Saturday, June 1, 2013

டாக்டர் வரதராஜுலு நாயுடு பெரியாரின் நண்பர் இல்லையா?


டாக்டர் வரதராஜுலு நாயுடு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளனர்.
அதன் இணையதளத் தொடக்க விழாவில் பங்கேற்க போயும் போயும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களை அழைத்துள்ளனர் - அந்த நிகழ்ச்சியில் பெரியாரின் நண்பர் என்று டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்களை அழைக்கக் கூடாது என்று புலம்பியிருக்கிறார்.
சென்னை வானொலியில் பணியாற்றும் தோழர் பழ. அதியமான் அவர்கள் பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு எனும் அரிய நூலை (479 பக்கங்கள்) ஆவணமாகத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார். அதனை மனதிற் கொண்டுதான் திருவாளர் கே. வைத்தியநாதய்யர் தம் வயிற்றெரிச்சலைக் கொட்டியுள்ளார் என்பதைக் கவனத்தில் கொள்க!

தேசியத்தையும், சுதந்திரத்தை, பண்பாடுகளையும் டாக்டர் வரதராஜுலு நாயுடு பெரிதும் போற்றினார் அவரை பெரியார் ஈ.வெ.ரா.வின் நண்பர் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அது தவறு. அவர் பெரியாரின் நண்பராக இருந்திருந்தால் காங்கிரஸில் தொடர்ந்திருக்க மாட்டார். நீதிக் கட்சியின் தீவிரமான விமர்சகராக இருந்தவர் வரதராஜுலு நாயுடு. அவர் பெரியாரின் இறை மறுப்புக் கொள்கையிலும் உடன்பாடு இல்லாதவர். அவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.; தமிழ்த் தென்றல் திரு.வி.க. ஆகியோரின் நண்பர் என்பது தான் நிஜம்! (தினமணி 12.5.2013 பக்கம் 6)
_ -இவ்வாறு பேசி இருப்பவர் தினமணியின் ஆசிரியர் திருவாளர் கே. வைத்தியநாதய்யர்.
தந்தை பெரியாரின் நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் அவர் கொள் கைகளை முழுக்க முழுக்க ஏற்றுக் கொண்டவர்கள் தானா?
ராஜாஜி அவர்கள் தந்தை பெரி யாரைக் குறிப்பிடும் பொழுதுகூட எனது அன்பார்ந்த எதிரி என்கிறார்.
ராஜாஜி அவர்கள் மறைந்தபோது கூட தந்தை பெரியார் அவர்கள் நட்பின் மேலீட்டால் எப்படி துக்க முற்றார் என்பதை திரு. வைத்திய நாதன் அவர்களின் பத்திரிகைக் குருவான திருவாளர் சோ ராமசாமியே ஒப்புக் கொண்டும் எழுதியுள்ளார் (துக்ளக் 15.1.1973).
டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர் களிடமிருந்து தந்தை பெரியார் மாறு பட்டு நின்றதுண்டு; கடும் விமர்சனக் கணைகளை ஏவியதும் உண்டு.
அதே நேரத்தில் இருவரும் ஒத்திசைந்து பார்ப்பனர் எதிர்ப்பினைத் துவம்சம் செய்ததும் ஏராளம்.
தந்தை பெரியார் இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்த வேண்டும் என்று விரும்பினார்; அது குறித்த தகவல் ஒன்று இங்கே.
பத்திரிகை தொடங்குவது பற்றி முதலில் ஸ்ரீமான் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் அவர்களிடம் சொன் னேன்; அவர் எனது கொள்கையைக் கேட்டவுடன் சந்தோஷப்பட்டு, இப்படி ஒரு பத்திரிகை வேண்டியதுதான்; அதற்கு நீயே சரியானவன். நீ ஆரம்பித்தால் தமிழ் நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால் அதிக நாள் நிலைக்காது; ஒரு கூட்டத்தார் எப்படி யாவது அதை ஒழித்து விடுவார்கள். ஆனாலும் நடந்தவரை லாபம் நடத்துங்கள் என்றார்.
