Monday, February 4, 2013

எல்லைதாண்டி இழிவைத் தேடும் இளையராஜா!


இளையராஜா ஓர் இசை அமைப்பாளர்; உலகத்தார் போற்றும் இசைமேதை; பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர்; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும், பிறப்பிழிவை, பட்டிக்காட்டுச் சூழலை, படிப்பு மேன்மையின்மையை எல்லாம் புறந்தள்ளி, முயற்சி, பயிற்சி, திறமைகளை முன்னிறுத்தி முன்னுக்கு வந்து, ஆரிய பார்ப்பனர்களுக்கு வியப்புக்குரியவராக, விரல் வைத்து வியக்கச் செய்த வித்தகத் தமிழர் என்பதில் நாம் என்றும் அவரைப் பாராட்டவும், அவருக்குப் பக்கபலமாய் நிற்கவும் என்றும் தவறவில்லை; தவறவும் மாட்டோம் நாம் பெரியார் தொண்டர்கள். பழித்து உமிழ்ந்ததையும் வழித்து எறிந்துவிட்டு, உமிழ்ந்தவன் தமிழானாயின் அவனிடம் திறமையிருப்பின், அவனைத் தூக்கிப் பிடித்து பெருமை பேசவும் பாதுகாக்கவும் செய்யும் உள்ளம் உரம் பெற்றவர்கள் நாம். ஆனால், கொள்கையில் எவரிடத்தும் சமரசம் காணோம்! கண்டிக்கத் தவறோம்!
 தன் துறை தொடர்பில்லாதவற்றை தனக்குத் தெரியாதவற்றை, முழுமையும் அறியாதவற்றை விமர்சிக்க, இழித்துரைக்க, மறுத்துரைக்க, கேலிப்பேச முயலுதல் கேவலத்தையே தரும் என்ற உண்மைக்கு எடுத்துக்காட்டாய் இளையராஜா பலமுறை தொடர்ந்து ஆளாகி வருவது கேவலத்திலும் கேவலம்.
தத்துப்பித்தென்று உளறினால் தத்துவ மேதையாகிவிடலாம் என்ற தவறான நம்பிக்கையில் அவ்வப்போது, முகம் சுளிக்கும் அளவிற்கு உளறி வருகிறார்.
அவர் உயர்நிலையில் இருப்பதால், காசு ஈட்ட சதையும் கதையும் போதும் என்று வணிக நோக்கில் வணிக இதழ்கள் நடத்தும் வணிகக் கூட்டத்திற்கு, இவர் வியாபாரப் பொருளாகப் பயன்படுவதால், இவரது பேத்தல்கள் எல்லாம் அச்சேறி விடுகின்றன.
பெரியார் நாத்திகர் என்பதால், அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்க மாட்டேன் என்று வெறுப்பைக் கக்கிய மாண்பின் சிகரம்.
இவர் ஆன்மீகவாதி என்பதால், இவர் இசைச் சாதனைகளை, எந்த இறை மறுப்பாளரும் பாராட்டத் தவறியதில்லை. உலகில் உயர்வு பெற்ற, ஒப்பற்ற மனிதர் பலரும், புரட்சியாளர் பலரும், மனித நேயர்கள் பலரும் இறை மறுப்பாளர்களே என்பது இளையராஜாவிற்குத் தெரிய வாய்ப்பில்லை.
மனிதருள் மாணிக்கம் எனப்படும் நேரு ஓர் இறை மறுப்பாளர்! அவர் சிலைக்கு இவர் மாலை இட்டு மரியாதைச் செலுத்தமாட்டாரா? இல்லை பெரியாருக்கு மட்டுந்தான் அந்த அளவுகோலா? கமலகாசன் அவர்கள் ஓர் இறை மறுப்பாளர். அவர் பாராட்டு விழாக்களில் இளையராஜா பாராட்டுகிறார். மரியாதை செலுத்துகிறார்! இது என்ன இரட்டை வேடம்?
