Monday, August 26, 2013

கலகலப்பாய் ஒரு கலகக்குரல்

மறக்கமுடியுமா?
கலகலப்பாய் ஒரு கலகக்குரல்
கவிஞர் நந்தலாலா


நடிகவேள் எம்.ஆர். இராதாவுக்கும், திருச்சிக்கும் ஏகப்பட்ட தொடர்பு உண்டு. தமிழக நாடக வரலாற்றில், ஒரு நாடகம் சற்றொப்ப 3500 முறை நடத்தப்பட்டது என்றால் அது எம்.ஆர். இராதாவின் இரத்தக் கண்ணீர் மட்டும்தான். அதுமட்டுமல்ல, அது நாடகமாக வந்து, திரைப்படமாக வந்த பிறகும், அது நாடகமாக நடிக்கப்பட்டது.

எம்.ஆர். இராதா நல்லவேளை திரைப்படங்-களில் நடித்தார். ஒருவேளை அவர் திரைப்-படங்களில் நடிக்காமல் போயிருந்தால் அவர் எப்படி நடிப்பார் என்று நமக்குத் தெரியாமல் போயிருக்கும். எம். ஆர். இராதா சொல்லும் போது, நான் ஒய்வு பெற்ற பிறகுதான் திரைப்படங்களுக்கு வந்தேன் என்றார்.எம்.ஆர். இராதா திரைப்படங்களை இளைஞர்கள் கூர்ந்து பார்க்க வேண்டும். சிவாஜிகணேசன் நடித்த படங்களில் இராதாவின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். தமிழ்நாட்டின் கதாநாயகன்தான் உண்மை-யான தமிழ்ச் சமூகத்தின் வில்லன். தமிழ்ச் சமூகத்தின் நல்லவன்தான் உண்மையான தமிழ்ச் சமூகத்தின் கதாநாயகன். நீங்கள் தமிழ்த் திரைப்படங்களை தொடர்ந்து கவனித்து இருந்தால், கன்னட நாட்டில் பிறந்த நடிகை கண்ணாம்பாள் சுத்தத் தமிழ் பேசுவார். சிவாஜி கணேசன் ஏறக்குறைய கர்ஜனை செய்வார். எஸ்.எஸ். இராஜேந்திரன் தமிழ் ஏறக்குறைய வீணை வாசிப்பது போல சுத்தமாக இருக்கும். பி.எஸ்.வீரப்பா மீட்டர் கணக்கில் சிரிப்பார். தமிழ்த் திரைப்படங்கள் முழுவதும் தூய தமிழ் பேசிய போது, தமிழ்நாட்டின் ஒரே ஒரு தமிழ் நடிகன்தான் மக்கள் தமிழ் பேசினான்; கொச்சைத் தமிழ் பேசினான். இதிலிருந்து வரலாறு என்ன பதிவு செய்திருக்கிறது என்றால், திரைப்படங்களில் தூய தமிழ் பேசியவர்களால் சமூகத்திற்குப் பயன்ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் கொச்சைத் தமிழ் பேசிய இராதாதான் தமிழரைச் சுத்தமாக்கினார் என்பது தமிழகத்தின் வரலாறு. எம்.ஆர். இராதா முன்னிறுத்திய அற்புதமான செய்தி என்னவெனில், அவர் கலையுலகில் ஒரு கலகக்குரல். நீங்கள் நன்கு பதிவு செய்து கொள்ளுங்கள். எம்.ஆர். இராதா தமிழ்ச் சமூகத்தின் கலகக்குரல், அல்லது கலகம் செய் என்று சொன்னவர். உண்மையிலேயே ஒரு பெயரைச் சொன்னால் இந்த நாடு அதிர்ந்தது என்று சொன்னால், அது எம்.ஆர். இராதாவின் பெயர்தான்.எம்.ஆர். இராதாவைப் போல பிம்பங்களை உடைத்தவர் நாடக உலகிலும், திரையுலகிலும் எவருமே இல்லை, வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் அவர் நடித்த காட்சியை, அவர் பாடலைக் கேட்டுப் பாருங்-கள். ஓர் ஆழ்ந்த கலகம் அவரின் நடவடிக்கை முழுவதும் இருந்தது. அதே போல அவரிடம் இருந்த துணிச்சலும் அற்புதமானவை.

