Thursday, January 22, 2015

கங்கை இந்துக்களின் தனிச் சொத்தா?

கங்கையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து பல கிலோமீட்டர் கரைப்பகுதிகள் பிணநாற்றமெடுத்து அருவருப்பான நிலையில் இருக்கும் பட்சத்தில் கங்கை யில் பிணங்களை வீசுவது குறித்து சாமியார்கள் முடி வெடுப்பார்கள் என்று மத்திய நீர்வள மற்றும் கங்கை நீர் சுத்திகரிப்பு துறைக்கான அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.

சனிக்கிழமை அன்று அலகாபாத் கங்கைக் கரையில் சாமியார்கள் நடத்திய யாகத்தில் கலந்துகொண்டு உமாபாரதி கூறியதாவது, மத்திய அரசு கங்கையில் இந்து மக்கள் கொண்ட கொள்கைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காது, இந்துக்களின் நம்பிக் கையின் அடிப்படையில் தான் மோட்சமடைவதற்காக கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, உலகிலேயே கங்கை நதிமாத்திரம் தான் எலும்புகளைக்கூட மிகவிரைவிலேயே அரித்து தண்ணீரோடு கலந்துவிடும் தன்மை கொண்டது.
இதனடிப்படையில் தான் கங்கையில் உடல்கள் வீசப்படுகின்றன, மலர்கள், உடைகள் கங்கையில் வீசப்படுகின்றன என்றால் அவை நீண்ட நெடிய கங்கை கரையில் உரமாக மாற்றப்படுகின்றன.   மேலும் கங்கை நதிக்கரையில் மரங்கள் நடுவது குறித்து சாமியார்களிடம் கேட்டு இருக்கிறோம், இந்துமத சாஸ்திரங்களின் படி கங்கைக் கரையில் மரங்கள் நடுவதா வேண்டாமா என்பதை சாமியார்கள் தான் இறுதிமுடிவெடுப்பார்கள்.   கங்கை மாசுபடுவது இறந்த உடல்கள் மற்றும் கடவுளுக்கு சாற்றிய மலர்கள் மற்றும் ஆடைகளால் தான் என்று கூறுவது முட்டாள் தனமானது, நவீன காலத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் கங்கைக் கரையில் அமைந்துவிட்டன. இவற்றிலிருந்து வரும் கழிவுகளால் தான் கங்கை மாசடைந்து வருகிறது.

கங்கையை சுத்தப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது, ஆனால் அது ஒருபோதும் இந்த நாட்டின் மக்களாகிய இந்துக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக இருக்காது. கங்கைக்கரை முழுவதும் தடுப்புகள் அமைப்பது குறித்து மத்திய அரசு எந்த ஒரு முடிவை யும் எடுக்காது; அது அந்த அந்த மாநில அரசின் முடிவுகள், மேலும் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பது குறித்து எந்த ஒரு மாநில அரசு சாமியார்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். இந்துக்களின் நம்பிக்கையில் விளையாடவேண்டாம் என்று கர்ச்சிக் கிறார் அமைச்சர் உமாபாரதி.

கடந்த வாரம் கங்கையில் 200-க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தது குறித்து நேரிடையாக பதிலளிக் காமல் மத நம்பிக்கைகளை நாம் இழிவுபடுத்தக் கூடாது.உடல்கள் இன்றல்ல நேற்றல்ல; தொன்று தொட்டு கங்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால் இது குறித்து கூறுவதற்கு ஒன்றுமில்லை, இருப்பினும் சாமியார்கள் தான் இது குறித்து முடிவு செய்யவேண்டும், மேலும் திருவிழா காலங்களில் சாமி சிலைகள் கங்கையில் வீசுவதற்குப் பதிலாக கங்கைக் கரையில் பெரிய பள்ளங்களைத் தோண்டி அதில் கரைக்க வேண்டும் என்ற தொண்டு அமைப்பின் கோரிக்கைக்கு பதிலளித்த உமா பாரதி கங்கையை ஒரு சிறிய பள்ளத்தில் அடைக்க முடியுமா? என்று எதிர்க்கேள்வி கேட்டுள்ளார். என்னே தர்க்கம் இது? சிலைகளை குழிதோண்டி மூடமுடியாதா?

இந்து சாமியார்களைக் கேட்டு முடிவெடுப்பதற்கு கங்கை என்ன இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான தனிப்பட்ட சொத்தா? நாட்டின் பொதுச் சொத்து அல்லவா! இந்துக்களைத் தவிர வேற்று மதத்தவர்கள்

கங்கையில் நீராடக் கூடாது என்று கூட சட்டம் செய்வார்கள் போல தோன்றுகிறது.

கங்கை மாசுபடுவதற்கு முக்கிய காரணம் மனித உடல்களையும், கிழட்டு மாடுகளையும் எரியூட்டி எரிக்கப்பட்ட மனித சாம்பலையும், எலும்புகளையும் கங்கையில் வீசுவதுதான் என்பதை மறுக்கிறார் ஒரு மத்திய அமைச்சர் என்றால் மதம் அவர்களின் மதியை எப்படி எல்லாம் பாழ்படுத்தி இருக்கிறது! எதையும் இந்து சாமியார்கள் தான் முடிவு செய்வர்களா? ஆஸ்தான சாமியார்களைக்கூட அதிகாரப் பூர்வமாக அமைத்துக் கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடு மன்னர்கள் காலத்திற்குச் செல்லுகிறதா? எச்சரிக்கை!





No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...