழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்கள், தமிழ்நாட்டவர்கள், திருப்பதிக்குச் செல்வதை இனி புறக்கணிக்கவேண்டும்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை, 8.4.2015









No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...