Saturday, February 8, 2014

தாழ்த்தப்பட்ட மக்களுடைய கல்வியின் தலையில் கை வைப்பதா?

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை - 8.2.2014


 தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது. 

ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் நிபந்தனை. 

இத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன் பெற்றனர். 

ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும். 

இந் நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள்  4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக அரசு கல்லூரியில் ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரத்தை மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பது  தான் புதிய ஆணையின் சாரமாகும். 

இந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

 தமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது. 

மாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன்? மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும். 

 ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். 

இல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  

கி.வீரமணி
 தலைவர்
 திராவிடர் கழகம் 

சென்னை
8.2.2014

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...