Wednesday, January 28, 2015

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?
அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் ஹிட்லரிசத்துக்கு மத்திய செய்தி விளம்பரத் துறை மன்னிப்புக் கோரவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற சோசலிஸ்ட், செக்குலர் என்பதை நீக்கி மத்திய அரசு விளம்பரமா?

66 ஆவது குடியரசு நாளுக்காக மத்திய செய்தி விளம்பரத் துறையின் சார்பில் ஏடுகளுக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகையில் உறுதி செய்யப்பட்டு இடம் பெற்றுள்ள சோசலிஸ்ட், செக்குலர் என்ற சொற் களைத் திட்டமிட்டு நீக்கியதைச் சுட்டிக்காட்டி, இந்த அத்துமீறலை - சட்ட விரோதச் செயலை மேற்கொண்ட செய்தி விளம்பரத்துறை பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில், ஏழு மாதங்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற - ஆர்.எஸ்.எஸ். - ஆணைப்படி நடக்கும் - பா.ஜ.க. என்ற ஆட்சியில் பகிரங்க மாக, பட்டாங்கமாய் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைந்து உருவாக்கப்பட்டவற்றை அரசின் அடிப்படை நோக்கத்தையே, அமைதியான முறையில் அகற்றிடும் முயற்சிகள் இந்த 66 ஆவது இந்தியக் குடியரசு நாள் முதலே தொடங்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம் பரவலாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது!

அப்பட்டமான ஹிந்து மதவாத ஹிந்துத்துவ முயற்சிகள் - சிறிதும் கூச்சநாச்சமின்றி, மோடி அரசில் இடம்பெற்றுள்ள அவரது சக அமைச்சர்கள், பா.ஜ.க. எம்.பி.,களால் நிறைவேற்றப்பட்டு வருவதை நாடே பார்க்கத் தவற வில்லை.
தி எகனாமிக் டைம்ஸ் ஆங்கில நாளேட்டில் இன்று (28.1.2015) 3 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள செய்தியும், பின்னணியும்!

அரசமைப்புச் சட்டத் திட்டத்தில் உள்ள முக்கிய சொற்களை நீக்கி விளம்பரம்!

இதே பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள - 66 ஆவது குடியரசு நாளையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை என்ற செய்தித் துறை அமைச்சு (Information and Broadcasting Ministry) விளம்பரத்தில்,

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள முன்னுரை பூர்வப் பீடிகை (Preamble) வாசகங்களையே மாற்றி அரசு சார்பில் விளம்பரம் தரப்பட்டுள்ளது. நமக்கு நாமே வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் - இந்திய மக்களாகிய நாம் இந்திய அரசினை இறையாண்மையுடன் கூடிய சமதர்ம, மதச்சார்பற்ற ஜன நாயகக் குடியரசாக அமைந்துள்ள ஆட்சி என்பதாகத்தான் தொடங்குகிறது.

இந்தப் பீடிகை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாற்றப்படக்கூடாத அடிப்படை அரசியல் சட்டக் கட்டுமானப் பகுதியாகும்.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும்...

இந்த அரசின் மாற்றப்படக் கூடாத அடிக்கட்டுமான (Basic Structure of the Constitution) சொற்களான சோஷலிஸ்ட், செக்யூலர் (Socialist and Secular) என்பதனை நீக்கி, விளம்பரம் கொடுத்துள்ளனர். உச்சநீதி மன்றத்தில் இரண்டு வழக்குகளில் அதை நீக்கிட முடியாது - அது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அடிப் படை நோக்கப் பகுதி என்று தெளிவாக உறுதியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது!

திட்டமிட்டே நீக்கப்பட்டுள்ளது!

இப்போது வேண்டுமென்றே திட்டமிட்டு இந்திய அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான (I&B Ministry) அதிகாரபூர்வமாகத் தந்த விளம்பரத்தில் - திட்டமிட்டே ஆழம் பார்க்கும் வகையில், ஹிட்லரிசம் தலைதூக்கி, சமதர்மம், மதச் சார்பின்மை (சோலிஸ்ட், செக்குலர்) இரண்டு நோக்கங்களையும் எங்கள் அரசு தூக்கி எறிந்து விட்டது என்று சொல்லுவதாக அரசு விளம்பரம் தருகிறது!

சப்பைக் கட்டா?

இதற்குச் சப்பைக் கட்டுக் கட்டுவதற்கு சில ஜால் ராக்களும், ஆமாம் சாமிகளும் ஊடகங்களுக்குக் கிடைத் தும் இருப்பது விந்தையிலும் விந்தை! வெட்கக்கேடானதும் கூட!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தொடக்கத்தில் இது இல்லையாம்; 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம்தான் இந்த இரண்டு சொற்றொடர்களும் புகுத்தப் பட்டனவாம்! முன்பு இருந்த வாசகங்களைக் கொண்டே இந்த அரசு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்!

- இப்படி ஒரு வெண்டைக்காய், விளக்கெண்ணெய் வியாக்கியானம் - விளக்கம்!

கேழ்வரகில் நெய்வடிகிறது என்று இந்த ஜால்ரா நிபுணர்கள் ஒத்து ஊதுகிறார்கள்! கேட்பவருக்கு மதியில்லை என்ற நினைப்போ!

இந்திய அரசமைப்புச் சட்டமானாலும் அல்லது வேறு எந்த சட்டப் பிரிவானாலும் - ஏன் ஒரு அரசு ஆணைகூட, தற்போது எப்படி அதில் உள்ளதோ அதை அப்படியே மாற் றாமல்தான் எடுத்தாளவேண்டும் - கடைப்பிடிக்கவும் வேண்டும்.

திட்டமிட்டே சில முக்கிய அதுவும் இலட்சிய குறிக் கோள் சொற்களை விட்டுவிட்டு அரசு விளம்பரம் தரலாமா?
 
மன்னிப்புக் கோரவேண்டும்

இது தற்செயலாக நிகழ்ந்த தவறு அல்ல; திட்டமிட்டு - ஆழம் பார்க்கும் - ஹிந்துத்துவா உணர்வின் வெளிப்பாடு - அசல் ஹிட்லரிசத்தின் அருவருக்கத்தக்க வெளிப்பாடு!

இதனை முற்போக்குக் கருத்துள்ளவர்கள் அனைவரும் வன்மையாகக் கண்டித்து, நாடு தழுவிய அளவிலே கண்டனக் குரல் எழுப்பி, இந்திய தகவல் ஒலிபரப்புத் துறையை மன்னிப்புக் கேட்க வைக்கவேண்டும்.

வருமுன்னர் காக்கத் தவறக்கூடாது. மோடி அரசு நாட்டை எப்பாதையில் அழைத்துப் போகத் திட்ட மிட்டுள்ளது என்பதற்கான ஒரு முன்னோட்டம் இது!
எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை செய்கிறோம் மக்களே விழிப்புடன் இருப்பீர்!

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்
சென்னை
28.1.2015

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...