Tuesday, January 20, 2015

கலாச்சாரக் காவலர்களா?

மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு ஆர்.எஸ்.எஸ். சாவி கொடுத்தால் ஆடுகிற பொம்மை என்பதை ஏற்கனவே நம்ப மறுத் தவர்கள்கூட இப்பொழுதும் ஆம், அப்படித்தான்! என்று நம்பும், வெளிப்படையாகப் பேசும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

கலாச்சாரக் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள். அந்தக் கலாச்சாரம் என்பது ஆரியப் பார்ப்பனக் கலாச்சாரமே!

காதலர் தினத்தை அவர்கள் எப்படி கணிக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் தெரியுமே! இப்பொழுது மத்திய தணிக்கைத் துறையில் தன் அருவருப்பான முகத்தை நுழைத்து வருகிறது பி.ஜே.பி. அரசு.

பஞ்சாபில் ஒரு பாபா! (சாமியார்) இருக்கிறார்; அவர் பெயர் ராம் ரஹீம் பாபா என்பதாகும். இவருக்குள்ள தனிச் சிறப்பு (?) என்ன தெரியுமா? தனது சீடர்களுக்கு முதற் கட்டமாக ஆண்மை நீக்கம் (அறுவைச் சிகிச்சை) செய்வதுதான்  இப்படித்தான் மனத்தை அடக்கி ஆள்கிறார்கள் போலும்! இதுவரை 400 பேர்களுக்கு மேல் இந்த வேலை நடந்திருக்கிறதாம்; இதன்மீது  அவரது சீடர்களில் ஒருவரான பரமத்சிங் என்பவர் காவல் துறையில் புகாரும் கொடுத்துள்ளார்.

இவர் தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்து கொள்வதில் ஆர்வவெறி மிகுந்தவர். தன்னை சீக்கிய மத குருவான குருநானக்கின் மறுபிறவி என்று கூறிக் கொள்கிறார்; சட்லஜ் நதிக் கரையில் மிகப் பெரிய அளவுக்கு மடம் ஒன்றையும் நிறுவியுள்ளார்.

தன்னைப்பற்றி மக்கள் மத்தியில் விளம்பரம் பெரிய அளவில் போய்ச் சேர வேண்டும் என்றால், சினிமாதான் சரியான கருவி என்று முடிவு செய்து கடவுளின் தூதர் என்ற பெயரில் ஒரு படம் எடுத்து வெளியிட்டுள்ளார்; அதில் அவரே அந்தக் கடவுள் தூதராகவும் நடித்துள்ளார்.

சீக்கிய மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியுள்ளது. குற்றப் புகாரில் சிக்கியுள்ள ஒருவர் எடுத்திருக்கும் இந்தப் படம் மூடநம்பிக்கையின் முழு முகவரியே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. விஞ்ஞான மனப்பான்மையையும் சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடி மகனின் கடமை (51h(A) என்ற சரத்துக்கு விரோத மானதும்கூட!

மத்திய தணிக்கைக் குழு இந்தப் படத்துக்கு அமைதி மறுத்து விட்டது - சரியான நடவடிக்கையே!
 
இதற்குப்பின் என்ன நடந்தது என்பது தான் முக்கியம். இந்தப் பாபாவின் சீடரும், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றவரும், மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன் ராத்தோட் என்பவர் தலையிட்டு அந்த சினிமா திரையிடப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தணிக்கைத் துறையின் ஆணையைப் புறக்கணித்து இந்தக் கேடு கெட்ட காரியம் நடந்துள்ளது. இதன்மூலம் ஒன்றைத் தெளிவாகவே புரிந்துகொள்ளலாமா?

இன்றைய மோடி தலைமையிலான பிஜேபி அரசு சட்ட திட்டங்களை மதிக்கத் தயாராக இல்லை; எந்த எல்லைக்கும் சென்று பாபாக்களின், சாமியார்களின் எடுபிடிகளாக உள்ளனர்; மூடநம்பிக்கைகளைப் பரப்புவதன் மூலமாகத்தான் தங்களின் மதவாத சிந்தனைக் கூடைக்குள் மக்களைக் கவிழ்த்துப் போடலாம் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் இந்தியில் பி.கே. என்ற முற்போக்குத் திரைப்படம் - மூடநம்பிக்கையின் முதுகெ லும்புகளையும், மூட்டு எலும்புகளையும் நொறுக்கும் திரைப்படத்தை எதிர்த்து வடமாநிலங்களில் இந்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பல் ரகளைகளில் ஈடுபட்டன. இவ்வளவுக்கும் அத்திரைப்படம் தணிக் கைக் குழுவால் அனுமதி பெறப்பட்ட ஒன்றாகும்.

அதைப்பற்றி எல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் எதிர்ப்பு நெருப்பைக் கொட்டினர். ஆனால், வெகு மக்களின் எண்ணமோ வேறுவிதமாக இருந்தது - இருக்கிறது. மிகப் பெரிய வசூலைக் குவித்து விட்டது. இந்தத் திரைப்படம் கடைசிக் கட்டமாக நீதிமன்றத்தை யும் நாடினர் இந்தக் கலாச்சாரக் காவலர். நீதிமன்றமோ அவர்களின் தலையில் பலமாகக் குட்டி உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அந்தத் திரைப்படத்துக்குப் போகாதீர்கள் என்று தீர்ப்பு அளித்துவிட்டது.

இந்த இடத்தில்  ஒன்றைக் கவனிக்க வேண்டும்; மூடநம்பிக்கையை முறியடிக்கும் - அறிவியல் மனப் பான்மையை - பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கும் திரைப்படம் என்றால் எதிர்ப்பு! மூடநம்பிக் கைகளுக்கு தீனி போடும் - பிற்போக்குச் சாமியார்கள் பற்றிய திரைப்படம் என்றால் சட்டத்தையும்  கிழித்துக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு ஆதரவுப் பச்சைக் கொடியைக் காட்டும் கும்பலுக்குப் பெயர்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்க் கும்பலின் கரசேவையாகும்.

இவர்களையும் இவர்களுக்குத் துணை போகும் மோடி அரசையும் வெகு மக்கள் அடையாளம் காண்பார்களாக


 
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...