Monday, June 3, 2013

ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா?


கேள்வி: பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரங்களுக்குப் பிறகும் மூட நம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது என்கிறாரே கலைஞர்?
பதில்: காமராஜர் காலத்துக்குப் பிறகும் ஊழல் இருப்பது வேதனை அளிப்பதாக அவர் கூறியிருந்தால் உள்ளபடியே இன்னும் சந்தோஷமாக இருக்கும்.
-_ ஆனந்தவிகடன் 8.5.2013 பக்கம் 24
பச்சைத் தமிழர் காமராசரே சொல்லி இருக்கிறார். ஊழலை யாரும் ஒழிக்க முடியாது _- ஊழல் மனிதனை ஒழித்து விடும் என்று சொல்லியிருக்கிறார்.
ஊழல் குற்றச்சாற்று காமராசர் ஆட்சிக் காலத்திலேயே கூட வந்ததுண்டு. அதுபற்றி காமராசரே கூறி இருக்கிறார்.
லஞ்சம் பெருகி விட்டது -_ ஊழல் மலிந்து விட்டது என்று கூச்சல் போடு கிறார்கள் இந்தக் கூச்சலில் மக்களி டையே உணர்ச்சியை மாற்றிட முனை கிறார்கள்.
லஞ்சம் கொடுப்பவர்களும், ஊழலுக்குக் காரணமாக இருப்பவர் களும் யார்? இந்தப் பரம்பரை ஆதிக் கக்காரர்கள்தான் குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறார்கள் சமுதாயத்தில் ஊழலை வளர்ப்பவர்கள் இந்தப் பரம்பரை ஆதிக்கக்காரர்கள்தான். இவர்கள் பரம்பரையாக வசதியோடு வாழ்ந் தார்கள். அந்த வசதியைக் கொண்டு படைத்தவர்கள் அந்தப் படிப்பையும் தங்களுக்கே ஏகபோகமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று கருது கிறார்கள். காரணம், படித்தவன்தான் டாக்டராக முடியும், என்ஜினியராக முடியும்.
இப்படி எல்லாம் பகுதி களையும் அடைத்துக் கொள்வதன் மூலம் ஊழலை வளர்க்க முடியும். லஞ்சத்தை ஊக்குவிக்க முடியும். இவைகளையெல்லாம் இவர்களே நடத்தி விட்டு சுலபமாக அரசாங்கத் தின்மீது பழியைப் போட்டு விட்டு, மக்களுடைய உணர்ச்சிகளைத் திசை திருப்பிட முடியும் என்று இந்த ஆதிக் கக்காரர்களின் கூட்டம் நம்புகிறது! (நூல்: தகுதி - திறமை மோசடி!)
-இவ்வாறு கூறியிருப்பவர் வேறு யாருமல்லர்; பச்சைத் தமிழர் காமராசர் தான்.
அந்தக் காமராசரை துணைக் கழைத்து, கலைஞரோடு மோத விடுவது ஆனந்த விகடனின் பூணூல் புத்தி. கலைஞரைக் கொச்சைப்படுத்த வேண்டுமானால் ஆனந்த விகடன் களுக்கு ஒரு காமராசர் தேவைப் படுகிறார்.
இந்தக் கூட்டம் காமராசரை எப்படி எல்லாம் விமர்சித்தது -_ கொச்சைத்தன மான சேறுகளை அள்ளி வீசியது?.
பெரிய பதவி சின்ன புத்தி என்று காமராசரை இந்தக் கூட்டம் கார்ட்டூன் போடவில்லையா?
சென்னை - கடற்கரைக் கூட்டத்தில் கறுப்புக் காக்கையைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று அவர்களின் ராஜகுலத்திலகம் ராஜாஜி காமராஜர் மீது ஜாடையாக வன்முறையை ஏவினாரே - அந்தத் தருணத்தில் இந்த விகடன்கள் ஆச்சாரியாரைக் கண்டித்து எழுதியதுண்டா?
திராவிடர் இயக்கம் வந்து தான் இலஞ்சத்தை வளர்த்தது என்பது போன்ற ஒரு மாயையே உருவாக் குவதுதான் அவாளின். அவாள் ஊடகங்களின் நோக்கமாகும்.
1947இல் ஆச்சாரியார் ராஜாஜி மத்திய கைத்தறித்துறை அமைச்சராக இருந்தபோது 6 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்பட்டதற்குக் காரணம் ஆச்சாரியார் அங்கம் வகித்த துறையினர் ஊழல் என்று அம்பல மாகவில்லையா? அந்தக் கால கட்டத்தில் ஆறு கோடி ரூபாய் என்பது பெரிய தொகை தானே!
