Friday, March 8, 2013

பொறுமைக்கும் எல்லை உண்டே!


நாடாளுமன்றத்தில் நேற்று இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து தி.மு.க., அ.இ.அ. தி.மு.க. உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
இது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல; இன்னும் சொல்லப் போனால் வெறும் தமிழர்கள் பிரச்சினை மட்டுமல்ல; தேசியக் கண்ணோட்டம் கண்ணோட்டம் என்று கூறுகிறார்களே - அதன்படிப் பார்த்தால்கூட இந்திய மீனவர்கள் இன்னொரு நாட்டு அரசால் தாக்கப்படும் பிரச்சினை. மற்றொரு வகையில் பார்த்தால் இது மனித உரிமைப் பிரச்சினை!
இதுவரை எத்தனைத் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பதைத் துல்லியமாக எடுத்துச் சொல்ல முடியாத அளவுக்குத் தொடர் கொலைகள் - கொள்ளைகள் - தாக்குதல்கள் - இழப்புகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். நேற்று மட்டுமல்ல; இதே இந்திய நாடாளு மன்றத்தில் எத்தனையோ முறை கிளப்பப்பட்ட பிரச்சினை!
கடலில் கோடு போட்டு மீன்பிடிக்க வேண்டும் என்று சொல்லுவதெல்லாம் எத்தகைய பிற்போக்குத்தனம்? இவ்வளவுக்கும் இந்திய அரசோ, இலங்கை அரசோ கூறும் அந்தக் கடல் எல்லைக் கோட்டின் பின்னணி என்ன?
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை யாருக்கும் தெரியாமல் கை உறைப் போட்டு அதிகாரிகள் மத்தியில் காதும் காதும் வைத்தாற்போல எதையோ எழுதிக் கொண்டு, கச்சத்தீவு பகுதியில் - தமிழ்நாட்டுக்குரிய கச்சத் தீவுப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று கட்டளை இடுவார்களேயானால், இதனைவிட பெரிய வஞ்சகம் வேறு ஒன்று இருக்க முடியுமா?
தமிழ்நாட்டைச் சேர்ந்த கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததே முதல் தவறு. குதிரை கீழே தள்ளியதோடு மட்டுமல்லாமல், குழியையும் பறித்த கதையாக அல்லவா இருக்கிறது?
நாட்டுப்பற்றைப்பற்றி எல்லாம் உச்சக் குரலில் தான் கதறுகிறார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டுக்குள் கச்சத்தீவை இன்னொரு நாட்டுக்கு யுத்தம் இல்லாமல், சத்தம் இல்லாமல் இருட்டில் தூக்கிக் கொடுத்தது எத்தனைக் கேரட் நாட்டுப்பற்று?
பட்டுப் புடவையை இரவல் கொடுத்த பெண்மணி, ஈச்சம்பாயைத் தூக்கிக் கொண்டு பட்டுப் புடவையை இரவல் பெற்றுக் கட்டிக் கொண்ட பெண்மணி செல்லும் இடமெல்லாம் ஓடுவதைப் போல் அல்லவா இந்தக் கதை இருக்கிறது?
உலகில் உள்ள மீனவர்களெல்லாம் கடலில் சென்று மீன் பிடிக்கிறார்களே, எல்லைகளைக் கடந்து அங்கெல்லாம் படுகொலைகளா நடக்கின்றன? பறிமுதலா நடக்கிறது?
ஜப்பானும், கொரியாவும் தமக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் இரு நாடுகளும் மீன்பிடிக்க வழி செய்து கொள்ளவில்லையா?
நார்வே, சுவீடன், ஃபின்லாந்து, ருசியா ஆகிய நாடுகளிடையேயும்கூட எல்லைகளைத் தாண்டி மீன் பிடிக்கும் உரிமங்கள் உண்டு.
இங்கு என்னடா என்றால் நமக்கென்று இருந்து வந்த பகுதிகளில் சென்று மீன்பிடிக்கக் கூட உரிமை இல்லை என்றால் தமிழர்களை இந்திய அரசு எந்த கண் கொண்டு பார்க்கிறது என்ற கேள்வி எழாதா? உங்களுக்கு யார் தோழர்கள்? இலங்கை  அரசா, இந்தியாவின் தென் பகுதியில் உள்ள தமிழர்களா என்று மாநிலங்களவையில் தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா அவர்கள் எழுப்பிய வினா அர்த்தமுள்ளது.
எதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதை இன்னும்கூடப் பொறுமையாகத்தான் சொல் லிக் கொண்டு இருக்கிறோம் - அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...