Friday, January 23, 2015

அரசின் கொள்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்த்து பேசுகிறார்கள்

திராவிடர் விழிப்புணர்ச்சி 13ஆம் வட்டார மாநாடு:
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே எதிர்த்து பேசுகிறார்கள்



நன்னிலம், ஜன.22- மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்! என தமிழர் தலைவர் கருத்துரையாற்றினார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நேற்று (21.1.2015 மாலை நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு 13ஆம் வட்டார மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய கருத்துரை வருமாறு: வளர்ச்சி வளர்ச்சி என்று போட்ட சத்தத்தில், மயக்க பிஸ்கட்டில் ஏமாந்து இன்றைக்கு எட்டு மாதங்களுக்கு முன் ஓர் ஆட்சியை மத்தியில் உட்கார வைத்தார்கள் மக்கள் ஏமாந்தார்கள். ஆட்சிக்கு வந்தவர்கள் என்ன வளர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தினார்கள்!?

மதவாதத்தைக் கிளப்பி வருகிறார்கள். யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து! மனிதனுக்கு மதம் பிடித்தால் என்னவாகும்? ஒரு கட்சிக்கோ, ஆட்சிக்கோ மதம் பிடித்தால் என்ன ஆகும்? அதுதான் இப்பொழுது நடக்கிறது.

காந்தியைச் சுட்டுக் கொன்றவர்கள், இப்பொழுது கோட்சேவுக்குச் சிலை வைப்போம் என்கிறார்கள். ஒரு நாடு எப்பொழுது வளர்ச்சி அடையும்? அந்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இணக்கமாக கைகோர்த்து வாழ்ந்தால் தான் அந்நாடு வளர்ச்சி அடையும்.

ஆட்சியிலே உள்ளவர்களே சிறுபான்மை, பெரும் பான்மை பேசி மக்களை ஒருவரோடு ஒருவர் மோத விட்டால் அந்த நாடு வளர்ச்சி அடையுமா?

குஜராத்தில் என்ன நடந்தது? அது நாடு முழுவதும் நடைபெற வேண்டுமா? நாம் அதைஅனுமதிக்கலாமா? ஏற்கத்தான் முடியுமா?

120 கோடி மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கிக் கொண்டு தவிக்கிறது. எதை எதையெல்லாம் விற்கலாம் என்று திட்டம் போடுகிறார்கள் மத்தியில் உள்ள ஆட்சியாளர்.

இந்த லட்சணத்தில் ஒவ்வொரு வரும் நான்கு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒருவர் கூறுகிறார் - இன்னொரு சங்கராசசாரியாரோ - ஒவ்வொரு வரும் பத்துப் பிள்ளைகளைப் பெற்று  தள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள் - மத்தியில் ஆள்பவர்கள். இவற்றை யெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையை எதிர்த்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே பேசுகிறார்கள் - இதுதான் பிஜேபி ஆட்சியின் இலட்சணம்!

ஒரு பெண் எத்தனை குழந்தையைப் பெற்றுக் கொள் வது என்பதை ஆண்கள் முடிவு செய்யலாமா?

கருவைப் பத்து மாதம் சுமந்து பிரசவிக்கும் பெண்ணுக்கல்லவா அதன் வலியும் சுமையும் தெரியும்.

கேட்டால் கடவுள் கொடுக்கிறான் என்று சமாதானம் சொல்கிறார்கள். அந்தக் கடவுளிடமே சொல்லுங்கள். அவர்தான் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே! பெண்களின் கருப்பையை ஆண்களுக்கு மாற்றி வைக்கச் சொல்லுங்கள். பத்து மாதம் ஆண்கள் கருவைச் சுமந்து பிரசவிக்கட்டுமே! ஏற்றுக் கொள்வார்களா? (பலத்த சிரிப்பு - கை தட்டு!)

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சியில் ஒரு பக்கம் பார்ப்பனர் ஆதிக்கம்; இன்னொரு பக்கத்தில் கார்ப்பரேட்டு நிறுவனங்கள் இரண்டும் நாட்டைச் சூறையாடுகின்றன.

அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நிற்பதாக சத்தியம் செய்து கொடுத்துப் பதவி ஏற்கிறார்கள். அந்த அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார் பின்மைக்கு விரோதமாகப் பேசுகிறார்கள் - நடந்து கொள்கிறார்கள்.

இத்தகையவர்களை அடையாளம் காணுங்கள் என்று எச்சரிக்கவே திராவிடர் கழகம் நடத்தும் திராவிடர் விழிப்புணர்ச்சி மாநாடுகள்!

வீட்டுக்காரன் தூங்கலாம்; குறட்டை விட்டுக் கூடத் தூங்கலாம்; ஆனால், காவல்காரன் தூங்கலாமா? தூங்கத்தான் முடியுமா?

அந்தக் காவல்காரனாக இருந்துதான் திராவிடர் கழகம் எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன் என்ற பழமொழிதான் உங்களுக்குத் தெரியுமே! என்றார்.

தொடர்புடைய செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...