Saturday, July 13, 2013

புத்தம், மதமாக்கப்பட்டதால் ஏற்பட்ட விபரீதம்!

உலகில் உள்ள புகழ் பெற்ற பாரம்பரியச் சின்னங்களுள்(World Heritage Site) முக்கிய மானது பீகார் மாநிலத்தில் புத்தகயாவில் உள்ள மகாபோதி விகார்!
7.7.2013 அதிகாலை அது, குண்டு வீச்சுக்கு இலக்கானது என்கிற செய்தி அனைவரையும் அதிர்ச்சி வீச்சுக்கு ஆளாக்கி விட்டது.
இந்த வன்முறை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். உலகில் மிக உயர்ந்த சீலங்களை வாரி வழங்கிய கவுதமப் புத்தரின் நினைவுக் குறிப்புக்கான இடத்தைத் தாக்கியவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதன் பின்னணியில் மதவாதம் இருக் கிறதா? அரசியல் இருக்கிறதா? என்ற சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ளன.
வழக்கம் போல தீவிரவாத இஸ்லாமிய அமைப்புதான் இதன் பின்னணியில் இருக் கிறது என்று ஒரு பக்கம்  செய்திப் பரப்பல்;
மியான்மாவில் முஸ்லீம்களை பவுத்த மதத்தினர் தாக்கினார்கள். அதன் எதிரொ லியே இந்தத் துயர நிகழ்வு என்று விளக்கம்;
இன்னொரு பக்கம் பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் ஆட்சி நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி என்று அறிவிக்கப்பட்டதால், அதனை ஏற்றுக் கொள்ளாமல் கூட்டணியிலிருந்து வெளியேறி னார். அதற்குப் பதிலடியே பீகாரில் இந்த வன்முறை - பின்னணியில் மோடியின் கை இருக்கிறது என்று இன்னொரு தரப்பின் குற்றச்சாற்று!
இதற்கிடையே மூன்றாவது சிந்தனை ஒன்றுண்டு; மானுடத்தின் நல்வாழ்வுக்கு அறநெறிப் பண்புகளை - பஞ்ச சீலங்களை வழங்கிய பகுத்தறிவுச் சிந்தனையாளர் கவுதம புத்தர். அவர் நிறுவியது மதமல்ல - ஒரு நெறி! அதனை மதமாக்கி வெறியூட்டிய காரணத் தால்தான் இலங்கையில் சிங்கள வெறித்தனம் கொம்பு முளைத்து, ஈழத் தமிழர்களை வேட்டை யாடித் தீர்த்தது. புத்தர் சிலைகள் தமிழர்களின் ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டன!
யாகம் என்ற பெயரால் உயிர்களைப் பலி கொடுக்கக் கூடாது  என்று சொன்னவர் சித்தார்த்தனாகிய புத்தன்!
உயிர்களைக் கொன்று மோட்சம் போக முடியுமென்றால், உன் தகப்பனைக் கொன்று மோட்சம் போகாமல் உம்மைத் தடுத்தது எது? என்ற வினாவை எழுப்பி, சிந்தனையில் புது வெளிச்சத்தை ஏற்படுத்திய புத்தன் சிலை யையே ரத்தத்தால் குளிப்பாட்டிய கொடுமை களை என்னென்று சொல்லுவது!
மனிதனாகிய புத்தனைக் கடவுளாக்கி, மதச் சடங்குகளைத் திணித்து சீரழித்து விட்டனர்.
புத்தரை ஒரு மதத் தலைவராக்கி, பவுத் தத்தை மதமாக்கிய காரணத்தால் உலகில் உள்ள எத்தனையோ மதங்களுள் புத்த மதமும் ஒன்று என்றாகி விட்டது.
முஸ்லிம்கள் - பவுத்தர்கள் மோதல்கள் என்றெல்லாம் செய்திகள் வர ஆரம்பித்து விட்டனவே!
பார்ப்பனர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று புத்தர், மகா விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று கதை கட்டி விட்டனர்.
ஒரு கொள்கையை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு மதச்சாயம் பூசினால் போதுமே!
தந்தை பெரியார் சிலையை நிறுவும் இடங்களில் எல்லாம் அதன் பீடத்தில் மறக்காமல் கடவுள் மறுப்பு வாசகங்களைப் பொறிப்பதன் நோக்கம் புரிகிறதா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...