மாட்டுக் கறி விருந்து, தாலி அகற்றம் சட்டப்படி குற்றமற்றவையே காவல்துறையின் அனுமதி மறுப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு
கழகம் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் சட்டம் -
ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டதில்லை
தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை
தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை
அண்ணல் அம்பேத்கர் 125ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி நாளை (14.4.2015) சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருந்த பெண்கள் தாங்களாகவே விரும்பி முன்வந்து மேற்கொள்ள விருந்த தாலி அகற்றம், கட்டணம் கட்டி கலந்து கொள்ளவிருந்த மாட்டுக் கறி விருந்து இவற்றைத் தடை செய்து, சென்னை வேப்பேரி காவல் நிலைய உதவி ஆணையரால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணையை எதிர்த்து - இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாம் நாளை (14-4-2015 அன்று) சென்னை பெரியார் திடலில் காலை நடத்தவிருக்கும் அண்ணல் அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும், அதனை யொட்டி பெண்ணுரிமை விழிப்பு - விடுதலை, உண்ணு ரிமைக் கருத்து வலியுறுத்தல் உள்ளடக்கிய நிகழ்ச்சிகளையும், சென்னை மாநகரக் காவல்துறை - சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் தொடுத்த வழக்கு அடிப்படை யில் தரப்பட்ட ஓர் ஆணையை அடிப்படையாகக் கொண்டும், யாரோ இந்து மதவெறி அமைப்புகளைச் சார்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதையும் காரணமாகக் காட்டி, உயர்நீதிமன்ற ஆணைப்படி நம்மிடம் விசாரித்து நம்மிடம் அறிக்கையோ, வாக்குமூலமோ வாங்கி விசாரணை ஏதும் நடத்தாமலேயே, ஏதோ சட்டம் ஒழுங்கு கெட்டு விடக் கூடும் என்று தங்களது யூகம், கற்பனை மூலம் ஒரு தவறான ஆணையை நமக்கு நேற்றுத் தந்தனர்.
இது ஏடுகளிலும், ஊடகங்களிலும் செய்தியாக விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.
பதில் கடிதம் உடனடியாகக் கொடுக்கப்பட்டது
உடனடியாக, நமது கழகத் துணைத் தலைவரும், கழக வழக்கறிஞர்களும் சென்னைக் காவல்துறை அதிகாரியை - (யார் நோட்டீஸ் சர்வ் செய்தாரோ அவரிடமே) நேரில் நேற்று மாலையிலேயே உடனடியாகச் சந்தித்து கொடுக்கப்பட்டது.
வேப்பேரி காவல்துறை உதவி ஆணையரின் ஆணை சட்டப்படி தவறானது; உண்மைக்கும் புறம்பானது; சட்ட விரோதமானது என்பதை சட்ட பூர்வமாக விளக்கி இந்திய அரசியல் சட்ட உரிமை விரோத ஆணையை மறுபரிசீலனை செய்து, திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று (12.4.2015) பதில் கடிதம் கொடுக்கப்பட்டு விட்டது.
சட்டத்துக்கு எதிராக எந்த நிகழ்ச்சியும் இல்லை!
இதுவரை அதன்மீது எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், சட்டமுறைப் படி, அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகளைச் செய்வதைப் பறிக்கவோ, தடுக்கவோ சட்டப்படி உரிமையில்லை என்பதை விளக்கியும் 18.3.2015 அன்று என்னுடைய (வள்ளுவர் கோட்ட) உரையைக் காவல்துறை உதவி ஆணையரின் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது போல,
தாலியை அகற்றிக் கொள்ள தாமே முன்வரும் தாய்மார்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும், அதில் மாட்டுக்கறி உண்ணும் உரிமையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என்பதற்காக அடையாளமாக அமைதியான விருந்து - அதுவும் கட்டணம் தந்து விரும்பிச் சாப்பிடுவோர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாகவும் தான் அது நடைபெறும் என்றும் நமது பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தனி மதச் சுதந்திரம் அதுவும் பொது அமைதிக்குச் சிறிதும் பங்கம் இல்லாமல், ஒரு அரங்கத்திற்குள், ஒத்தக் கருத்துள்ளவர்கள் கூடி நடத்திடும் நிகழ்ச்சியை தடுப்பது அப்பட்டமான மனித உரிமை, அடிப்படை உரிமைப் பறிப்பு ஆகும்.
தந்தை பெரியார் காலத்திலிருந்து இன்று வரை , திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களானாலும் சரி, வேறு எந்த நிகழ்ச்சிகளானாலும் சரி, பொது அமைதிக்குக் கேடு, பொதுச் சொத்துக்கு நாசம், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஏதாவது ஒரு சிறு சம்பவத்தைக் கூடக் சுட்டிக் காட்ட முடியாது.
ஏதாவது நிகழ்ந்திருந்தால் அது மற்ற விஷமிகளால், எதிர்ப்பாளர்களால் தான் நிகழ்ந்திருக்கலாமே தவிர, நம்மால் ஏற்பட்டது இல்லை என்பது காவல்துறை அதிகாரிகளுக்கே தெரியும்.
