Tuesday, September 17, 2013

ஓணம் - அதன் பின்னணி!

இன்று ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் புராணப் பண்டிகையின் அடிப்படையைப் பார்த்தால் அதில் இழையும் பார்ப்பனச் சூழ்ச்சி. தந்திரத்தின் உண்மை முகம் தெரியும்.
மாவலி என்பவன் சிறந்த அரசன். தன்னைத் தேடி வருவோர்க்கு வாரி வழங்கிய கொடை வள்ளல். மக்கள் மத்தியில் பேரும், புகழுடனும் திகழ்ந்தான்.
அவனைக் கொன்றொழிப்பதற்கு மகாவிஷ்ணு, வாமன (குள்ளப் பார்ப்பான்) அவதாரம் எடுத்தானாம்.
அந்தக் குள்ளப் பார்ப்பானாகிய மகாவிஷ்ணு வந்தார்க்கு வாரி வழங்கிய மாவலியிடம் சென்று யாகம் செய்வதற்கு மூன்றடி மண் கேட்டானாம். அட்டியின்றி வழங்கினேன் என்றானாம் மாவலி.
அந்தக் குள்ளப் பார்ப்பான் என்ன செய்தானாம்? ஓரடியால் பூமியை அளந்தானாம் - இன்னொரு அடியால், வானை அளந்தானாம்.
மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்டானாம்; தன் தலையில் வைக்கும்படி மாவலி சொன்னானாம். அதன்படி தலையில் காலை வைத்து அழுத்தினானாம், மாவலி மாண்டானாம். அப்பொழுது உனக்கு என்ன வரம் வேண்டும் என்று குள்ளப் பார்ப்பானாகிய மகாவிஷ்ணு கேட்க மாவலிச் சக்ரவர்த்தியோ நான் கொல்லப்பட்ட நாளில் எங்கள் மக்களை நேரில் வந்து பார்க்கும் பாக்கியம் தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு அருள்புரிய வேண்டும் என்றும் இறைஞ்சினானாம். அவ்வாறே அளிக்கப்பட்டதாம். அந்த நாள் தான் இந்த ஓணம் பண்டிகையாம்.
வீட்டுக்கு வீடு மாவலியை வரவேற்க வாசலில் மாக்கோலம் போடுகிறார்களாம்.
இதில் முட்டாள்தனமும், சூழ்ச்சியும், வஞ்சகமும் புகுந்து விளையாடுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
புராணக் கதைகள், மகாவிஷ்ணு அவதாரம் என்று சொல்லப்படும் அனைத்துமே ஆரியப் பார்ப்பனர்கள் திராவிடர்களை, அரக்கர்கள் என்று கூறி ஒழித்ததுதான்.
தீபாவளிக் கதையில் நரகாசுரனை, விஷ்ணு ஒழித்தான் என்றும், அவன் கொல்லப்பட்ட நாளை எல்லாரும் கொண்டாட வேண்டும் என்று நரகாசுரன் கேட்டுக் கொண்டான்; அதற்கு விஷ்ணு வரம் கொடுத்தான். அதன்படி நரகாசுரன் கொல்லப்பட்ட நாளை தீபாவளி என்று கொண்டாடுவதில்லையா? அது போன்றதுதான் மாவலி, மகா விஷ்ணுவால் கொல்லப்பட்ட நாளும் ஓணமாகக் கொண்டாடப் படுகிறது. மாவலி வாரி வழங்கிய வள்ளல்; நல்லாட்சி நடத்திய நாயகன் - அவனை ஏன் மகாவிஷ்ணு கொல்ல வேண்டும் -  அதுவும் சூழ்ச்சியால் கொல்ல வேண்டும்? சூழ்ச்சி என்று வந்தால், குள்ளப் பார்ப்பானாக வடிவம் எடுப்பதையும் காண தவறக் கூடாது.
கேட்டது மூன்றடி மண்தானே? மண்ணில்தானே மூன்று அடி கேட்க வேண்டும். கேட்டுப் பெறப்பட்ட வரத்துக்கு மாறாக மண்ணை ஓரடியாலும், ஆகாயத்தை மற்றொரு அடியாலும் அளக்கலாமா?
யாகத்தை பூமியில் மண்ணில்தானே செய்ய முடியும்? ஆகாயத்திலா யாகம் செய்ய முடியும்?
இது போன்ற பகுத்தறிவுக் கேள்விகளுக்குப் புராணத்தில் இடமில்லை. அந்தப் புராண முட்டாள் தனமான அழுக்கு மூட்டைக் கதைகளைக் கொட்டி அளக்கும் ஏடுகள் நடத்துவோராலும் சொல்ல முடியாது.
தன் பக்தனை கடவுள் சோதிக்கிறான் என்பதே கூட கடவுள் சக்திக்கு மாறானதுதான்; சோதிக் காமலேயே தெரிந்து கொள்ளும் ஆற்றல் கடவுளுக்கு இல்லையா? மனிதனை அழிக்க கடவுள் அவதாரம் எடுக்க வேண்டுமா? தன்னால் படைக்கப்பட்டவனை கடவுள் ஏன் அழிக்க ஆசைப்பட வேண்டும்? பெற்ற தாய், தன் பிள்ளையைக் கொல்ல ஆசைப்பட்டால் அவள்தாய்தானா?
சரி.. அன்றைக்கு அதர்மத்தை அழிக்க ஆண்டவன் அவதாரம் எடுத்தான் என்று கொட்டி அளக்கிறார்களே - இப்பொழுது நாட்டில் அதர்மமே நடக்கவில்லையா?
ஆண்டவன் அவதாரம் எடுத்து இப்பொழுது நேரில் வர வேண்டியதுதானே? ஏன் வரவில்லை?
ஒரு பெரியார் தோன்றி மக்கள் மத்தியிலே விழிப் புணர்வை ஏற்படுத்தி விட்டார் - வாமன அவதாரக் கதை எல்லாம் இறந்த காலத்தில் சொல்லப்படும் அளப்புகளே - நிகழ்காலத்தில் நடக்காது - ஏன் எனில் அவை எல்லாம் பொய் மூட்டைகளே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...