Tuesday, February 4, 2014

அண்ணா நினைவு நாள் சிந்தனை

இன்று அறிஞர் அண்ணா நினைவு நாள் (1969) உலக நாத்திகச் சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரசல் மறைந்ததும் இதே நாளில்தான் (1970).

அண்ணா அரசியலுக்குச் சென்றார்; ஆனால் அடிப்படையில் திராவிடர் இயக்கத்தின் சிந்தனை-  தந்தை பெரியார் அவர்களிடமிருந்து வாலிப வயதில்  அவர் வரித்துக் கொண்ட கொள்கைகள் நிலை பெற்றவை.

அந்தக் காலத்தில் எம்.ஏ., படித்து நம் இயக்கத்திற்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வருவது என்பது அரிதினும் அரிது; ஒரு அண்ணா துரை, ஒரு ஏ.பி. ஜனார்த்தனம் என்றுதான் சொல்லப்பட்ட கால கட்டம் அது.

திருப்பூரில் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்த நாள் தொட்டு, இந்த இயக்கத்தின் பால் தன்னை சங்கமித்துக் கொண்டார்.

அவர் எழுத்துகள் மணம் வீசக் கூடியவை. மனங்களைக் காந்தம் போல் ஈர்க்கக் கூடியவை; அவர் பேச்சு வசீகரமானது; கேட்டாரைக் கைபிடித்து இழுத்து வரும் ஈர்ப்பைக் கொண்டவை.

கருத்து - தந்தை பெரியார்; அதன் பிரச்சாரம் அண்ணாவுடையது. அந்தக் கால கட்டத்தில் டாக்டர் இரா.பி. சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் எல்லாம் அறிஞர் அண்ணாவிடம் வாதிட்டு தோற்றேன்! தோற்றேன்!! என்று கூறிக் கொண்டு பின் வாங்கியதெல்லாம் சாதாரணமானவைகளா?

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையிலும் இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை! என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் பதிவு செய்தாரே  - என்றென்றும் வரலாற்றில் ஒளிக்கற்றைகளை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பரிய பிரகடனம் அல்லவா அது!

1) சுயமரியாதைத் திருமணச் சட்டம், 2) சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல் 3) இந்திக்கு இடம் இல்லை, இரண்டே மொழிகள் தான் தமிழ்நாட்டில் (தமிழ், இங்கிலீஷ்) என்பன வற்றைச் சட்டமாக்கி தம்மை நிரந்தர நாயகராக நிலை நிறுத்திச் சென்றவர் அண்ணா.

அண்ணாவுக்குப்பின் தம் தலைமையில் ஆட்சியைத் தொடங்கிய மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இது சூத்திரர்களின் ஆட்சி! என்றே பிரகடனப்படுத்தி, வரலாற்றில் அழியாப் பதிவைச் செய்து அழியாப் புகழ் பெற்றாரே!
பெண்களுக்குச் சொத்துரிமை முதல் பெண்கள் மறுமலர்ச்சியில் பெரும் பாய்ச்சல் போன்ற அத்தியாயங்களை உருவாக்கியதால் மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர் எனும் வீறுமிக்க விருதுக்குச் சொந்தக்காரர் ஆனார்.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு, தமிழுக்குச் செம்மொழித் தகுதி, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என்று சமுதாயப் புரட்சியை நடத்திக் காட்டியவர் மானமிகு கலைஞர் அவர்கள்.

திராவிட இயக்கச் சித்தாந்தம், தந்தை பெரியார் ஊட்டிய உணர்வுகள் - இவற்றின் செயல் வடிவங் களாக அண்ணா, கலைஞர் ஆட்சிகள் மலர்ந்தன.
இன்று... இன்று.. அண்ணாவின் பெயரையும் தீரமிக்க திராவிட என்ற இன அடையாளக் கலாச் சாரங்களையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, அவற்றின்மீது ஆரியக் கலாச்சாரம் என்ற கள்ளிகளை விளைவிக்கும் ஆபத்தான போக்கு!

புத்தர் இயக்கத்தில் ஆரியம் புகுந்து சிதைத்தது போல, திராவிட இயக்கத்தில் ஆரியம் ஊடுருவி உருக்குலைக்கும் ஒரு வேலை துரிதமாகத் திட்டமிட்டு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

திராவிட பெயரைச் சொல்லிக் கொண்டே பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டே ஒரு பிரிவினர் மதவாதத்திற்கும், ஜாதீய வாதத்திற்கும் நடை பாவாடை விரிக்கிறார்கள். அண்ணா நினைவு நாளில் அவர்  கட்டிக் காத்த தந்தை பெரியார் தத்துவங்களை திராவிட இயக்க சித்தாந்தங்களை முன்னெடுத்துச் செல்ல உறுதி கூறுவோம்! மூடுதிரை போட்டு வருவோர்களை அம்பலப்படுத்துவோம் - வாழ்க தந்தை பெரியார்! வாழ்க அறிஞர் அண்ணா!



Read more: http://www.viduthalai.in/home/71-2010-12-25-09-37-00/74612-2014-02-03-11-55-48.html#ixzz2sKLWzUr3

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...