பிறகு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டுச் சீக்கிரத்தில் வெளியாக்க வேண்டுமென்று விரும்பு வதாகவும், வெளியாகத் தாமதம் ஏற்பட்டால், அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும்  எழுதி வரும்படியும் சொன்னார். பிறகு ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச் சாரியார் அவர்களிடம் சொன்னேன் அவர் இச்சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது; அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதை விட்டுவிட்டு நீ பத்திரிக்கை நடத்தப் போவது சரியல்ல என்றார் (குடிஅரசு 1.5.1927) _ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பத்திரிகையைத் தொடங்கும் போது தனது சக நண்பர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார் பெரியார் என்பதும், அந்த சகாக்களில் டாக்டர் வரதராஜுலு நாயுடு இருந்தார் என்பதையும் தினமணி ஆசிரியர் தம் அறியாமை யிலிருந்து விடுபட்டு, வெளிச்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமது பொது வாழ்க்கைக்கு டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் எவ்வளவு முக்கியமானவர் என்பதைத் தந்தை பெரியார் அவர்களின் வாயிலாகத் தெரிந்து கொள்வதுதான் பொருத்தம். எனது (பெரியாரது) பொது வாழ்வுக்குத் தோழர் வரதராஜுலு நாயுடு அவர்களே காரணமாவார். அவரது கூட்டுறவு அந்தக் காலத்தில் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால், அக்காலத்தில் எனது தொழிலின் பயனாய் இன்று நான் ஒரு சமயம் ஒரு பெரிய முதலாளியாகவும்; வணிகனாகவும் இருந்திருப்பேன் அல்லது ஒரு சமயம் அம்முயற்சி யால் அநாமதேயப் பாப்பராகவும் இருந்திருப்பேன். எப்படியிருந்தாலும் அவரது நேசமே நான் இன்று இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம் (புரட்சி 3, டிசம்பர் 1933)
கடந்த எடுத்துக்காட்டு கண்களை மறைத்திருந்தாலும் ஈரோட்டாரின் இந்த எடுத்துக்காட்டு திரு வைத்திய நாதருக்கு சாங்கோ பாங்கமாகத் தெரிவித்திருக்கும் என்று நம்பலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் என்றால் நாயுடு, நாயக்கர், முதலியார் என்ற மும்மூர்த்திகள் என்பது ஒரு சொலவடையாகவே அமைந்த ஒன்று)
நாம் (பெரியார்) பச்சைத் தமிழில் எழுதுகிறோம். டாக்டர் (வரதராஜுலு நாயுடு) அவர்கள் ராஜதந்திரத் தமிழில் எழுதுகிறார்; ஸ்ரீமான் முதலியார் (திரு.வி.க.) அவர்கள் சங்கத் தமிழில் எழுதுகிறார்; பேசுகிறார்; இதுதான் வித்தியாசமே தவிர வேறில்லை (குடிஅரசு 1 ஆகஸ்டு 1926).
_ இதுவும் தந்தை பெரியார் அவர்களின் எழுத்து வடிவம்தான்;- எழுத்து நடை வேறாக இருந்தாலும் நோக்கம் ஒன்றே என்று நெற்றியடி கொடுத்து விட்டாரே வெண்தாடி வேந்தர்.
பார்ப்பனர் அல்லாதார் என்ற கண்ணோட்டத்தில் தந்தை பெரியார் அவர்களையும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களையும் ஒருக்கால் நாம் இணைத்துப் பேசலாம் என்று நினைக்கக் கூடும்.
பெரியாரையும், வரதராஜுலுவையும் பார்ப்பனர்கள் எந்தக் கண்ணோட் டத்தில் பார்த்தனர்?
இந்து அற நிலையப் பாதுகாப்புச் சட்டத்தையும் நீதிக்கட்சி தான் கொண்டு வந்தது. அப்பொழுது காங்கிரஸில் இருந்தபடியே ஆதரித்தும் குரல் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும், டாக்டர் வரதராஜுலு அவர்களும்; அதைப் பற்றி பார்ப்பனர்களின் பார்வை என்ன?
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்டபோது அவாளின் கண்ணோட்டம் எப்படி இருந்தது?
பெண்களைக் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் பொட்டுக்கட்டி விபசாரத்திற்கு விடுகிற பழக்கம் தப்பு என்பதாக  நாம் ஒருமுடிவு செய்து விடுவோமானால் ஈ.வெ. இராமசாமி நாயக்கரும், வரதராஜுலு நாயுடுவும் நாளைக்குக் கோயிலில் சுவாமிக்கு அர்ச்சகர்கள் வேண்டியதில்லை என்று சொல்லுவார்கள் அதையும் கேட்க வேண்டியதாய் ஏற்பட்டு விடும்!
_- சத்தியமூர்த்தி அய்யர் சட்டசபை யில் பேச்சு (குடிஅரசு 11.3.1928).