இன்றைக்கு இராமர் பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்தப் பாதுகாப்பும் இல்லாத ஒரு கலைஞனாக இருந்த இராதா திருச்சியில்தான் நாடகம் போட்டார் தேவர் மன்றத்தில். மன்றத்திற்கு வெளியே ஒரு சுவரொட்டியும் ஒட்டினார். அதில் உள்ளே வராதே என எழுதியிருந்தார். என் நாடகத்தைப் பார்த்து யாருக்காவது மனம் புண்பட்டால் அவர்கள் என் நாடகத்திற்கு வரவேண்டாம் எனக் கூறியிருந்தார். இது எவ்வளவு பெரிய மேதைமை தெரியுமா! எம்.ஆர். இராதாவுக்கு இராமன் என்கிற சித்திரத்தின் பிம்பத்தைத் தூளாக்க வேண்டும். எப்படி ஆக்குவது மணிக்கணக்காகப் பேசியா? அது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதைப் பேச்சாளர் பேசிவிட்டு போயிடுவார். கலைஞனுக்கு அது தேவையில்லை. நீங்கள் இராதாவைநுட்பமாகக் கவனிக்க வேண்டும். நாடகமேடையில் இராமாயண நாடகத்தின் போது, 2 பக்கமும் இராமாயணம் தொடர்பான ஆராய்ச்சி நூல்களை அடுக்கி வைத்திருக்கிறார். இந்த நாடகத்தில் வருகிற காட்சிகள் மீது சந்தேகம் வந்தால் இந்தப் புத்தகங்களில் அதற்கு பதில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நாடகம் போடுகிறார். இன்றைக்கு பிம்பங்களை உடைப்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. சாதாரண சிறிய நடிகர் கூட பெரிய பிம்பத்தை வைத்திருக்கிறார். ஆனால் எம்.ஆர். இராதா பிம்பங்களை உடைக்கும் அற்புதமான காரியங்களைச் செய்தார்.ஒரு சமயம் இரத்தக் கண்ணீர் நாடகத்தைத் திரைப்படமாக்க வேண்டுமென நேசனல் பிக்சர்ஸ் பெருமாள் எம்.ஆர். இராதாவிடம் வருகிறார். எம்.ஆர். இராதா 5 திரைப்படங்களில் நடித்து முடித்து-விட்டு மீண்டும் நாடகத்தில் நடிக்க வந்தவர். பொதுவாக நாடகத்தில் நடித்தவரெல்லாம் திரைப்படத்திற்குப் போனதுதான் வரலாறு. ஆனால் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து, நாடகத்திற்கு வந்த ஒரே கலைஞர் எம்.ஆர்.இராதாதான். மறந்துவிடக் கூடாது!

இரத்தக் கண்ணீரைத் திரைப்படமாக்க வேண்டும் என பெருமாள் சொன்னபோது, எம்.ஆர். இராதா 3 நிபந்தனைகளை வைக்கிறார். ஒன்று, தினமும் நாடகம் நடத்தி முடித்து, இரவு 12 மணிக்கு மேல்தான் படத்தில் நடிக்க வருவேன். இரண்டு இரத்தக் கண்ணீர் நாடகத்தின் இறுதியில் தன் மனைவியை தன் சகநண்பனுக்குத் திருமணம் முடிப்பதை கண்டிப்பாய் காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டும். மூன்றாவதாக எனக்கு ஊதியமாக 1,25,000 வேண்டும் என்றார். நாடகக் கலைஞனாக இருந்து உச்சநிலையில் இருந்தவர் அவர்.

