Sunday, May 5, 2013

இராஜபாளையம் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் 20 தீர்மானங்கள்


தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையங்கள் அமைத்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டதால்
மீண்டும் புதிய ஆணையங்கள் அமைக்கப்படவேண்டும்!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காக ஜூலையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்!
இராஜபாளையம் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் 20 தீர்மானங்கள்
இராஜபாளையம், மே 5- தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வளர்ச்சிப் பணிக்களுக்காக புதிய ஆணையங்கள் அமைக்கப்படவேண்டும் என்பது உள்பட 20 தீர்மானங்கள் இராஜபாளையத்தில் 4.5.2013 அன்று நடைபெற்ற மாநில திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண்: 1
மதமற்ற உலகைப் படைப்போம்!
மதம் மக்களைப் பிளவுபடுத்துவதாலும், பகைமையை வளர்ப்பதாலும், அறிவு, காலம், பொருள், உழைப்பு இவற்றை நாசப்படுத்துவதாலும், மனிதப் பண்பு, நேயம், அமைதி மற்றும் நல்லுறவுகளுக்குக் கேடு பயப்பதாலும், பகுத் தறிவுக்கும், சிந்தனைக்கும் பொருந்தி வராமையாலும், தந்தை பெரியார் கூறும் மதமற்ற ஒப்புரவு உலகே மானுட சமூகத்திற்குத் தேவையான உயர்நெறி என்று இம்மாநாடு திடமாகக் கருதி, மக்களிடத்தில் இவ்வகையில் பல்வகை யிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது, செயல்படுவது, பக்குவப்படுத்துவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண்: 2
ஆண் - பெண் சமத்துவம்
மானுட சமூகத்தில் ஆண் - பெண் எனும் பேதம் மேற்போக்கானது - உறுப்பு வேறுபாடுகளேயல்லாமல் அறிவில், உணர்வில், ஆற்றலில் எந்த வகையிலும் பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர்.
வண்டியின் ஓட்டத்துக்கு இரு சக்கரங்கள் தேவை போலவே, மானுட சமூகத்துக்கும், வளர்ச்சிக்கும் ஆண் - பெண் சரி நிகர் சமத்துவம் தேவை என்பதை இம்மாநாடு திட்டவட்டமாகத் தெரிவிப்பதுடன், அனைத்திலும் ஆண் களுக்குரிய அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்றும், அவற்றை முற்றிலும் எதிர்பார்க்க பெண் களுக்கு உரிமை உண்டு என்றும், ஆண்கள் மனிதத் தன்மையுடன் இதனை உணர்ந்து ஒத்துழைத்தால் அது அவர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 3 (அ)
பெண்களுக்குப் பாதுகாப்பு
பெண்கள்மீதான பாலியல் வன்முறை கடுமையான சட்டங்களின்மூலம் தடுக்கப்படவேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.
பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள கல்விக் கூடங்களில் கராத்தே உள்ளிட்ட அவசியமான பயிற்சி களைக் கட்டாயமாக அளிக்கவேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 3 (ஆ)
சின்னத் திரைக்கும் சில கட்டுப்பாடு
பெண்களை விளம்பரப் பொருளாகவும், கலையின் பெயரால் ஆபாச வடிவமாகவும் காட்டுவதற்கு இம் மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. இதில் சின்னத் திரைக்கும் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று இம்மாநாடு அறிவிக்கின்றது.
தீர்மானம் எண்: 3 (இ)
பாலியல் கல்வி தேவை
ஆரோக்கியமான பாலியல் தொடர்பான கல்வியைக் கல்லூரிகள் பாடத் திட்டத்திலாவது இருபால் மாணவர் களுக்கும் போதிப்பது அவசியம் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 4 (அ)
ஜாதி - தீண்டாமை ஒழிப்பு
தீண்டாமை - அதற்கு மூலமான ஜாதி ஒழிப்புக் கொள்கையை முதன்மையானதாகக் கொண்டு முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கம், பிரச்சாரம், போராட்டம் முதலிய அணுகுமுறைகளினால் தமிழர் சமுதாயத்தில் மாபெரும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
ஜாதி உணர்வால் சகோதரத்துவ மனப்பான்மைக்கு மரணக் குழி வெட்டப்படுகிறது. பகைமை உணர்வுக்குப் பச்சைக் கொடி காட்டப்படுகிறது - நாம் ஓர் இனம் - தமிழினம் - திராவிடர் இனம் எனும் உணர்வு ஏற்படாமல் போனதற்கும், அந்த இன ஒற்றுமையின்மையால் பல்வேறு இழப்புகளுக்கு ஆளானதற்கும் நம்மிடையே நிலவி வரும் ஜாதி உணர்வே காரணம் என்பது வெளிப்படை!