இந்து தேவஸ்தான சட்டத்தைப் பற்றிப் பாமர ஜனங்களை ஏமாற்றத் தமிழ்நாட்டுத் தேசிய பிராமணர்களில் பெரும்பாலோர் செய்த கிளர்ச்சி ஈ.வெ. ராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் போட்ட வெடி குண்டு களால் நசுக்குண்டு போயிருந்தாலும் வேறுவிதமான தந்திரங்கள்  இன்ன மும் நடந்து கொண்டு தானிருக் கின்றன (குடிஅரசு 9.3.1926).
தமிழ்நாட்டின் பொது வாழ்வில், முக்கிய பிரச்சினைகளில் இரு கரங்களாக இருந்து பல முக்கிய கட் டங்களில் களமாடிய தலைவர்களை நண்பர்களாகப் பார்ப்பதில் பார்ப் பனர்களுக்கு என்ன கண்ணோவோ தெரியவில்லை.
டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் பெரியாரின் நண்பராக இருந்திருந்தால் காங்கிரஸில் தொடர்ந் திருக்க மாட்டார் என்று எம்டன் குண்டைத் தூக்கிப் போடுகிறார் தினமணியின் ஆசிரியர். டாக்டர் வரதராஜுலு அவர்கள் தந்தை பெரியாரைப் போல காங்கிரசை விட்டு விலகியதும் உண்டு.
குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் இணைந்ததும் உண்டு. இதற்குச் சாட்சியாக அவாள் ஆத்துக் காரரை விட்டே சொல்ல வைப்போம்.
வரதராஜுலு, திரு.வி.க., பெரியார் ஆகியோர் காங்கிரசை விட்டு விலகியபோது, இப்போதுதான் காங் கிரசு படுசுத்தமானது என்று எஸ். சீனிவாச அய்யங்கார் கூறியதைக் குடிஅரசு பலமாகக் கண்டித்தது (குடிஅரசு 26.9.1926).
டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், தந்தை பெரியார் அவர்களும் முறையே காங்கிரஸ் தலைவராகவும் செயலாளராகவும் இருந்து போரிட்ட வருணாசிரம ஒழிப்புப் பெருங்களம் சேரன்மாதேவி குருகுலப் போராட் டமாகும். காங்கிரஸின் நிதி உதவியால் சேரன் மாதேவியில் நடத்தப்பட்டு வந்த குருகுலத்தின் நிருவாகியாக இருந்தவர் வரகனேரி வேங்கட சுப்பிரமணிய அய்யர் -_- சுருக்கமாக வ.வே.சு. அய்யர்.
குருகுலத்தில் பார்ப்பன மாணவர் களுக்கும் பார்ப்பனர் அல்லாத மாண வர்களுக்கும் வருண வேறுபாடு காட்டப்பட்டது. தனித்தனி தண்ணீர் பானை என்கிற அளவுக்கு அது அருவருப்பாக இருந்தது. உணவில்கூட உப்புமா, இட்லி  பார்ப்பனர்களுக்கும் பழைய சோறு சூத்திரர்களான பார்ப்பனர் அல்லாதாருக்கும்;
பெரியார் காதில் விழுந்து விட்டால் சும்மா விடுவாரா? செவுள் பிய்ந்து விடாதா? வரதராஜுலு அவர்கள்தான் சாமானியமானவாரா? அந்தப் பிரச்சினையில் காந்தியாரின் வழவழா கொழ கொழா சமாதானத்தையே தூக்கி எறிந்தவராயிற்றே!
சேரன்மாதேவி குருகுலம்பற்றி காங்கிரஸ் செயற்குழுவில் கொந்தளித்த - பரிமாறிக் கொண்ட பிரயோகங்கள் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவை.
வ.வே.சு. அய்யர் வெவ்வேறு இடங்களில் பந்தி வைத்ததில் என்ன தவறு இருக்கிறது? பாரத கலாச் சாரத்தைக் காப்பாற்றவே குருகுலம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. வேத முறைப்படிதானே வ.வே.சு. அய்யர் நடந்து கொண்டுள்ளார் என்று ஒரு பார்ப்பனர் பூணூல் தாண்டவம் ஆடியது.
ஈரோட்டு எரிமலை வெடித்தது! ஜாதிப்பாகுபாட்டுக்கும், உயர்வு - தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால், அந்த வேதத்தையும், சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று குமுறினார் பெரியார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த டாக்டர் வரதராஜுலு அவர் களோ அக்னிக் குண்டமாக தகி தகித்தார்.
