Tuesday, July 2, 2013

நெய்வேலி நிலக்கரிப் பிரச்சினை:

5 சதவீத பங்குகளைத் தமிழக அரசு வாங்கிக் கொள்ள
தயார் என்ற முதல் அமைச்சரின் கருத்தை வரவேற்கிறோம்!
மத்திய அரசு விற்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யட்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியார்க்கு விற்பதைவிட, தமிழ்நாடு அரசே அதனை வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித் திருப்பதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை மறு பரிசீலனை செய்து, கைவிட வேண்டுமென்று, தமிழ்நாடே ஒட்டு மொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசுக்கு - ஜனநாயகத்திலும், சமதர்மத்திலும் நம்பிக்கை இருக்குமானால் இதுகுறித்துச் சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் பிடிவாதமாக விற்றே தீருவோம் என்று கூறி, தமிழக மக்களின் ஏகோபித்த அதிருப்தியை விலைக்கு வாங்குவது தேவைதானா? அரசியல் சாதுர்யமும் ஆகாது!
நெய்வேலி தொழிலாளர்களின் எச்சரிக்கை மணி!
நெய்வேலி தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அபாய அறிவிப்பு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்கள்!
இதன் மூலம் அனல் மின் நிலையம் இயங்காது; அதன் விளைவு...? மின் பற்றாக் குறை நாட்டில் பயங்கரமாக இருக்கும் நிலையில், மிகப் பெரும் மின் இழப்பும் பொது அமைதிக்குக் கேடும் ஏற்படும் என்ற நிலை உள்ளது.
இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்; மீண்டும் மீண்டும் மத்திய அமைச்சர்கள் சிலர் தொழிலாளர்களுக்கு நல்லது; நெய்வேலி நிறுவன வளர்ச்சிக்காகத்தான் இதைச் செய்கிறோம்! என்று பழைய பல்லவியைத் திரும்பத் திரும்ப பாடுவதால் பயன் ஏதும் விளையாது.
முதல் அமைச்சரின் கருத்து
வெல்லத்தில் பிள்ளையார் செய்து, அதில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து, பிள்ளையாருக்கு வேண்டுதலை நிறைவேற்றிட பிள்ளையாரையே ஏமாற்ற முனைந்த பக்தன் கதை என்று வைதீகர்கள் கூறும் பழமொழிக் கொப்பான கேலிக் கூத்து இது.
அவர்கள் அப்படி 5 சதவீத பங்குகளை விற்றே தீர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இறுதி முடிவானால் அதை மாநில அரசுக்கே விற்கும்படி தமிழக முதல் அமைச்சர் கேட்டுள்ளார்.
அதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தின் தன்மையை மெல்ல மெல்ல தனியார் நிறுவனமாக மாற்றிடும் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க இயலும் என்பதாலும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தமிழக அரசின் அதிகாரமும் ஓரளவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதாலும் நாம்  (திராவிடர் கழகம்) இதனை வரவேற்கிறோம்.
தேவை மறுபரிசீலனை!
இதுபற்றி மத்திய அரசு உடனடியாக காலதாமதம் செய்யாமல் முடிவைக் கூற வேண்டும்.
மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட சில செபி போன்ற அமைப்புகளைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ள மத்திய அரசு முயலக் கூடாது.
தனது முடிவைத் தாமதிக்காமல் வெளியிட வேண்டியதும் - மறுபரிசீலனை செய்ய வேண்டியதும் அவசர அவசியமாகும்.
கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை   
1.7.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...