பெயருக்கு பின்னால் ஜாதிப் பட்டம் போடுவது அநாகரிகம் என்று உணரும் அளவுக்குத் தமிழ்நாட்டில் நமது பணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
இன ஒற்றுமைக்கும் வழிகோலப்பட்டது; இதனைப் புரட்டிப் போட்டு, இன ஒற்றுமையைச் சிதைப்பதற்குக் காரணமான ஜாதி வெறியைக் கிளப்பி, மீண்டும் தமிழினத்தைக் கூறுபோட்டு, நம்மை என்றென்றும் இந்து மதத்தின் வருணாசிரம வரிசையில் சூத்திரர்களாக, நாலாம் ஜாதி மக்களாக, வேசி மக்களாக நிலை நாட்டு வதற்குச் சில பிற்போக்கு சக்திகள் முயலுவதை முறி யடிப்பது என்றும், தமிழ்நாட்டு மக்கள் ஜாதியை அடையாளம் வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு எந்த வகையிலும் துணை போகக்கூடாது என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஜாதி வெறியைத் தூண்டும் சக்திகள்மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்து கிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்திலேயே ஜாதியைப் புறக்கணிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் இம்மாநாடு சுட்டிக் காட்ட விரும்புகிறது.
தீர்மானம் எண்: 4 (ஆ)
ஜாதி மறுப்புத் திருமணம், விதவைத் திருமணம், மணமுறிவு பெற்றவர்களோடு திருமணம், மாற்றுத் திறனாளிகளோடு திருமணம் எனும் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்திக் காட்டுவது என்று கழக இளைஞரணி மாநாடு தீர்மானிக்கிறது.
காதல் திருமணங்கள் ஜாதி ஒழிப்புக்கு ஆக்கம் தருவதால், அதனை ஆதரிப்பது என்றும், காதல் திருமணம் என்றால் கெட்ட வார்த்தை என்று நினைக்கும் பிரச்சாரம் செய்யும் நிலையை மாற்றி - அது மனம் ஒத்தது - ஒழுக்கமானது - உண்மையான இணையரைத் தேர்வு செய்வது - வாழ்ந்து காட்டுவது எனும் சிறப்பு அம்சங்களைக் கொண்டது என்பதை நிரூபித்துக் காட்டுமாறு இருபால் இளைஞர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 5
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
தந்தை பெரியார் அவர்களால் இறுதியாக அறிவிக்கப் பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் ஜாதி ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட முடியாமல் உச்சநீதிமன்றத்தில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உரிய முறையில் சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு தந்தை பெரியார் அவர்களின் இறுதிக் கட்டளையை நிறைவேற்றிட முனைப்புக் காட்டவேண்டும் என்றும், இந்த வகையில் பிரச்சாரம், போராட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இது தொடர்பாக மே, ஜூன் மாதங்களில் தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச் சாரம் செய்வது, ஜூலையில் போராட்டத்தில் ஈடுபடுவது - அதற்கான திட்டத்தைக் கழகத் தலைவர் அறிவிப்பார் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
போராட்ட வீரர்களின் பட்டியலை இப்பொழுது முதலே தயாரிக்கு மாறு கழகத் தோழர்களை இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது.