ஆரியர்களின் வேதகால கலாச் சாரம்தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு திராவிடக் கலாச்சாரத்தில் ஜாதிப் பிரிவினைக்கே இடமில்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.
(குருகுலப் போராட்டம் நாரா. நாச்சியப்பன் பக்கம் 52)
திருவாளர் கே. வைத்தியநாத அய்யர் கூறியுள்ளாரே _- டாக்டர் வரத ராஜுலு நாயுடு நமது கலாச்சாரத்தைப் பெரிதும் போற்றினாரென்று. குருகுலப் போராட்டத்தில் டாக்டர் வரதராஜுலு நாயுடு எந்த கலாச்சாரத்திற்காகப் போர்க் குரல் கொடுத்தார்? அந்தக் கலாச்சாரப் போராட்டத்தில் தந்தை பெரியாரும், டாக்டர் நாயுடுவும் இரட் டைக் குழல் துப்பாக்கிகளாகத்தானே இருந்திருக்கின்றனர்.
குருகுலப் போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் டாக்டர் வரதராஜுலு மீது ராஜாஜி உட்பட பார்ப்பனர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்  கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து முறியடித்தவர் தந்தை பெரியார். வரதராஜுலுவின் தியாகம் எந்த மற்றொரு தியாகத்துக்கும் குறைந்ததல்ல. வரதராஜுலுவின் தலைமையில் நம்பிக்கைத் தீர்மானம் இயற்றாமல் எவரும் கூட்டத்தை விட்டு வெளியில் போக முடியாது என்று எச்சரித்தவர் பெரியார் என்பது -_ வைத்தியநாதய்யர்வாள்களுக்குத் தெரியுமா? ராஜாஜி உட்பட நான்கு பார்ப்பனர்கள் காங்கிரஸ் செயற் குழுவிலிருந்து விலகுவதாக அப் பொழுதே கூறிடவில்லையா?
இன்னொரு களம் மிக முக்கிய மானது -_ அது தமிழ்நாட்டின் அரசி யல் களம்.
1952இல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வந்த ராஜாஜி அவர் களால் கொண்டு வரப்பட்ட குலக் கல்வித் திட்ட ஒழிப்புக் களம்.
சேரன் மாதேவிக்குப் பிறகு அந்த நாயுடுவும், அந்த நாயக்கரும் (டாக்டர் வரதராஜுலுவும், பெரியாரும்) மீண்டும் நாயகர்களாக நின்று ஆச்சாரியாரைப் பந்தாடி பொது வாழ்க்கைக் கோட்டுக்கு வெளியே வீசி எறிந்ததாகும்.
ராஜாஜி முதல் அமைச்சர் பதவியி லிருந்து விலகி ஓடும்படிச் செய்ததில் தந்தை பெரியார் அவர்களுக்கும் திராவிடர் கழகத்திற்கும் மிகப் பெரிய பங்குண்டு.
வேறு வழியின்றி பதவி விலகிய நிலையில் அடுத்து யார் முதல் அமைச்சர் என்ற வினாக்  குறிக்கு விடை யளித்தவர்கள் தந்தை பெரியாரும் - டாக்டர் வரதராஜுலும் ஆவார்கள்.
அந்தச் சந்திப்பு சென்னை அர சினர் தோட்டத்தில் டாக்டர் வரத ராஜுலு நாயுடு அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
தந்தை பெரியார், டாக்டர் நாயுடு, காமராசர், குத்தூசி குருசாமி ஆகியோர் அங்கிருந்தனர். முதல் அமைச்சர் காமராசர் என்று அந்தச் சந்திப்பில் தான் முடிவு செய்யப்பட்டது.
காமராஜர் தயங்கிய நிலையில், தந்தை பெரியார் கொடுத்த துணிவுதான் அப்பொறுப்பை ஏற்கச் செய்தது.
முதல் அமைச்சர் பதவிக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் காமராசர் பெயரை முன்மொழிந்தவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு ஆவார்.
தந்தை பெரியாருக்கும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களுக்கும் இருந்த இந்த நெருக்கத்தில் நட்பு கிடையாது என்று தினமணியார் கூறப் போகிறாரா?
தந்தை பெரியார் அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சென்னை பெரியார் திடலில் கலந்து கொண்ட டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் ஆற்றிய உரை (17.9.1956) குறிப்பிடத் தகுந்ததாகும்.