அனுமதியின்றி எந்த திடீர் போராட்டத்தையும்கூட இதுவரை செய்திடாத - சட்டம், ஒழுங்கை, மதிக்கின்ற ஓர் இயக்கம் பெரியார் கண்ட திராவிடர் கழகம் என்ற நம் அமைப்பு!
இதன்மீது வீண் பழி சுமத்துவதன்மூலம் மதவெறிக் கும்பலுக்கும், மனித உரிமை பறிப்பாளர்களுக்கும், காலிகளுக்கும், கூலிகளுக்கும் துணை போகலாமா காவல்துறை?
அரசமைப்புச் சட்டம் 51A(h) என்ன கூறுகிறது?
மேலும் அரசியல் சட்ட விதி 51A(h) படியான அடிப் படைக் கடமைகளில், அறிவியல் மனப்பான்மையைப் பரப்புதல் (Scientific Temper)
எதையும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டல் (Spirit of Inquiry) சீர்திருத்தம், மனிதநேயம் (Reform and Humanism) (ஒருவரை மற்றொருவர் அடிமையாகக் கருதுவதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது) அடிப்படையில் அமைந்த பரப்புரைப் பிரச்சாரமே எங்கள் செயலாகும்.
எதையும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டல் (Spirit of Inquiry) சீர்திருத்தம், மனிதநேயம் (Reform and Humanism) (ஒருவரை மற்றொருவர் அடிமையாகக் கருதுவதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது) அடிப்படையில் அமைந்த பரப்புரைப் பிரச்சாரமே எங்கள் செயலாகும்.
இந்நிலையில் யாருடைய மத உணர்வு களையும் காயப்படுத்துதல் அல்ல.
சுயமரியாதைத் திருமண சட்டத்தில் தாலி கட்டாயமில்லையே!
சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1967இல் நிறைவேற் றப்பட்டதில் தாலி என்பதை அணிந்து தான் திருமணம் நடத்த வேண்டுமென்பது கட்டாயமோ, தேவையோ அல்ல என்று சட்டப்படி உறுதி செய்யப் பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் 48 ஆண்டுகள் அமுலில் இருந்து வருகிறது!
தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்வுகள் பல ஊர்களில், பல மேடைகளில், பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
அன்னை நாகம்மையார் தாலியை அகற்றிக் கொண்ட நிகழ்ச்சி
அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள் தாலியை அகற்றிக் கொண்ட நிகழ்ச்சி, பெரியார் திரைப்படத்தில் காட்டப்பட்டு, சென்சார் போர்டால் அனுமதிக்கப்பட்டு, பல லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்ததோடு, 100 நாள் ஓடிய படம் மத்திய அரசின் விருதும் பெற்ற திரைப்படமாக, அது வெற்றிகரமாக எவ்வித மறுப்பும் இன்றி பரவியுள்ளது.
எவரும் மனம் புண்பட்டதென்று அக்காட்சிக்காக புகார் கொடுத்ததில்லையே!
எனவே 80 ஆண்டு காலமாக நடைபெறுவது இது!
சட்டப்படியான நீதித் துறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இப்படி எத்தனையோ வாதங்கள் உண்டு.
இன்று சட்டப்படி சென்னை உயர்நீதிமன்றத்தைக் கழகம் நாடி, நீதித் துறைமூலம் இதற்கு சட்டப் பரிகாரம் தீர்வு காண எல்லா ஏற்பாடுகளும் திராவிடர் கழகத்தால் செய்யப்பட்டுள்ளன.
அங்கு உரிய நீதி கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம். ஏனெனில் இதில் அடங்கியுள்ளவை - சட்டப் பிரச்சினை - ஆழ்ந்த மனித உரிமை, தனி மனித கருத்துச் சுதந்திரம், அறிவியல் மனப்பான்மை போன்றவை ஆகும்.
எனவே, அதன் மூலம் தீர்வைக் காண்பதே சாலச் சிறந்தது அதுவே நிரந்தரத் தீர்வாக இப்பிரச்சினைக்கு அமையும் அமைய வேண்டும் என்பதால் முடிவை எதிர் நோக்கிக் காத்திருப்போம்.
எதிரிகள் செய்த விளம்பரங்கள்
இதற்கிடையில், இந்த இரு அறிவிப்புகளையும் நாம் நிகழ்ச்சியை நடத்தும் முன்பே ஏராளமாக விளம்பரம், விவாதங்கள், எதிர் அறிக்கைகள் என்பவை மூலம் இப்பிரச்சினை விவாதமாக்கி நமக்கு முதல் கட்ட வெற்றியைத் தேடித் தந்துள்ள நமது இன எதிரிகளுக்கும், அவர்களது ஏவுகணை களுக்கும், நமது மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.
’இறுதியில் சிரிப்பவனே புத்திசாலி’ என்பதை நம் இயக்கம் உலகுக்குக் காட்டும் என்பது உறுதி.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை, 13.4.2015
No comments:
Post a Comment