தீர்மானம் எண்: 6
ஈழத் தமிழர் வாழ்வுரிமை
இலங்கையில் ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், எந்தவிதமான அரசியல் தீர்வை ஈழ மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு உலகெங் கும் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக் கெடுப்புக்கு வழி செய்யவேண்டும் என்றும் அய்.நா.வை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை போன்ற தமிழர்களின் பொதுப் பிரச்சினைகளை அரசியல் கோணத்தில் அணுகி தமிழர்களின் ஒன்றுபட்ட சக்தியைச் சீர்குலைத்து அதன் மூலம் உண்மை எதிரிகளைப் பயனடைய - பலமடையச் செய்யவேண்டாம் என்று தமிழ்நாட்டுக் கட்சிகளை, தலைவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 7
கச்சத்தீவை மீட்டிடுக!
தமிழின மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கச்சத்தீவை மீண்டும் தமிழ்நாட்டுக்கு உரியது என்பதை உறுதிப்படுத்துவதுதான் என்பதால், அதற்கான செயல் பாட்டில் உடனடியாக இறங்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 8
சமூகநீதியில் நமது கோரிக்கைகள் 1.மத்திய அரசால் அமைக்கப்பட்ட பிற்படுத்தப் பட்டோருக்கான நாடாளுமன்றக் குழுவின் முதல் அறிக்கை ஜூலை 2012 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அந்த அறிக்கையில் தேசிய பிற்படுத்தப் பட்டோருக்கான ஆணையத்திற்கு, ஏனைய எஸ்.சி, எஸ்.டி ஆணையத்திற்கு நிகரான அதிகாரம் அளித்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எட்டு மாதங்களைக் கடந்த நிலையிலும் இன்னும் அந்த அறிக்கையின் மீது எந்த வித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்க வில்லை.
2. மத்திய அரசு பணியாளர்  (UPSC) தேர்வில் அந்தந்த மாநில மொழிகளை புறந்தள்ளும் வகையில் சில மாற்றத்தை, அறிவித்தது; அனைத்து அரசியல், சமூக அமைப்பின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக யு.பி.எஸ்.சி கொண்டு வந்த மாற்றத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. இத்துடன் நில்லாமல், மத்திய அரசு பணிகளுக்கு நடைபெறும் அனைத்துத் தேர்வுகளும் அனைத்து மொழிகளிலும் எழுதிடவும், வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளில் தரப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான், மாநிலங்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல், அனைத்து மாநில மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும்.
3. பொருளாதாரத் துறையில் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கு மண்டல் குழுப் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. பொது வினியோகத் திட்டத்தில், பெட்ரோல் பங்குகள் அமைத்தல், காஸ் வினியோகம் ஆகியவற்றில் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆகிய பரிந்துரைகளை உடன் மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும்.
4.தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு இதுவரை கிடைத்திட்ட பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உச்ச நீதி மன்ற தீர்ப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அரசியல் சட்ட திருத்தம் மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளது. மக்களவையில் இன்னும் நிறைவேற்றப் படவில்லை. மேலும் கால தாமதமின்றி, அச்சட்டத்தை நிறைவேற்றுவதுடன், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பதவி   உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட, உரிய திருத்தம்   செய்யப்பட வேண்டும்.
5.மத்திய அரசால் அமைக்கப்பட்ட சுதர்சன நாச்சி யப்பன் தலைமையிலான நாடாளுமன்றக்குழு பரிந்துரை யின்படி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக் களுக்கான இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறை வேற்றப்பட்டு, இட ஒதுக்கீட்டினை முறையாக அமுல் படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
6.பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறிய பிரிவினர் (கிரிமிலேயர்) என்பது அரசியல் சட்டத்தில் கூறப்படாத ஒன்று; அதனை ரத்து செய்திட வேண்டும்; ஆனால்  நிர்ணயிக்கப்பட்டுள்ள நான்கரை லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பை ரூ 12 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து ஓராண்டு ஆகிறது. மேலும் தாமதம் செய்யாமல், வருமான வரம்பை உயர்த்தி உடன் ஆணை நிறைவேற்றிட வேண்டும்.
