Tuesday, August 6, 2013

எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?

  • எய்ம்ஸ்  போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?
  • டி.பி. யாதவ், முலாயம்சிங் போன்றோர் எதிர்க்குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது!
ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து
டில்லியில் திராவிடர் கழகம் முன்னின்று போராட்டம் நடத்தும்!
தோழர்களே தயாராவீர்! தயாராவீர்!!

தமிழர் தலைவர் அறிவிப்பு
8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை  எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி மருத்துவ நிறுவனங்களில் இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித் துள்ளார்; அறிக்கை வருமாறு:
மத்திய அரசின் சார்பாக, டில்லியில் நடைபெறும் மிகப் பெரிய மருத்துவக் கல்வி அமைப்பு (எய்ம்ஸ்) என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழகம் ஆகும்.
அதில் உள்ள உயர்ஜாதி வர்க்க நிர்வாகத்தின் தலைவர்கள், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான இடஒதுக்கீடு, சமூக நீதியைப் புறக்கணித்து, இடஒதுக்கீட்டை  நடைமுறைப் படுத்தாமல் உள்ளனர். இதன் காரணமாக நீண்ட காலமாகவே சமூகநீதிப் போராளிகள் போராட் டங்களை நடத்தி வருகின்றனர்!
உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி வர்க்கம்!
உச்சநீதிமன்றத்தில் உள்ள உயர்ஜாதி வர்க்கம் பல நேரங்களில் இந்த சமூக நீதியை அது அரசியல் சட்டத்தின் மாற்றப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத அடிக்கட்டுமானப் பகுதி (Basic Structure of the Constitution) என்ற போதிலும்,  வேலியே பயிரை மேய்ந்த கதை போல,
உச்சநீதிமன்றத்தில் அரசியல் சட்ட அமர்வு, (5 நீதிபதிகளைக் கொண்டது) எய்ம்ஸ் (AIIMS) போன்ற அமைப்புகளில் இடஒதுக்கீடு தேவை யில்லை என்று தீர்ப்பு  அளித்திருப்பது - கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் சமூக அநீதியாகும்.
இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளை - அதுவும் பறிக்கப்படாத உரிமைச் சாசனப் பகுதியான சமூகநீதியாம் இடஒதுக் கீட்டினை - இப்படி மறுத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளிப்பது  - அரசியல் சட்ட விரோதப் போக்கு மட்டுமல்ல;
அரசியல் சட்ட விதிகளையே செயல்படாமல் செய்யும் (Fraud on the Constitution) செயலாகும் இது!
ஒன்பது நீதிபதிகளின் தீர்ப்பு
மண்டல் கமிஷன் வழக்கு - இந்திரா சகானி வழக்கினை - அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு பற்றிய எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு அளிக்கும் வகையில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட முழு பெஞ்ச் விசாரித்தது. இடஒதுக்கீடு செல்லும் - செயல்படுத்தப்படல் வேண்டும் என்று தீர்ப்பும் கூறியுள்ளது;  இந்நிலையில் மீண்டும் மீண்டும் தனித்தனியே இப்படி வழக்குகளைப் போட்டு, அவைமீது தீர்ப்பு வழங்கி, கட்டடத்தின்  மூலக் கல்லை - கட்டடத்தையே இடிக்க முனைவதற்குப் பதிலாக கற்களை மெதுவாகப் பிடுங்கி - உடைத்துக் கொண்டே இருப்பது - என்பது சமூகநீதிக்கெதிரான ஒரு சதியாக நடைபெற்று வருகிறது.
80 விழுக்காடு மக்களுக்கு விரோதமான மக்கள் விரோதப் போக்குத்தான் இது என்பதை நாம் சுட்டிக் காட்ட விழைகிறோம்.
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி ஒடுக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, இது போன்ற பிற்போக்கான சமூகநீதிக்கு எதிரான தீர்ப்புகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க முன் வர வேண்டிய தருணம் இது!
வரவேற்கத்தக்க நாடாளுமன்றத்தில் சமூகநீதிக் குரல்!
நேற்று நாடாளுமன்றத்தில் ஜீரோஅவர் (Zero hour) என்ற கேள்வி நேரத்தின்போது இதை வலியுறுத்திய அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் சிறப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளார்!
எய்ம்ஸ் அமைப்பு பற்றிய இத்தீர்ப்பு இதற்கு மட்டுமல்லாது இதுபோன்ற பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப் படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுபோலவே சமாஜ் வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் (யாதவ்) அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பி.எல். பூனியா எம்.பி., அவர்களும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சார்ந்த தாராசிங் சவுகான் எம்.பி. அவர்களும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான இத்தீர்ப்பைக் கண்டித்து, இதற்கு நாடாளுமன்றமும், மத்திய அரசும் விடிவு, தீர்வு - காண வேண்டியது அவசர அவசியம் என்பதை வலியுறுத்தி உள்ளனர்!
இது கட்சி அரசியல் பிரச்சினை அல்ல; சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டிய மிக இன்றியமையாத வாழ்வுரிமை, (கல்வி உரிமை - உத்தியோக உரிமைப் பிரச்சினைகளை உள்ள டக்கியது) பிரச்சினை ஆகும்!
திராவிடர் கழகம் முன்னின்று டில்லியில் போராட்டம்!
உடனடியாக இத்தீர்ப்பின் தீய விளைவான - இடஒதுக்கீடு மறுதலிப்பினை எதிர்த்து அனைவரும் சேர்ந்து, ஓரணியில் நின்று போராட உடனடியாக முன் வர வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க., போன்ற அமைப்பு களும் இதில் உடனடியாகக் குரல் கொடுக்க முன் வர வேண்டும்.
இதை வலியுறுத்தி நாடாளுமன்றம் நடைபெறும் நாள்களுக்குள்ளேயே ஒரு நாள் விரைவில் டில்லியில் திராவிடர் கழகம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு ஆகிய அமைப்புகளும், ஒத்த கருத்துடன் நம்முடன் போராட முன்வரும் சமூகநீதிக் கட்சிகள், அமைப்புகளையும் இணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.
டில்லி சமூக நீதிப் போராட்டத்தில் திராவிடர் கழகம் - (அநேகமாக நானே சென்று) கலந்து கொள்ளுவோம்!
இன்னும் ஒரு சில நாள்களில் - கால தாமதம் செய்யாமல் நடத்திட சமூகநீதியைப் பாதுகாக்கும் மாபெரும் பணி செய்ய பருவம் பாராது புறப்படத் தயாராகி விட்டோம்!
தோழர்களே தயாராவீர்!
வாய்ப்புள்ள அத்துணைத் தோழர்களும், அமைப்புகளும் டில்லி நோக்கி வரத் தயாரா குங்கள்!
காலதாமதம் கூடாது; ஆறிய கஞ்சி பிறகு பழங் கஞ்சியாகிவிடும்,
எனவே ஆயத்தமாவோம்! தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை   
6.8.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...