Monday, January 26, 2015

கலைஞரைக் கேலி செய்வதை பார்ப்பனர்கள் நிறுத்த வேண்டும்

பார்ப்பனர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் சாஸ்திரம், அதுதான் சட்டம் - அதனை ஏற்க மறுத்தால் அவர்கள் ஏதாவது உள்நோக்கம் கற்பிப்பது, முத்திரை குத்துவது என்பதைத் தங்கள் பிழைப்பாகக் கொண்டு திரிகிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டே, தமிழால் பிழைத்துக் கொண்டே தமிழர்களை இழிவுபடுத்துவதில் மூர்க்கக் குணம் கொண்டு திமிராக எழுத ஆரம்பித்துள்ளனர்.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று இந்த ஆண்டும் திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தி எழுதி விட்டாராம். துர்வாசர் என்ற பெயரில் துக்ளக்கில் உண்டு இல்லை என்று கலைஞர் அவர்களை எழுதித் தீர்க்கின்றனர் (துக்ளக் 28.1.2015 பக்.28).

யுகாந்திரமாக சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்தால் கலைஞருக்கு என்ன வந்தது? இவர் யார் இப்படி சொல்லுவதற்கு? இவரது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள மறைமலை அடிகளே சொல்லி விட்டார், சோமசுந்தர பாரதியாரே சொல்லி விட்டார் என்று அறிக்கை வெளியிடுகிறார். மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியாரும் தமிழர்களின் மகா சன்னி தானங்களா?  மடாதிபதிகளா? மகாசன்னிதானங்களும், மடாதிபதிகளும் சொன்னாலே மக்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகிற நம்பிக்கைகளை எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இந்த லட்சணத்தில் திராவிட மகா சன்னிதானம் என்று தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் இந்தக் கருணாநிதி சொல்வதையா போயும் போயும் கேட்பார்கள்? என்று பொரிந்து தள்ளுகிறது துக்ளக்.

முதலில் கருணாநிதி என்ன சன்னிதானமா என்ற கேள்வியை எழுப்புகிறார் - சரி, கலைஞர் சொன்னால்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் அறிஞர்களான, கற்றுத் துறைபோகிய பெரு மக்களாகிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும் சொல்லுகிறார்கள்  என்றால் அவர்கள் என்ன மடாதிபதிகளா? சன்னிதானங்களா? என்று கேள்வி கேட்கிறார்.

தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிப் பேச தமிழறிஞர்களை விடத் தகுதியானவர்கள் இந்த அம்மாஞ்சிப் பார்ப் பனர்களா? தமிழர் பிரச்சினையில் கருத்துச் சொல்லு வதற்கு இந்தப் பார்ப்பனர்கள் யார் என்று திருப்பி நம்மால் கேட்கமுடியாதா?

மகா சந்நிதானங்களும்,  மடாதிபதிகளும் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னால் ஏற்க வேண்டியதுதானே? ஏற்பார்களா? அடுத்து ஒரு முரண்பாட்டைக் கவனிக்கவும். இவர்கள் எல்லாம் மடாதிபதிகளா? சந்நிதானங்களா? என்று கேள்வி கேட்டு விட்டு, அடுத்த வினாடியே மகா சன்னிதானங்களும், மடாதிபதிகளும் சொன்னாலே மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எழுதுகிறார். முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையிலேயே முரண்பாடு வழிந்து ஓடுகிறது. இந்த லட்சணத்தில் துக்ளக் பார்ப்பனர் துடை தட்டுகிறார்.
தமிழ் ஆண்டுகள் என்று சொல்லுகிறார்களே - அதில் ஒரே ஓர் ஆண்டுக்காவது தமிழில் பெயரில்லையே - ஏன்? இதற்கு என்ன பதில்? அறுபது ஆண்டுகள் சமஸ்கிருதத் தில் இருக்கின்றன என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இந்தப் பார்ப்பனக் கூட்டம் அதையே பிடித்துக் கொண்டு தொங்குகின்றது என்பதை மறந்துவிடக் கூடாது.

உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தமிழர்களின் பிரதிநிதிகள் மலேசியாவின் தலைநகரமான கோலாலம் பூரில் கூடி தை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்துவிட்ட பிறகு, பூஜை வேளையில் பெரியவாள் சங்கராச்சாரியார் நீஷப்பாஷையான தமிழில் பேச மாட்டார் என்று சொல்லுகிற கூட்டம் தமிழ்ப் புத்தாண் டைப்பற்றியா பேசுவது?

யுகாந்திரமாக வந்ததை எல்லாம் மாற்றலாமா என்று அதி புத்திசாலிபோல துக்ளக் கேள்வி கேட்கிறதே - யுகாந்திரம் என்றால் எந்த ஆண்டு அதற்கான தொடக்கம் என்று சொல்ல முடியுமா? சரி, அவர்கள் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்கிற முறையில் ஒரு வினாவைக் எழுப்புகிறோம். அப்படி வந்த எதையும் மாற்றிக் கொள்ளவேயில்லையா?

நிர்வாணமாக அலைந்து திரிந்த மனிதன் பின் இலைகளால் உடையணிந்த மனிதன் படிப்படியாக மாறுதலுக்கு உட்படவில்லையா? மாறுதலின் அடையாளம் தானே புத்தி வளர்ச்சி என்பது - புத்தியைப் பயன்படுத் தினால் இதன் உண்மை விளங்கும், மாறுதலே கூடாது என்று ஒருவர் பேசுகிறார், எழுதுகிறார் என்றால் அவர் புத்தி இன்னும் வளரவேயில்லை; அந்த காட்டுவிலங்காண்டி காலத்திலேயே சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார் என்று தானே பொருள்படும்?

தீண்டாமை க்ஷேமகரமானது என்று அவாளின் சீனியர் சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொல்லி இருக்கிறார்- அவர் சொன்னார் என்பதற்காக அதனை ஆதரித்து இதே துக்ளக்கில் எழுதட்டுமே பார்க்கலாம் - ஜாமினில் வெளியே வர முடியாத அளவுக்கு சிறைக்கும் போக வேண்டியிருக்குமே!

இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம், ராம ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம் என்று நரேந்திர மோடியும், பிரவீன் தொகாடியாவும், அசோக் சிங்காலும் உளறிக் கொட்டுகிறார்களே - இவர்கள் யார்? குருக்களா சன்னிதானங்களா? மடாதிபதிகளா? இவற்றையெல்லாம் சொல்லுவதற்கு என்று திருப்பிக் கேட்க முடியாதா?

புராணத்தில் எழுதப்பட்டு இருக்கிறது என்பதற்காக இரண்யாட்சதன் பூமியைப் பாயாக சுருட்டிக் கடலில் விழுந்தான் என்பதை நம்ப வேண்டும் என்றுகூடச் சொல்லுவார்களோ!

பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் அல்லர் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
 
தொண்ணூறையும் தாண்டிய திராவிட இயக்கத் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களை பார்ப்பனர் மனம் போனவாறு தரம் தாழ்ந்து எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இவர்களின் ஜெகத் குருக்களின் வண்டவாளங்களை தெருமுனைக் கூட்டங்கள் மூலம் நார்நாராய்க் கிழிக்கத் தயங்க மாட்டோம் - எச்சரிக்கை!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...