7.மண்டல் குழுவில் பரிந்துரைக்கப்பட்டு இன்னும் மத்திய அரசால் நிறைவேற்றப்படாத பரிந்துரைகளான:
அ) பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
ஆ) நீதித் துறையில் இட ஒதுக்கீடு
இ) தனியார் துறையில் இட ஒதுக்கீடு
இவற்றை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
8. மத்திய பணியாளர் தேர்வாணையம் (IAS IPS) நடத்தும் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று பொதுப் போட்டியில் தேர்வு பெறும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்கள் தாங்கள் விரும்பும் பணிக்கு இடஒதுக்கீடு இடங்களில் தேர்வு செய்து மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இடஒதுக்கீட்டின் வழியே தேர்வு பெறும் வாய்ப்பு உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றும், வெளியேற்றப்படுகிற நிலைமை உள்ளது. மேலும், இந்த முறையினால் காலியாக உள்ள பொதுப் போட்டி இடங்களை, காத்திருக்கும் பட்டியலில், வெளியேற்றப்பட்ட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர் களுக்கு பணி வழங்கிடும் அவல நிலையும் உள்ளது. குடிமைப் பணியின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் துறை சார்ந்த பணியிடங்களை (IAS IPS) தனித்தனியாக பாகு படுத்தி இடஒதுககீடு அளித்தால், இந்த சிக்கலுக்கு உரிய தீர்வாக அமையும் என்பதால், மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணி தேர்வினை IAS, IPS என தனித் தனித் துறைக்காக தனியே தேர்வு செய்திட வேண்டும், இதுவே சமூகநீதியை உறுதிப்படுத்தும் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
9. பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்) பணியிடங்களுக்காக BSRB
என்கிற வங்கி தேர்வு குழுமம் நடத்துகிற தேர்வில், அந்தந்த மாநில மக்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும். அந்த வகையில், எழுத்தர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட் டில் தேர்வு எழுத வேண்டுமெனில், தமிழ் படிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது நடை பெறும் தேர்வுகளில், இந்த விதியைக் கட்டாயப்படுத்தாமல், தளர்த்தப்படுவதாகத் தெரிகிறது. இது மாநில இளை ஞர்களின் வேலை வாய்ப்பை கடுமையாக பாதிக்கும் என்ப தோடு தாய்மொழி தெரியாத பணியாளர்களோடு வாடிக் கையாளர்கள் உறவாடுவது பாதிக்கப்படும். இந்நிலையில் அந்தந்த மாநில மொழியில் பயிற்சி பெற்றிருத்தல் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்தி எழுத்தர் பணியாளர் களை நிரப்ப வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 9
தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் ஆணையம் அமைக்கக் கோருதல்
இந்திய அரசமைப்புச் சட்டம் 339 இன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 340-இன்படி பிற்படுத்தப்பட்ட வர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆணையம் அமைக்கப்பட்டு, அவற்றிடமிருந்து பரிந்துரைகள் பெறப் பட்டு, அவற்றைச் செயல்படுத்தவேண்டும்.
பல பத்தாண்டுகள் கழிந்த பிறகும் மீண்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஆணையம் அமைக்கப்படவில்லை.
இந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் பகுதியினருக்கு மேலும் பல வாய்ப்புகளும், உரிமைகளும் கிடைக்கப் பெறவேண்டிய நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தனித்தனியே தக்கவர்களின் தலைமையில் ஆணையங்கள் அமைக்கப்படவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
மாநில அரசுகளும் இப்பிரச்சினையில் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது.
தீர்மானம் எண்: 10
கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வரக் கோருதல்
பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. மாநில அரசுகளும் இதற்கான அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 11
வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்குக!
வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக ஆக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்து கிறது.