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி அப்பொழுது மத்திய அரசால் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட  எஸ்.ஏ. வெங்கட்ராமன் அய்.சி.எஸ். பார்ப்பனரை ரெவ்னியூ போர்டுக்கு முதல் மெம்பராக ஆக்கினாரே - ஆச்சாரியார் இது ஊழலுக்கு துணை போனதோடு அல்லாமல் ஊழலுக்கு மகுடம் சூட்டிய ஆபாச மாயிற்றே!
நாணயக் கேட்டுக்கும் ஊழலுக்கும் சொந்தக்காரர் என்று டி.எஸ்.எஸ். ராஜனை காங்கிரஸ் கட்சி, கட்சியி லிருந்து நீக்கி வைத்த நிலையில், அதனைப் பற்றியெல்லாம் சிறிது கவலைப்படாமல் தமது அமைச் சரவையில் சேர்த்துக் கொண்டு சுகாதார இலாகாவையே தூக்கிக் கொடுத்தாரே _- இது ஊழலை விட மோசமான ஒழுக்கக் கேடுதானே?
ஆச்சாரியார் எத்தகைய பேராசைக்காரர்! கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்ற ராஜாஜி, தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வுத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜபவனத்தின் மதிப்பை விடக் கூடுதலாக வரும் என்றும், எனவே  அரசு இந்த ராஜ்பவன் நிலத்தைக் தனக்குக் கொடுத்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அரசு நிராகரித்து விட்டது.
சொல்லப் போனால் பேராசை என்பதும் மகா ஊழல் புத்திதான்!
திராவிட இயக்கத்தை _ குறிப்பாக திமுகவைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதுதான் அவாளின் நோக்கம். லஞ்சத்தையே தி.மு.க.தான் கண்டு பிடித்தது போல சாதிப்பார்கள் உண் மையிலே மலைமுழுங்கி மகாதேவன்கள் இந்தப்  பார்ப்பனர்கள்தான்! இதோ ஒரு எடுத்துக்காட்டு.
சத்திய மூர்த்தி லஞ்சம் வாங்கு கிறாராமே! என்று போகிற போக்கில் சிலர் சொல்லி விட்டுப் போய் விடு வார்கள். இதை அவரிடமே நேரில் ஒரு தரம் சொன்னேன். அவர் கொஞ் சம்கூட என்மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார்.
நாள்பூராவும் வேலை செய்ய வேண்டும். எங்காவது பஞ்சாயத்துத் தேர்தலென்றால் அதற்கு மேளம் வாசிப்பதற்கு சத்தியமூர்த்தி வர வேண்டும். நான் பணக்காரனில்லை. நான் எப்படி சாப்பிடுவது? இந்த நாட்டில் அரசியல்வாதிகளுக்குக் கார்னிஜி நிதி யா வைத்திருக்கிறர்கள்? தேர்தல் தம்பட்டம் அடித்து விட்டு, நானும் என் குடும்பத்தினரும் வாயு பக்ஷணமா செய்ய முடியுமா?
லஞ்சம் யாரிடம் வாங்குகிறேன்? வெள்ளைக் காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு, அல்லது பட்டம் பதவி வாங்கிக் கொண்டு என் தேசத்தைக் காட்டிக் கொடுத்து விட்டேனா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பிளியில் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கும். அவரிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்வி கேட்கும் திறமை இருக்கிறது. எப்பொழுதாவது இதைச் செய்தால் இது லஞ்சமாகுமா? என்று சத்தியமூர்த்தி பதில் சொன்னார். (பாரததேவி 8.12.1943) ஆனந்த விகடன்களுக்கு இதெல்லாம் தெரியாது - காரணம் அவர் சத்தியமூர்த்தி அய்யர் ஆயிற்றே!
ஊழல் இலஞ்சம் என்று ஊளை இடுகிறார்களே. அந்த ஊழல் - இலஞ்சம் உற்பத்தியாகும் இடம் கோயிலும் பக்தியும் தானே? மறுக்க முடியுமா?
காமராசரை முன்னிறுத்தியதால் அவரையே நாமும் முன்னிறுத்துவோம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் காமராசர் சுற்றுப் பயணம் செய்தபோது சீர்காழி எத்திராஜ் உங்கள் வழிபாட்டுக் கொள்கை என்ன? என்று கேட்டார்.
அதற்கு கடவுள் இருக்கார். இல்லை என்பதில் எனக்குக் கவலை இல்லை. பக்தனா இருக்கிறதைவிட, யோக்யனா இருக்கணும் ஊருக்கு நூறு சாமி, வேளைக்கு நூறு பூஜைன்னா மனுஷன் என்றைக்கு உருப்படுகிறது?
