Tuesday, July 2, 2013

இந்து மதப் பரப்பாளர் விவேகானந்தரும் சென்னை விவேகானந்தா கல்லூரியும் - சில உண்மைகள் - 1



அ.கருணானந்தன், வரலாற்றுத் துறை தலைவர் (ஓய்வு), விவேகானந்தா கல்லூரி,
சென்னை.

விவேகானந்தர் விழாக்கள்
சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு விழா கொண் டாட்டங்கள் நாடெங்கும், ஏன் உல கெங்கும் கொண்டாடப்படுகின்றன. தமிழக அரசும் தன் பங்கிற்கு ராம கிருஷ்ண மடத்திற்கு பலவற்றை வாக்களித்துள்ளது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களே விவேகானந்த இல்ல விழாவில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார், மிக்க மகிழ்ச்சி. சென்னை விவேகானந்தா கல்லூரி நிர்வாகமும் தனக்கே உரிய முறையில் தொடர்ந்து 15-ஆவது முறையாக ஒரு பார்ப்பனரையே கல் லூரி முதல்வராக நியமித்து விவே கானந்த விழாவைக் கொண்டாடி யுள்ளது. இந்தத் தருணத்தில் ராமகிருஷ்ண மிஷனால் நடத்தப்படும் சென்னை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி நிர்வாகத்தின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரிய போக்கினை அரசு மற்றும் பொதுமக்கள் குறிப்பாக சுவாமி விவேகானந்தரிடம், அவரது லட்சியங்களிடம் ஈடுபாடு கொண்ட வர்களின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டியுள்ளது.
ராமகிருஷ்ணா மிஷன் எதற்காக உருவானது?
விவேகானந்தரை தேசபக்தத் துறவி என்று சிறப்பிக்கிறார்கள். அவரால் தான் ராமகிருஷ்ண மடம், துறவியர் அமைப்பாக உருவாக்கப்பட்டது. துறவுடன் நின்றுவிடாமல் தனது சமூக லட்சியங்களை நிறைவேற்றவும் ஆதரவற்ற இந்தியாவின் நலிந்த சமூகத்தினருக்கு தொண்டாற்றவும் ராமகிருஷ்ண மிஷன் என்ற அமைப் பினையும் நிறுவினார். (1897, மே முதல் நாள்). அந்த ராமகிருஷ்ண மிஷனால், விவேகானந்தரின் சமூக மாற்றக் கனவுகளை நிறைவேற்ற மாணவர் இல்லம் முதலில் உருவானது.
விவேகானந்தரின் சமூக நீதி
விவேகானந்தரின் சமூகம் மற்றும் கல்வி பற்றிய கருத்துக்களையும், லட்சியங்களையும் ஒரளவிற்கு உள்வாங்கிக் கொண்டால்தான், அவரால் உருவான ராமகிருஷ்ண மிஷன், அவரது நோக்கங்களுக்கு ஏற்ப செயல்படுகிறதா என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அவரது கருத்துக்களையும், லட்சியங் களையும் ராமகிருஷ்ணமட வெளியீடு களே தெளிவுபடுத்துகின்றன. அவற் றில் சிலவற்றைக் கீழே தருகிறோம்.
புரோகித - பார்ப்பன ஆதிக்கம்
இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்திற்கும் வேராக இருக்கின்ற ஒரே விஷயம் ஏழைகளின் நிலைமை.... புரோகித ஆதிக்கமும், அன்னியரின் ஆக்கிரமிப்பும் நூற்றாண்டுகளாக அவர்களை கீழே தள்ளி மிதித்து வந்துள்ளன.
எனது பாரதம், அமரபாரதம். இராம கிருஷ்ண மடம் வெளியீடு சென்னை 2005
இங்கு புரோகித ஆதிக்கம் என்று விவேகானந்தர் குறிப்பிடுவது பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் என்பதை பின்வரும் விவேகானந்தரின் சொற்களில் அறி கிறோம்.
பார்ப்பனர்கள் ஆளும்போது, பிறந்த குலத்தைக் காரணமாகக் கொண்டு, பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் ஒதுக்கப்படுகிறார்கள். புரோகிதர் களுக்கும் அவர்களது சந்ததிகளுக்கும் எல்லாவித பாதுகாப்புகளும் அளிக்கப் படுகின்றன. அவர்களைத் தவிர, வேறு யாருக்கும் எந்த அறிவும் கிடைக்க வழி யில்லை; அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அறிவைப் போதிப்பதற்கான உரிமையும் இல்லை,
- அதே புத்தகம் பக்கம் 75
இத்தகைய பார்ப்பன ஏகபோகச் சதியை மேலும் கடுமையாக விவேகானந் தர் சாடுகிறார்.
புரோகிதத்துவம் (அதாவது பிரா மணீயம் அல்லது பார்ப்பனீயம்) இந்தி யாவைப் பீடித்த ஒரு சனியன். பார்ப்பனர் களும், சத்திரியர்களும் செய்த கொடுங் கோன்மை கூட்டுவட்டி போட்டு அவர்கள் தலையிலேயே மறுபடியும் விழுந்திருக் கிறது. ஆயிரம் ஆண்டுகள் அடிமைத் தனமும் இழிவும் தான் அவர்கள் கர்ம வினையின் பலன்
- அதே புத்தகம் பக்கம் 38 -39
தென்னிந்தியாவில் சத்திரியர்கள் இருந்ததில்லை என்பதை விவேகானந் தரே வேறொரு தருணத்தில் கூறி யுள்ளார். எனவே இங்கே சீரழிவின் முழுப்பொறுப்பும் பார்ப்பனர்களுக்கே உரித்தாகிறது. அதிலும் கல்வித் துறை யில் பார்ப்பனச் சதியை விவேகானந் தரால் சீரணிக்க இயலவில்லை.