தலைவர் அவர்களே! நண்பர் பெரியார் அவர்களே! சட்டசபை உறுப்பினர் மாநாடு ஒன்று நடந்தது.
கவர்னர் ஒரு விருந்து வைத்திருந்தார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருந்தமையால் இங்கு கொஞ்சம் பின் தங்கி வர நேர்ந்தது. நான் அய்யாவுக்குப் பத்து வயது இளையவன். எனக்கு மூத்தவரை வாழ்த்துவதற்கு நான் தகுதி உடையவன் அல்லன். பெரியார் அவர்கள் இன்னும் நூறு வயது வாழ வேண்டும். அவரது புரட்சிகள் பயங்கரமானதாகத் தோன்றலாம். வேகமாகப் போகிறார் என்று படும். அவரது புரட்சி பெரும் புரட்சி!
எனக்கு வெகு நாளாய் ஒரு யோசனை உண்டு. பொது இடம் ஒன்றில் பெரியார் அவர்களின் சிலை இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இதை நான் மந்திரிகளிடமும் கூறி இருக்கிறேன். இந்த நிலத்தில் (பெரியார் திடலில்) பெரிய மண்டபம் கட்டி பெரியார் அவர்களின் நல்ல சிலையை வைக் கும்படி திராவிடர் கழகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன். பெரியார் அவர்கள் நீடூழி வாழ விரும்புகிறேன்
(விடுதலை 20.9.1956)
என்றாரே - இதற்கு என்ன பதில்? விளிக்கும் போதே நண்பர் பெரியார் என்றுதானே குறிப்பிடுகிறார்.
நான் சொல்லும் நண்பர் என்பதற் குப் புதுப் பொருள் கொடுக்கப் போகிறாரா தினமணி அய்யர்வாள்?
குறிப்பு: பெரியார் திடலில் மண்டபமும் இப்பொழுது இருக்கிறது _ பெரியார் சிலையும் இருக்கிறது; ஆம்! டாக்டர் வரதராஜுலு நாயுடு வின் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரியார் பற்றி வரதராஜுலு நாயுடு''
புதிய கல்வித் திட்டம் குறித்த அரசின் அறிவிப்பு 1953 ஏப்ரலில் வெளியானது. நகராட்சி, பேரூராட்சி நீங்கலாகக் கிராமப் பள்ளிகளிலும் ஆதாரப்பள்ளிகள் தவிர்த்த அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் 1953 (ஏப்ரலில் தொடங்கிய) கல்வி ஆண்டிலிருந்து அத்திட்டம் உடனே நடைமுறைக்கும் வந்தது.
இராஜாஜி முன்னுரைத்த கல்வித் திட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாட்டில் பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது.
பெரியார் அக்கல்வித் திட்டத்தை வர்ணாசிரம கல்வித் திட்டம், குலக்கல்வித் திட்டம் எனக் கண்டித்தார். தம்மைக் கலக்காமல் அறிவிக்கப்பட்டதால் காங்கிரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிலரிடமும் அதிருப்தி நிலவியது.
அச்சமயத்தில் சேலம் சூரமங்கலத்தில் ஊராட்சி மன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற நமசிவாயம் என்பவருக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பெரியாருடன் வரதராஜுலு கலந்து கொண்டார். கல்வித் திட்டத்தை எதிர்த்துக் கிளர்ச்சி மேற்கொண்டிருந்த பெரியாருக்கு, காங்கிரசுகாரரான வரதராஜூலுவின் அக்கூட்டப் பேச்சு மானசீக ஆதரவாகத் தோன்றியிருக்கலாம்.
பெரியர் ஒரு புரட்சி வீரர், இருப்பதை அழித்துப் புது அமைப்பை உண்டாக்க வேண்டும் என்று போராடுகிறவர். நம்மால் அவ்வளவுக்கு வேகமாகப் போக முடியாது. ஏதோ இருப்பதை வைத்துக் கொண்டு காலம் கடத்தலாம் என்று நினைப்பவர்கள் நாம்.
சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே பெரியார் அவர்கள் நினைத்தார்கள் சமுதாய சீர்திருத்தம் எற்பட்டால் தான் சுயராஜ்யம் உதவுமென்று காந்தியார் அவர்களும் இந்தப்படியே கருதினார். சமுதாய சீர்திருத்தம் இல்லாமலே சுதந்திரம் வந்தது. அதன் பலனை இப்போது அனுபவிக் கிறோம். எங்கும் ஜாதி வெறி, ஜாதிப் பூசல்கள் தலைவிரித் தாடுகின்றன. இந்த ஜாதி வெறியெல்லாம் ஒழிய வேண்டும் இன்னும் இந்தக் கட்சிப் பூசல்கள் ஒழிய வேண்டும்.