தீர்மானம் எண்: 12 (அ)
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு உத்தரவாதம்
காவிரி நதிநீர்ப் பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், முல்லை பெரியாறில் 142 அடி நீர்த் தேக்குதல், பாலாற்றில் ஆந்திர மாநில அரசு அணை கட்டும் முயுற்சி - இவற்றில் தமிழ்நாட்டுக்குரிய உரிமை கள் நிலைநாட்டப்படவேண்டும் என்றும், இதற்கு மத்திய - மாநில அரசுகள் சட்டப்படி, நியாயப்படி சரியாக நடந்து தமிழ்நாட்டுக்குரிய உரிமைகளை நிலை நாட்டவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இவற்றின் உரிமைகளை நிலைநாட்டுவதில் கட்சிகளை மறந்து அனைவரும் ஓரணியில் நின்று போராட முன்வர வேண்டும் என்றும் தமிழர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 12 (ஆ)
சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் அவசியம்
தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக தென்மாவட்ட மக் களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்டம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் காரணமாக பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புப் பெருகும் என்பது வெளிப்படை! தமிழ்நாட்டில் உள்ள மற்ற மற்ற துறைமுகங் களும் வளர்ச்சி பெறும்; அந்நிய செலாவணியையும் பெரும் அளவில் ஈட்டித்தரும்.
இந்தத் திட்டம் நீரி (Neeri) என்ற தொழில்நுட்ப நிறு வனத்தால் விஞ்ஞான ரீதியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் 22 கிலோ மீட்டர் அளவுதான் பணி முடிக்கப்பட வேண்டிய நிலையில், அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் சொல்லிக் கொண்டு இருக்கும் அ.இ.அ.தி. மு.க. மற்றும் ஆட்சியின் சார்பில், ராமன் பாலம் என்றும், அதனைப் புராதன சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும் ஜெயலலிதா அவர்கள் மதம் சார்ந்தும், மூட நம்பிக் கையைச் சார்ந்தும், விஞ்ஞான மனப்பான்மைக்கு எதி ராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.
2001 சட்டமன்ற தேர்தல் 2004 மக்களவைத் தேர்த லின்போது இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, இப்பொழுது இதற்கு முரணாக நடந்துகொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
2001 அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1991 இல் ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் விருப்பத்திற்கு எதிராக செயல் படும் முடிவை கைவிடவேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 12 (இ)
தேவை நதிநீர் இணைப்பு!
இந்திய நதிகளை இணைப்பதில் சிரமங்கள் இருக்குமே யானால், குறைந்தபட்சம் தென்னக நதிகளை இணைக் கும் திட்டத்திற்கு உடனடியாக வழி செய்யவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 13
தேவை ஏழை மக்களுக்கான பொருளாதாரத் திட்டம்
நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் ஊதியம் பெறும் மக்கள் இந்தியாவில் 77 விழுக்காடு இருப்பதாகச் சொல்லப்படு வதால், இந்த அடித்தட்டு மக்களின் சமூக, பொருளாதார நிலை மேம்படுவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
குறிப்பாக சில்லறை வணிகத்தில்கூட வெளிநாட்டு முதலீட்டைக் கைவிடுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் பொருளாதாரக் கொள்கையைக் கைவிடவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 14 (அ)
மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்குக!
இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்ட வணையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அத்தனை மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவித்திட உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 14 (ஆ)
வழக்காடு மொழியாக தமிழ்
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்கவேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் ஆவன செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்:15
தூக்குத் தண்டனையை ரத்து செய்க!
இந்தியாவில் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 16
மதச் சார்பின்மைக் கோட்பாடு
மதச் சார்பின்மைக்கு எதிராக அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவதை எதிர்த் துத் தொடுக்கப்பட்ட வழக்கில், அவ்வாறு கொண்டாடு வது மதச்சார்பற்ற தன்மையைப் பாதிக்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுதாகர் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய அமர்வு கூறி இருப்பது - அரசு அலுவலகங்களில் பல்வேறு மதங்களைச் சார்ந்த வர்கள், மதங்களைச் சாராதவர்கள் மத்தியில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதாலும், மதச்சார்பற்ற தன்மை என்பது எந்த மதத்துக்கும் சம்பந்தமில்லாதது - தொடர்பற்றது என்பதுதான் சரியானதாக இருக்க முடியும் என்பதாலும், இதன்மீது மேல் முறையீடு செய்து உண்மையான மதச்சார்பின்மையை நிலை நாட்ட ஆவன செய்யுமாறு திராவிடர் கழகத்தின் தலைவர் அவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 17
போதைகளிலிருந்து விடுபடுக! மதப் போதை, மதுப் போதை, சினிமா போதை, கிரிக் கெட் போதைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று இளை ஞர்களை - மாணவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 18
நடைபாதைக் கோயில்களை அகற்றுக!