ஆணவம், அரசு ஆணை இவற்றின் துணையுடன் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரிடம், எல்லா கல்வியும் புத்தி நுட்பமும் உடைமையாக்கப்பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் (பக்கம் 39)
தேசியப் பெரும்பாவம்
இதனை ஒரு தவறு என்று தட்டிக் கழிக்க விவேகானந்தர் விரும்பவில்லை. பெரும் பாவம் என்று அடையாளப்படுத்து கிறார்.
சாதாரண மக்களைப் புறக்கணித் தது நமது தேசியப் பெரும் பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணம். (பக்கம் 47)
தேசத்தின் சீரழிவிற்கு யார் காரணம், எது காரணம் என்பதை மிகத் தெளி வாகவும், திடமாகவும் எடுத்துரைத்த விவேகானந்தர், அதற்கான தீர்வையும் மிக விரிவாகவே கூறியுள்ளார்.
நமது நாட்டின் தாழ்ந்த வகுப்பின ருக்குச் செய்ய வேண்டிய ஒரே சேவை கல்வி அளிப்பது:
இழந்த தனித்துவத்தை மீண்டும் பெறச் செய்வதற்கு முதலில் நாட்டு மக்களுக்குக் கல்வியை அளியுங்கள்... சமுதாய சீர்த்திருத்தத்திற்குக் கூட முதலில் நாம் செய்ய வேண்டிய கடமை மக்களுக்குக் கல்வியை அளிப்பது தான்.
கல்வியில் முன்னுரிமை யாருக்கு?
மக்களுக்குக் கல்வி என்று பொத் தாம் பொதுவாகக் கூறிவிடாமல் யாருக்கு கல்வியில் முன்னுரிமை தர வேண்டும் என்பதைப் பற்றியும் விவேகானந்தர் மிகத் துல்லியமாக விளக்கியுள்ளார். அவரது சொற்களிலேயே அவற்றைக் காண்போம். இயற்கையில் சமமில்லாத நிலை இருக்கலாம். ஆனாலும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும். சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் தான் வாய்ப்புகள் அமையும் என்றால், பலசாலிகளை விட பலவீனர் களுக்குத்தான் அதிகமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அதாவது கல்வி கற்பித்தல் சண்டாளனுக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு பார்ப்பனனுக்குத் தேவையில்லை. பார்ப்பனனின் மகனுக்கு ஓர் ஆசிரியர் தேவையானால் சண் டாளனின் மகனுக்குப் பத்து ஆசிரியர் கள் தேவை. அதாவது இயற்கை யாருக்குப் பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தந்து உதவவில்லையோ அவனுக்கு அதிக உதவியளிக்க வேண்டும். ஒரு பொருள் மிகுதியாக உள்ள இடத்திற்கு அந்தப் பொருளையே கொண்டு செல்வது பைத்தியக்காரத் தனம் அல்லவா?
- நாகரீகமும் சமுதாயக் கோட்பாடும் ராமகிருஷ்ண மட வெளியீடு பக்கம் 96
சண்டாளர் போன்றவர்களுக்கு இயற்கை பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தரவில்லை என்ற விவே கானந்தரின் புரிதலில் நமக்கு உடன் பாடு இல்லை. சூத்திர பஞ்சமர்களுக்கு வாய்ப்புகள் தராமல் தடுத்தது பார்ப் பனிய வக்கிரம் என்பது நமது அனு பவம். ஆனாலும் புறக்கணிக்கப்பட்டு வந்த வெகு மக்களுக்குத்தான் முன் னுரிமை வேண்டும் என்ற விவே கானந்தரின் சமூக நீதியைப் போற் றியே ஆக வேண்டும் நடைமுறைப் படுத்தியே ஆக வேண்டும்.
பார்ப்பனர்களுக்கு வேண்டுகோள்
சமூக நீதிக் கல்விக்கு பார்ப் பனர்கள் எதிர்ப்பாக இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட விவேகானந்தர் அவர்களிடம் பின் வருமாறு கூறினார்:
ஏ பார்ப்பனர்களே! பரம்பரை கார ணமாக பார்ப்பனர்களுக்கு கீழ்ஜாதி யினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கின்றது என்றால், பார்ப்பனர்களின் படிப்பிற்காக எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள். எல்லாவற்றையும் கீழ்ஜாதியினருக் காகச் செலவிடுங்கள். உதவியற்றவர் களுக்குக் கொடுங்கள். ஏனெனில் அவர்களுக்குத் தான் எல்லா செல் வமும் தேவைப்படுகிறது. பார்ப்பனர் பிறவியிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக் கொள்ள முடியும். பிறவி யிலேயே அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனைகளையும் ஆசிரி யர்களையும் பெறட்டும். இதுதான் நான் புரிந்துகொண்ட நீதியும் பகுத் தறிவுமாகும்.
- நாகரீகமும் சமுதாயக் கோட்பாடும் பக்கம் 97.
இது தந்தை பெரியாரின் வார்த்தை களல்ல; விவேகானந்தரின் வார்த் தைகள். சமநீதி-சமவாய்ப்பு என்பதை விவேகானந்தர் என்ற துறவி பின் வருமாறு வலியுறுத்துகிறார்.
எல்லோருக்கும் வாய்ப்புக் கொடு; பிறகு
இறைவனின் விருப்பப்படி ஆகட்டும்
இறைவனையும், இறைவனின் விருப்பத்தையும் உறுதி செய்ய முடியாது. ஆனால் விவேகானந்தரது விருப்பம், லட்சியம் என்ன என்பது தெளிவாகி விட்டது.
(தொடரும்)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...