இவருக்கு வந்த வாழ்வு, திறமை எல்லாம் இறைவன் தந்தது என்ற அவர் எண்ணத்தின், இறுமாப்பின் விளைவு இது. இறைவனுக்கு இவர் மட்டும் என்ன செல்லப்பிள்ளையா? தேடிவந்து இவருக்கு மட்டும் கொடுத்தார்? இறைவன்தான் திறமைகளை, வாய்ப்புகளைத் தருகிறார் என்றால், எல்லோருக்கும் ஏன் கொடுக்கவில்லை? கொடுக்கக் கூட வேண்டாம்; எடுக்காமல் இருக்கலாமே?
எத்தனையோ பேருக்கு கண்கள் இல்லை, காது கேட்காது, பேசா வாய், கையில்லாதவர்கள்; கால்கள் இல்லாதவர்கள். இவற்றையும் இறைவன் செய்தான் என்றால் அவன் இறைவனா?
பூர்வ ஜென்ம வினைப்பயன் (பலன்) என்பீர். அந்த பூர்வ ஜென்மத்தைப் படைத்தவன் யார்? எல்லாம் அவன் (இறைவன்) என்றால், எல்லோரையும் நல்லவர்களாக, வல்லவர்களாக படைத்திருக்கலாமே! சாதாரண மனிதர்களுக்கும் எழும் இந்தச் சிந்தனை, மேதாவிகளாய்த் தங்களைக் காட்டும் இவர்களுக்குத் தெரியாமல் போவதேன்?
இந்த எளிய சிந்தனைகூட இல்லாத இளையராஜா, விஞ்ஞானத்தைப்பற்றி விமர்சிக்க வந்துவிட்டார்.
19.12.2012 தேதியிட்ட குமுதம் இதழில், இளையராஜாவைக் கேளுங்கள்! பகுதியில், சட்டமங்கலம், என். கதிர்வேல் என்பவர், விஞ்ஞானத்தைப் பற்றிய இரண்டாவது முறை பதில் அளித்தது நன்றாயிருந்தது. என்றாலும், அதனால் கொஞ்சங் கூடவா உலகத்திற்குப் பயன் இல்லை? என்று கேள்வி கேட்க, இளையராஜா அளித்துள்ள பதில்:
இயற்கையில் விஞ்ஞானம் காற்றில் அடிபடும் சிறு சருகுதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அரிக்கேன் (புயல்) அமெரிக்காவை உலுக்கியதே? அது எப்படி எங்கே செல்லும் என்றுகூடத் தெளிவாகச் சொல்லமுடியாத விஞ்ஞானம்! _ அது ஏன், எப்படி உருவாகிறது. அதைத் தடுக்க என்ன செய்யவேண்டும் எனக் கண்டுபிடிக்க முடியாத முடம் ஆன _ மூடமான விஞ்ஞானத்தால் என்ன பயன்? பேசாமல் மூடிவிட்டுப் போக வேண்டியதுதானே? விஞ்ஞானத்தால் என்ன பயன்? என்று கேள்விகேட்டு பதிலை முடிக்கிறார்.
விஞ்ஞானம் என்றால் என்ன என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் பிதற்றிய பதில் இது.
இயற்கையைப் பயன்படுத்துவதுதான் விஞ்ஞானம்; இயற்கையைக் கட்டுப்படுத்துவது அல்ல. விஞ்ஞானம் என்பது இயற்கையைச் சார்ந்ததேயன்றி, இயற்கையைப் புறக்கணித்துச் செயல்படுவது அல்ல. இயற்கை நுட்பங்களை ஆய்ந்து அறிந்து புரிந்து அதனால் கருவிகள் படைத்தல் விஞ்ஞானத்தின் ஆக்கம்.
இயற்கையைப் பயன்படுத்தி (இயற்கையில் உள்ள இயல்புகளைப் பயன்படுத்தி) கருவிகள் அமைத்தல், ஆற்றல் பெறல், இயற்கையின் பாதிப்பினின்று இயன்றவரைக் காத்துக் கொள்ளல்; இயற்கை அழிவை முன்கூட்டியே அறிந்து எச்சரித்தல்; தற்காப்பு மேற்கொள்ளல்; முடிந்த அளவிற்கு இயற்கைத் தாக்குதலை எதிர்கொள்ளல், முறியடித்தல் இவையே அறிவியல்.