இன்றைய தினம் பெரியார் அவர்களின் கொள்கையும் சேவையும் பலருக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் இன்றைக்கல்ல இன்னும் 15 ஆண்டுகள் கழித்து பெரியார் அவர்களின் சேவை இந்தத் தேசத்திற்கு எவ்வளவு தேவையானது, அவசியமானது என்பதை எல்லோரும் உணருவார்கள். பெரியார் அவர்களின் சேவை  இந்த நாட்டின் வரலாற்றிலே போற்றி எழுதப்பட வேண்டியது; எழுதப்படும். எனக்கு முதல் மந்திரி பதவி கிடைக்குமானால் அந்த மந்திரி சபையிலே பெரியார் அவர்களை ஒரு மந்திரியாக நிச்சம் சேர்த்துக் கொள்வேன் - அவருடைய சேவை தேசத்திற்கு மிகவும் தேவை (விடுதலை, 15 மே 1985).
வரதராஜுலு -பெரியார் உறவு மீண்டும் நெருக்கமாக விட்டதை மேற்கண்ட பேச்சிலிருந்து உணர முடியும்.
(பெரியாரின் நண்பர் டாக்டரா? ராஜூலு நாயுடு வரலாறு
- அதியமான் -_ டாக்டர் 256_-257

டாக்டர் வரதராஜூலு நாயுடுக்காக பெரியார் சண்டமாருதம்

வரதராஜூலுவின் பார்ப்பனச் சார்பைக் கண்டிப்பவராக இருந்தாலும் பார்ப்பனர்கள் அவரைத் தாக்கும்போது காப்பாற்றுபவராகப் பெரியார் இக்கட்டத்தில் (1926) இருந்தார். சுயராஜ்யக் கட்சியைப் பார்ப்பனர்கள் கட்சி என்று வரதராஜூலுவை கூறியதையடுத்து எதிர்ப்பு எழுந்தது. அச்சம்பவத்தில் குடிஅரசு வரதராஜூலு அவர்களை ஆதரித்தது. சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல் கள், சாராயம், பிராந்தி சாப்பிடுகிறாரா? சுயராஜ்யக் கட்சிப் பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களில் எல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம், பிராந்தி விற்றுப் பணம் சம்பாதிக்கிறாரா? பத்திரிகைய்ல பேர் போடுவதாகவும் படம் போடுவதாகவும் சொல்லிப் பணம் சம்பாதித்தாரா? பத்திரிகைச் செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம் பணம் வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில் மல் துணியும் பெண்சாதிக்குப் பட்டுச் சல்லா முதலிய அந்நிய நாட்டுத்துணியும் உபயோகித்துக் கொண்டு மேடைக்கு வரும்போது கதர் கட்டிக்கொண்டுவந்து பொது ஜனங்களை ஏமாற்றுகிறாரா? திருட்டுத்தனமாய் சர்க்கார் அதிகாரிகளிடம் கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக் கொண்டாரா? மந்திரி உத்தியோகம் வேண்டுமென்று யார் காலிலாவது விழுந்தாரா? பெரிய பெரிய உத்தியோகங்களையும் பதவிகளையும் பெறலாமென்று தனது உத்தியோகத்தை இராஜினாமா கொடுத்து ஜனங்களை ஏமாற்றினாரா- அல்லது இன்னமும் தனக்கு ஏதாவது ஓர் உத்தியோகமோ பதவியோ கிடைக்குமென்று எதிர்பார்க்கிறாரா? இவர்கள் பூச்சாண்டிக்கு யார் பயப்படுவார்கள்? (குடிஅரசு, 10 அக்டோபர் 1926).
குடி அரசின் மேற்கண்ட எழுத்து, சுயராஜ்யக் கட்சியினரின் மோசமான செயல்களின் பட்டியலாகவே இருந்தாலும் எதிர்நிலையில் வரதராஜூலுவின் சிறப்பான ஆளுமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனாலேயே வசையே வடிவான இப்பத்தியைத் தர நேர்ந்தது.
(பெரியாரின் நண்பர் டாக்டரா? ராஜூலு நாயுடு வரலாறு
- அதியமான் - டாக்டர் 224-_225

-  மின்சாரம்



.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...