இராமயண நாடகத்தில் இராமனாக வேடம் போட்டு முதல் காட்சியில் வெளிவருகிறார் எம்.ஆர்.இராதா. வந்ததும் என்ன செய்கிறார் தெரியுமா? ஒரு தூண் மீது கால்களை வைத்துக் கொண்டு சரக், சரக் என சொறிகிறார். பொதுவாக ரசிகர்கள் இப்படி சொறிகிறவர்-களை கதாநாயகர்களாக ஏற்க மாட்டார்கள். ஏன்னா சொறிந்து கொண்டு நிற்பதெல்லாம் சாதாரண ஒரு மனிதனின் வேலை. அப்படி ஒரு கதாநாயகனே சொறியாமல் இருக்கும் போது ஒரு கடவுள் சொறிவாரா? சொறிய முடியாத கடவுளை எல்லாம் சொறிய வைத்தவர் எம்.ஆர். இராதா. மறந்துவிடக் கூடாது! இந்தப் பிம்பங்களை உடைத்தெறிவது என்பது இராதாவின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. அவர் சிறுவயது முதலே கலக்காரராகவே இருந்து வந்துள்ளார். டி.ஆர். மகாலிங்கத்தோடு எம்.ஆர்.இராதா சிறுவயதில் நடிக்கிறார். அப்பவெல்லாம் நாடகக் கொட்டகைகளில் பார்ப்பன சிறுவர்களுக்கு ஒரு பந்தி, மற்றவர்-களுக்கு ஒரு பந்தியும் இருந்தது. ஏன் நம்ம கூட இவங்க சாப்பிட மறுக்கிறார்கள்? என இராதா யோசனை செய்கிறார். ஒருமுறை டி.ஆர். மகாலிங்கத்திற்குக் கொடுத்த காபியை எடுத்து பாதி குடித்துவிட்டு, பாதி வைத்து விடுகிறார். அந்தக் காபியை டி.ஆர். மகாலிங்கம் குடித்து-விட்டு உயிரோடு இருப்பதை இராதா பார்க்கிறார். நாம் சாப்பிட்டதை இவர் சாப்பிட்டார் ஒன்றும் ஆகவில்லையே, பிறகு ஏன் ஒன்றாகச் சாப்பிட மறுக்கிறார்? என அவரே பின்னாளில் எழுதினார்.

அன்றைய நாள்களில் நாடகங்கள் தொடங்கு-வதற்கு முன்னால் ஜெனரேட்டருக்கு தீபாரா-தனை காட்டி, சூடம் கொளுத்துவார்கள். அப்படித்தான் நாடகக் கொட்டகை உரிமையாளர் ஒருவர் தீபமெல்லாம் காட்டி-னார். ஆனால் ஜெனரேட்டர் ஒடவில்லை. எம்.ஆர். இராதா ஒரு கார் மெக்கானிக் மற்றும் நல்ல எலக்ட்ரீசியன். நாடகக் கொட்டகை உரிமையாளர் இராதாவிடம் வந்து, ஜெனரேட்ட-ரைச் சரி செய்து தரும்படி கேட்கிறார். -உடனே எம்.ஆர். இராதாவும், சிறிது நேரத்தில் சரி செய்துவிடுகிறார். சரி செய்து விட்டு கொட்டகை உரிமையாளரிடம் சென்று உங்க செருப்பைக் கொஞ்சம் கொடுங்கள் எனக் கேட்கிறார். எதுக்கு? என அவர் கேட்கிறார். இல்லை கொடுங்கள் எனக் கேட்டு வாங்கி இராதா, ஜெனரேட்டரை செருப்பா-லேயே அடிக்கிறார். அடித்துவிட்டு உரிமை-யாளரிடம், இப்போ ஜெனரேட்டரைப் போடுங்கள் என்கிறார். ஜெனரேட்டர் ஓடத் தொடங்கியது. எம்.ஆர். இராதா சொன்னாராம் ஜெனரேட்டர் தீபம் காண்பித்தாலும் ஓடும், செருப்பால் அடித்தாலும் ஓடும் என்றாராம்.

அதேபோல போர்வாள் எனும் நாடகத்தை எழுதிய சி.பி. சிற்றரசை சிலர் பொதுமேடையில் கிண்டல் செய்தனர். எந்த ஊருக்கு சிற்றரசு எனக் கேட்டனர். உடனே இராதாதான் இவர் நாடகத்தில் பதில் சொன்னார். இராஜ-கோபாலாச்சாரியார் என்பவரைச் சக்கரவர்த்தி என்றும் அழைப்பார்கள். அவர் எந்த ஊருக்கு சக்கரவர்த்தியோ, அதற்குப் பக்கத்து ஊருக்குத் தான் எங்காளு சிற்றரசு எனப் பதில் சொன்னார். எம்.ஆர். இராதா குறித்து சிவாஜி ஒருமுறை கூறினார். திரையுலகில் என் முகத்திற்கு அருகே வேறொரு நடிகரின் முகம் வருகிறது என்றால் அதைக் கண்டு அஞ்ச-மாட்டேன். அண்ணன் இராதாவின் முகம் வந்தால் நான் எச்சரிக்கையாக இருப்பேன் என்று சொன்னார்.

