Thursday, December 19, 2013

தேவதாசி விண்ணப்பம்

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டு மென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்டசபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அதன் தத்துவம் என்னவென்றால், விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச்செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரி களால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.

ஏனெனில், அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது, அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்புகெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்கமுடியாது.

ஆனால், அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழாமல் மேலா மினுக்காய் இருந்து வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லு கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும்.

ஆதலால், அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூல கர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.

தவிர, மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம்.

ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து,

அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும், கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன.

தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும், அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது.

இப்படிச் சொல்லு வதானது, ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும் கடவுள் சித்தமும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்பது நமது அபிப்பிராயம்.

ஆனாலும், பெண்களுக்கு காவலும், கட்டுப்பாடும், நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை, கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

இவ்விஷயத்தில், உலகத்தில் உள்ள எல்லா மதமும் பழக்கத்தில் தனிமயமாகத்தான் நடந்து கொள்ளுகின்றது. ஆனால், இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இரு பாலர்க்கும் சரி சமானமான சுதந்திரம் இல்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.
- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.10.1927


ஸ்ரீமான் காந்தி

ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத்தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும்  வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று அய்ரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார்.

நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார்கள் ஆகவே, அவர் அவ்வளவு தூரம் அய்ரோப்பிய அரசாங்கத்திற்கும், அய்ரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர் களுக்கும்  பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகிறது.

இப்படி அய்ரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும், வரவேற்றுக் கொண்டாடத்தக்கவராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு, இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான அய்ரோப்பியரல்லாத பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும் அல்லவா?
- குடிஅரசு - கட்டுரை - 30.10.1927


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Read more: http://viduthalai.in/home/viduthalai/history-/71287-2013-11-30-11-36-55.html#ixzz2nzRerrrF

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...