நடைபாதைகளிலும், பொது இடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் எந்த மத வழிபாட்டு நிலையங்களும் அகற்றப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக ஆணை பிறப்பித்திருந்தும், இன்னும் தமிழ்நாட்டில் அந்த ஆணை நிறைவேற்றப்படவில்லை என்பதை இம்மாநாடு சுட்டிக் காட்டி, உடனடியாக அவற்றை அகற்றுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 19
சோதிடத்தைத் தடை செய்க!
விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரச மைப்புச் சட்டம்  கூறுவதற்கேற்பவும் இந்தோனேசிய அரசு மூடநம்பிக்கைகளையும், சோம்பேறித்தனத்தையும் வளர்க்கும் ஜோதிடத்தைத் தடை செய்தது போலவும் இந்திய அரசு இந்தியாவில் ஜோதிடத்தைத் தடை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 20
தமிழ்த்தேசியமும், அதன் பின்னணியும்
தமிழ்த்தேசியம் என்று சொல்லிக் கொண்டு தந்தை பெரியார் அவர்களையும், திராவிடர் இயக்கத்தையும் கொச்சைப்படுத்தக் கிளம்பியுள்ளவர்களைப் புறக்கணிக் குமாறு பார்ப்பனர் அல்லாத கோடானுகோடி மக்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் பார்ப்பனர் களின் எல்லா வகையான ஆதிக்கங்களையும் எதிர்த்து நடத்திய இயக்கத்தால்தான் - பார்ப்பனர் அல்லாத மக்கள் கல்வி உரிமை; வேலை வாய்ப்புரிமை இவற்றைப் பெற்று வருவதோடு அல்லாமல், பார்ப்பனீயப் பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபடும் எழுச்சியும் பெற்று வந்துள்ளனர்.
குறிப்பாக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் தங்கள் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுதலை பெறும் எழுச்சியும் ஏற்பட்டுள்ளது.
ஜாதி உணர்வு புறந்தள்ளப்பட்டு, தமிழரின ஒற்றுமை என்னும் ஓரின கோட்பாடு உருவாக்கப்பட்டது.
திராவிடர் என்ற வரலாற்று ரீதியான இனச்சொல் ஆரியர் - பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புக்கான குறியீடாகக் கொள்ளப்பட்டு வெற்றியும் காணப்பட்டு வருகிறது.
இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத ஊடுருவல் எதிர்ப்பும் இதன் உள்ளடக்கமாக இருந்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ்த்தேசியம் எனும் போர்வையில் தந்தை பெரியார் அவர்களையும், திராவிடர் இயக்கத்தை யும் கொச்சைப்படுத்துவதோடு அல்லாமல் பார்ப்பனர் களையும் தமிழர்கள் எனும் போர்வையில் ஊடுருவச் செய்வதும், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பைக் கைவிட்டும், ஜாதி முறைகளைக் காப்பாற்றியும் வரும் போக்கினை அடையாளம் கண்டு புறக்கணிக்கவேண்டும் என்றும் தமிழினப் பெருமக்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஈழத் தமிழர்களுக்காக இவர்கள் பாடுபடுவது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டி, அந்தத் திரைமறைவில் இத்தகைய எதிர்மறைப் போக்கினைக் கடைபிடிப்பதில் உள்ள சூழ்ச்சியைத் தமிழின இளைஞர்கள் புரிந்து கொண்டு புறந்தள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் தளங்களில் அனைத்து உரிமைகளுக்காகவும் பாடுபட்டு வந்ததும், பாடுபட்டு வருவதும், பாடுபடப் போவதும் தந்தை பெரியார் அவர் களின் அடிப்படைக் கொள்கையும், உண்மை திராவிடர் இயக்கமுமேதான் என்பதை இம்மாநாடு பிரகடனப் படுத்துகிறது.




இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...