பத்திரிகைக்காரர் ஒருவர் இராதாவிடம் ஒரு கேள்வி கேட்டார். இவ்வளவு அற்புதமாக நடிக்கின்றீர்கள், துணிச்சலாக இருக்கின்றீர்கள், இந்நிலையில் நீங்கள் முதலமைச்சர் ஆகிவிட்-டால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்கிறார்.

இராதா சொல்கிறார், இப்படிக் கேள்வி கேட்பவரையெல்லாம் தூக்கில் போட வேண்டும் என்று சொல்லிவிடுவேன் என்கிறார். என் பிழைப்பு நடிப்பு. உடனே முதலமைச்சர் ஆகிவிட முடியுமா? என்றும் கேட்டார். இன்றைக்கு நடிகர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து-விட்டார்கள். ஒருமுறை பெருந்தலைவர் காமராசர் எம்.ஆர்.இராதாவைப் பிரச்சார பணிக்கு அழைக்கிறார். இராதாவும் ஒப்புக் கொள்கிறார். உடனே இராதாவின் பிரச்சாரச் செலவு-களுக்காக காமராசர் ரூ.10,000 பணத்தை அவரின் வீட்டிற்கு கொடுத்துவிடுகிறார். ஆனால் இராதா பணத்தை வாங்க மறுத்து-விட்டார். அப்போது இராதா சொன்னார். பணத்தை வாங்கிக் கொண்டுதான் பேசுவதாக இருந்தால், இதைவிட அதிக பணம் வைத்-துள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு பேசியிருப்பேன் எனச் சொல்கிறார்.

பிறகு சொன்னார் பெரியார் ஆதரிக்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக நானும் ஆதரிக்கிறேனே தவிர வேறொன்றுமில்லை. இதைப் பெருந்தலைவரிடம் சொல்லிவிடுங்கள் எனப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து-விடுகிறார். இதைக் காமராசரிடம் சொன்ன போது தமிழ்நாட்டில் பெரியாரைப் போன்ற தலைவர்கள் இருப்பது மிகுந்த பெருமைக்-குரியது. ஏனெனில் இராதா போன்ற தொண்டர்கள் வேறு யாருக்குக் கிடைத்-திருக்கிறார்கள் என காமராசர் சொன்னார்.

உதகையில் ஒருமுறை திரையரங்கப் படப்பிடிப்பு நடக்கிறது. வேடிக்கை பார்க்க மக்கள் திரளாகக் கூடிவிட்டனர். அப்போ ஒரே சத்தமாக இருக்கிறது. உடனே எம்.ஆர். இராதா என்ன சத்தம்? எனக் கேட்கிறார். நடிகர்களைப் பார்க்க மக்கள் கூட்டமாக வந்துள்ளனர் எனச் சொல்கிறார்கள். உடனே எம்.ஆர்.இராதா அணிந்திருந்த டிராயருடன் வெளியே வருகிறார்.

எம்.ஆர்.இராதா கூட்டத்தினரிடம் கேட்-கிறார், எல்லோரும் எங்க வந்தீங்க? ஒருவர் சொன்னார், நடிகர்களைப் பார்க்கத்தான் வந்தோம் என்கிறார். எல்லோரும் என்னை மாதிரிதான் உள்ளே இருக்காங்க. இப்ப நான், அசிங்கமாக இருக்கிறேனே அதே போல்தான் எல்லோரும் இருக்காங்க. ஏய்! தெரிஞ்சுக்க மேக்கப் போட்டாதான் நல்லா இருப்பாங்க, இல்லைன்னா உங்களைவிட அசிங்கமா இருப்பாங்க எனச் சொல்லி மக்கள் கூட்டத்-தைக் கலைத்துவிட்டார். ஆக, நடிகன் என்கிற பிம்பத்தை உடைத்தார். அதே போல தலைவர்கள் என்கிற பிம்பத்தைத் தூளாக்-கினார். ஆனால் நல்ல விசயத்தைக் கொண்டாடியதில் இராதா மிகச் சிறந்த கலைஞன். என்.எஸ்.கே இறந்து போகிறார். இராதாவுக்குச் செய்தி வருகிறது. இவரும் போகிறார். அங்கு என்.எஸ்.கே நெற்றியில் விபூதி பூசப்பட்டுள்ளது. அதைக் கண்ட இராதா வருத்தப்படுகிறார். எவ்வளவு பகுத்தறிவு பேசிய கலைஞன்! அவருடைய நெற்றியில் திருநீறா? எனக் கவலைப்பட்ட இராதா நேராக வீட்டில் உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்லி விபூதியைத் துடைத்து-விட்டு, சவ ஊர்வலத்தை முன்னின்று நடத்தி-னார். அதே போல இசை மேதை இராஜரத்-தினம் இறந்த போது தன்னுடைய காரில் ஏற்றி இடுகாடு வரை சென்று சவஅடக்கம் செய்தது மட்டுமல்ல, இராஜரத்தினம் எந்த இசைக் கருவியின் மூலம் தமிழ்நாட்டில் புகழ்-பெற்றாரோ, அந்த நாதஸ்வரத்தை 43 அடியில் செய்து அவரின் சமாதியில் வைத்தவர் எம்.ஆர்.இராதா என்பதை யாரும் மறந்து-விடக்கூடாது.

