Tuesday, January 27, 2015

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள்


 


தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறாமல் இருந்திருந்தால் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அகற்றப்பட்டு, அவ்விடத்தில் இந்தி மட்டுமே வந்திருக்கும். அவ்வாறு மாறியிருந்தால் தமிழகத்தில் இந்தி எந்த அளவில் புகுந்து நாட்டாண்மை செய்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

1. இந்திய ஆட்சிப் பணி, காவல்துறைப் பணிகளுக்கான (IAS, IPS) தேர்வுகளில் இந்தியில் மட்டுமே கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தமிழகத்திலி ருந்து ஒருவர்கூட அப்பணிகளுக்கு வந்திருக்க முடியாது.

2. நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழ் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக்கும்.

3. பாஸ்போர்ட், தொடர்வண்டி பயணச் சீட்டு, விமான பயணச் சீட்டு என அனைத்து மத்திய அரசு தொடர்பான ஆவணங்களிலும், இடங்களிலும் இந்தி மட்டுமே குடி புகுந்து இருந்திருக்கும்.

4. அய்.அய்.டி. போன்ற மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு கேள்விகள் ஆங்கிலம் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக் கும் தமிழகத்திலிருந்து ஒருவர்கூட படித்திருக்க மாட்டார்கள்.

5. அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்துப் பாடங்களும் இந்தி வழிக் கல்வியின் (இந்தி மீடியம்) மூலமாக படித்திருப்போம்.

6. தமிழகத்தில் உள்ள மத்திய மாநில வேலை வாய்ப்புகள் அனைத்திலும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தான் நிரம்பி வழிந்திருப்பார்கள்.

7. அரசியல் கட்சிகள் வைக்கும் பதாகைகள் அனைத்தும் இந்தியாகவே இருந்திருக்கும்.

8. வட நாட்டில் இருப்பது போல பேருந்துகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் பெயர்ப் பலகை இந்திமயமாகவே இருந்திருக்கும்.

9. தமிழகம் அய்.டி. துறையில் இவ்வளவு முன்னேறி யிருக்காது. ஆங்கிலம் தெரியாத காரணத்தால் வெளி நாடுகளுக்கு,  நாசா போன்ற அறிவியல் துறைகளில் அமையும் நல்ல வேலை வாய்ப்புகளுக்கு  தமிழர்களில் அதிகமானவர்கள் சென்றிருக்க முடியாது. இந்தி பேசும் மாநிலங்கள் போல தமிழகம் மிகவும் பின்தங்கி இருந்திருக்கும்.

10. தமிழில் இவ்வளவு திரைப்படங்கள் மற்றும் இவ்வளவு தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள், இணையதளங்கள் வந்திருக்காது.

11. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என அனைத்திலும் இந்தி மட்டுமே இருந்திருக்கும், தமிழ் கட்டாயம் இருந்திருக்காது.

12. பிறப்பு  - இறப்பு சான்றிதழ் கூட இந்தியில் தான் இருந்திருக்கும்.

13. தமிழக சட்டமன்றத்தில் பல இந்திக்காரர்கள் உள்ளே புகுந்திருப்பார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் இந்திதான் சட்டமன்ற மொழியாக இருந்திருக்கும்.

14. இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் மொழிகளும் இந்நேரம் வழக்கத்தில் இருந்து  மறைந்திருக்கும்.

15. வீட்டில் உள்ள குழந்தைகளும் பெற்றோர்களிடம் இந்தியில்தான் பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். தாய் மொழிகளின்  நிலை கேள்விக்குறி  ஆகியிருக்கும்.

16. தமிழகத்தில் தமிழில் வணிகம் செய்ய முடியாத நிலை உருவாகி இருக்கும்; இந்தி தெரிந்தவர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழர்கள் செய்த மொழிப் போராட்டத்தின் விளைவாக அனைத்து மாநில மொழிகளும் காப்பாற்றப்பட்டன என்பதில் நமக்கு பெருமையே!

இருப்பினும் இந்திய அரசின் இந்தித் திணிப்பு இன்னும் ஓயவில்லை. தமிழர்களின் மொழிப் போராட்டமும் முடியவில்லை.

இப்பொழுது சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். திராவிட இயக்கத்தால் இந்தி எதிர்க்கப்பட்டதால் தமிழ்நாட்டு மக்கள் இந்தி படிக்க இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. அப்படி இல்லையென்றால், இந்தி படித்து முன்னேறி இருப்பார்கள் என்று பொறுப்பு இல்லாமல் பேசி திரிகிறார்கள் - சிலர் எழுதவும் செய்கிறார்கள். வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கும் என்பது அவர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

உண்மை நிலை என்ன? இந்தியைத் தாய் மொழி யாகக் கொண்ட வட மாநிலத்தவர்கள்தான் இன்றைய தினம் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் வேலை செய்து கொண்டுள்ளனர்.

எந்த மொழியைத் தெரிந்தவர்களாக இருந்தாலும் சரி, குறிப்பிட்ட நாட்டுக்குச் செல்லும் நிலையில் அந்நாட்டு மொழியை நாளடைவில் கற்றுக் கொண்டு தொழிலையும், வாழ்வையும் நடத்திக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் வட்டிக் கடைகளையும் மற்றும் பல தொழில்களைச் செய்து வரும் மார்வாடிகளும் குஜராத்துக்காரர்களும் வரும் பொழுது தமிழைக் கற்றுக்கொண்டா வந்தார்கள்?

இங்கு வந்தார்கள் - மக்களிடம் புழங்கினார்கள் - பேச்சுத் தமிழ் தானாக வந்து சேரவில்லையா?

சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியை - இந்தி பேசாத மாநிலங்களில் திணிப்பது  - ஒரு பண்பாட்டுத் திணிப்பு என்பதை மறக்க வேண்டாம்!

இதனை இன்றல்ல - நேற்றல்ல - 1926ஆம் ஆண்டி லேயே தமிழிற்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும் என்ற தலைப்பில் கட்டுரையை எழுதி னார் தொலைநோக்காளரான தந்தை பெரியார் (ஆதாரம்: குடிஅரசு 7.3.1926).

89 ஆண்டுகளுக்குப் பிறகு அதனை நினைத்துப் பார்க்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியாரை வாசிப்போம் - சுவாசிப்போம்! அதன் மூலம் நம்மை எதிர் நோக்கி ஆணவமாகச் சிரிக்கும் சக்திகளைத் தூள் தூளாக்குவோம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...