நான் தீபாவளியைக் கொண்டாடினது மில்லே எண்ணெய்த் தேய்ச்சு குளிச்சதுமில்லே, புதுத்துணி கட்டினதுமில்லே என்றார் காமராஜர் (நூல்: காமராஜர் நினைவுகள்)
கடவுள் பக்தி இருப்பதைவிட யோக்கியமாக இருப்பதுதான் முக்கியம் என்பதோடு காமராசர் நிறுத்திக் கொள்ளவில்லை; ஊருக்கு நூறு சாமி (வளைக்கு நூறு பூஜைன்னா உருப் படுமா நாடு என்ற அர்த்தமிக்க வினாவையும் எழுப்பியுள்ளார்.
ஊருக்கு நூறு கோயிலும் வேளைக்கு நூறு பூஜையும் நடத் துவதன் நோக்கமும் என்ன?
காமராசர் சொல்லுவதுபோல நூறு பூஜைக்கு வேலை தான் என்ன? கடவுளுக்குக் காணிக்கை கொடுப் பது அதாவது இலஞ்சம் கொடுப்பது - அதன் மூலம் கடவுளிடமிருந்து பலனை - சாதகங்களை எதிர்பார்ப் பதுதானே?
ஒவ்வொரு கோயிலின் வாசலிலும் பட்டியல் தொங்குகிறதே தெரியுமா? (பெட்டிச் செய்தி தனியே)
வியாபார முன்னேற்றம், பிணி நீங்கல், ஆயுள் விருத்தி, ராஜயோகம், நன்மக்கள் பேறு, மரண பயம் நீங்குதல், சகல ஞானமும் கைகூடல், லட்சுமி கடாட்சம் இன்னும் இவை எல்லாம் கிடைக்க ஒவ்வொன்றுக்கும் இன் னின்ன பொருள்களை அபிஷேகத் துக்குக் கொடுக்க வேண்டும் என்பது கடவுளுக்குக் கொடுக்கப்பட்ட இலஞ்சம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
பிரார்த்தனை என்பதுதான் என்ன? இதோ தந்தை பெரியார் கூறுகிறாரே - பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல்  விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.
(பகுத்தறிவு மலர் இதழ் 9.1935) என்கிறாரே தந்தை பெரியார் _ இதில் ஒரு வரியை மறுக்க முடியுமா?
பொது ஒழுக்கத்தை விரும்புபவர் கள், உண்மையான இலஞ்ச லாவண் யத்தை எதிர்ப்பவர்கள் இவற்றை யெல்லாம் கண்டிக்காதது ஏன்?
கண்டிக்காதது மட்டுமல்ல; இந்த ஒழுக்கக் கேட்டின் மூல ஊற்றை மூளையைக் கசக்கிக் காப்பாற்றிக் கொண்டு இருக்கும் கூட்டம் தான் இலஞ்சத்தைப்பற்றி ஏழூர் கேட்கக் கத்துகிறது.
12 வருடம் பஞ்சமா பாதகம் செய்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பகோணம் மகா மகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டு விட்டால், எல்லாப் பாவங்களும் ஒரு நொடிப் பொழுதில் பஞ்சாய்ப் பறந்து விடும் என்றால் நாட்டில் ஒழுக்கம் எப்படி உயிர் வாழும்? ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி ஏற்படுத்தும்?
அடிப்படையான ஒழுக்கக் கேட்டுக்குக் கோட்டை கட்டிக் காவல் காத்துக் கொண்டு இருப்பவர்கள் பொருளாதார இலஞ்சத்தைப் பற்றி புலிக் குட்டி போல துள்ளி எழுதுகிறார்கள்.
காஞ்சிபுரத்திலே மச்சேந்திரக் கோயிலின் குருக்கள் பார்ப்பான் தேவேந்திரன், கருவறையைக் கருவை உருவாக்கும் அறையாக மாற்றினானே _ அதைவிடவா ஒழுக்கக் கேடு உலகில் உண்டு?
லோகக் குருவே கொலைக் குற்றவாளியாக ராஜ நடைபோட்டுத் திரிகிறாரே _ ஆனந்தவிகடன் அய்யர்கள் கண்டு கொள்ளாதது ஏன்?
ஊருக்கு இளைத்தவர்கள் திராவிட இயக்கத்தவர்கள் தானா? அதிலும் குறிப்பாகக் கலைஞர் தானா? அதிமுக பக்கம் போக மாட்டார்கள்_  காரணம் தெரிந்ததே!
இந்து என்றால் திருடன் என்று சொல்பவர் கலைஞர் தானே? கற்பழிக்காத கடவுள் உண்டா? என்று நாக்கைப் பிடுங்கக் கேட்பவரும் அவர்தானே? அந்த ஆத்திரத்தை வேறு வகையில் காட்டும் சூட்சமத்தை நமது சூத்திர பஞ்சம தமிழர்கள் உணர வேண்டாமா?
- மின்சாரம்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...