ஒருமுறை செங்கல்பட்டில் அண்ணா முன்னின்று நடத்திய நடிகர்கள் மாநாட்டிற்கு பெரியார் தலைமை வகிக்கிறார். அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப் பெரிய நடிகர்கள். பி.யு.சின்னப்பா, எம்.கே. இராதா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போது பெரியார் பேசுகிறார். நீங்க ஒவ்வொருவரும் ரூ.50,000 சம்பளம் வாங்குகிறீர்கள். இது என்ன நியாயம்? எனப் பெரியார் கேட்கிறார். நடிகர்கள் ஏற்பாடு செய்த மாநாட்டில் தான் பெரியார் இப்படிப் பேசுகிறார்.

உங்களுக்கு ரூ.50,000 சம்பளம் எனக் கேள்விப்படுகிறேன். ஆனால் விவசாயிகளுக்கு 5ரூபாய் கூட சம்பளமாகக் கொடுப்பதில்லை. நீங்கள் எல்லாம் என்ன விவசாயிகளைவிட உயர்ந்தவர்களா? எனப் பெரியார் பேசுகிறார். இதனால் நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பெரியார் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டுமென நடிகர்கள் முடிவு செய்கின்றனர். உடனே என்.எஸ்.கே மேடையில் ஏறி ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறார். அய்யா, நான் இத்தனைப் படத்தில் நடித்தேன், இவ்வளவு சம்பளம், அதில் நலிந்த நாடக நடிகர்களுக்கும் மற்றும் பலருக்கும் உதவிகள் செய்துள்ளேன் என்கிற ஒரு கணக்கைச் சொல்கிறார்.

உடனே பெரியார் ஒலிபெருக்கியின் முன்வந்து, இவ்வளவும் கேட்ட பிறகு சொல்கிறேன் கிருஷ்ணன் வாழ்க, கிருஷ்ணன் மட்டும் வாழ்க என்று கூறுகிறார். இப்படி நடிகர்களை விமர்சித்த பெரியார் தம் வாழ்வில் ஒருவருக்கு மன்றம் அமைத்தார் என்றால் அது எம்.ஆர்.இராதாவுக்குத்தான். பெரியாரே முன்னின்று இராதா மன்றம் என்ற ஒன்றை அமைத்தார். வி.பி.சிந்தன் எதிரிகளால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் கிடந்த போது, எம்.ஆர். இராதாவும் மருத்துவ-மனையில் இருந்தார். நடிப்பை விட்டுவிட்டு என்னுடனே இருக்கின்றீர்களே என வி.பி. சிந்தன் கேட்ட போது இராதா சொன்னார். எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள். உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என அருகிலேயே இருந்தார். வாழ்வில் தாம் நேசித்த எல்லா பகுதிகளையும் அப்பழுக்கற்ற முறையில் நேசித்தவர் இராதா. 1907 இல் ஓர் ஏப்ரல் மாதம் சென்னையில் எம்டன் குண்டு வெடித்த-போதுதான் இராதா பிறந்தார். பெரியார் எறிந்த ஒரு அற்புதமான எம்டன் குண்டு எம்.ஆர். இராதா சமூகத்தின் மூடத்தனங்களை, அழுக்குகளை, ஜாதியத்தை, மேலாதிக்கங்களை எதிர்க்க பெரியாரிடம் இருந்த அற்புதமான ஆயுதம் அவர். தம் வாழ்வின் முழுதும் சமரசம் செய்து கொள்ளாத, மனதில் பட்டதை வெளிப்-படையாகச் சொன்ன இராதாவைப் போன்ற கலைஞர்கள் தமிழ்நாட்டிற்கு நிறையத் தேவைப்-படுகிறார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...