அறிவியலின் இத்தத்துவங்களை அறிந்த எவரும் இளையராஜாவைப் போல பிதற்றமாட்டார்கள்.
அமெரிக்காவை புயல் தாக்கியதே! அறிவியல் என்ன செய்தது? என்ன செய்ய முடியும்? அவற்றைச் செய்ய முடியாத அறிவியல் முடம்; மூடம் என்கிறார்.
புயல் வரப்போகிறது என்று இரு நாள்களுக்கு முன்பே மக்களை எச்சரித்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காத்தது; காப்பது அறிவியல் சாதனையல்லவா?
கடலில் மீன்பிக்கச் செல்ல வேண்டாம், இந்த இடத்தில், இத்தனை மணிக்குப் புயல் கரையைக் கடக்கப் போகிறது என்று முதல் நாளே மிகச் சரியாகச் சொல்லி மக்கள் உயிரை, உடமைகளைக் காத்து உதவுவது விஞ்ஞானத்தின் பயன் இல்லையா? வரும்புயலை தடுத்து நிறுத்தினால்தான் அறிவியலா? சுனாமிபற்றிய அனுபவம், அது சார்ந்த அறிவியல் ஆய்வு நம்மிடையே இல்லாததால் எத்தனை லட்சம் உயிர்களை நாம் பலி கொடுத்தோம்! ஆனால் அதன்பின் அறிவியல் கை கொடுத்து முன்னெச்சரிக்கை செய்வதால், மக்கள் வீட்டை காலி செய்து விட்டு, மேட்டையடைந்து தப்பிக்கிறார்கள். இது அறிவியல் சாதனையில்லையா?
இயற்கைச் சூழலும், காற்றழுத்த மாறுபாடு பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. நிலநடுக்கம் பூமியின் தட்டுகளின் அடுக்குகள் நகர்வால் ஏற்படக்கூடியது. இவற்றை எப்படித் தடுத்து நிறுத்த இயலும்.
பூமி தோன்றிய நாளிலிருந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது. அது தொடர் நிகழ்வு. கடல் அலைபோல. அலை ஓயாது. இயற்கைச் சவால்களும் தொடரும். இதில் நிலைத்து நின்று, ஈடுகொடுத்து, எதிர்நீச்சல் போட்டு சாதிப்பதே அறிவியல். தடுத்து நிறுத்துவது அல்ல.
இயற்கை கோடிக்கணக்கான ஆண்டுகளாய் இருப்பது. அறிவியல் ஒரு நூற்றாண்டு வளர்ச்சி. இக்குறுகிய காலத்தில் அதுசாதித்திருப்பதே ஏராளம்; வியப்பிற்குரியது. உண்மை இப்படி இருக்க, ஏன் தடுக்கவில்லை, முறியடிக்கவில்லை மூடிவிட்டுப்போ! என்றால் இது மூடத்தனமல்லவா?
விஞ்ஞானத்தை இளையராஜா மூட்டைக் கட்டச் சொல்கிறார். விஞ்ஞானத்தை இவர் புறக்கணித்தால், இவர் கச்சேரியையே மூட்டைக் கட்டவேண்டிய நிலை வரும்.
விஞ்ஞானம் இல்லையென்றால் திரைப்படம் இல்லை. திரைப்படங்கள் இல்லையென்றால் இளையராஜா இல்லை. விஞ்ஞானம் இல்லையென்றால் இசைக்கருவிகள் இல்லை; விஞ்ஞானம் இல்லை என்றால் இசைத்தட்டுகள் இல்லை, கேசட்டுகள் இல்லை; விஞ்ஞானம் இல்லையென்றால், பேருந்து முதல், வானூர்திவரை எதுவும் இல்லை; விஞ்ஞானம் இல்லையென்றால் மின்சாரம் இல்லை;
ஒலிபெருக்கியில்லை. இவையெல்லாம் இல்லையென்றால் இளையராஜாவிற்கு கச்சேரியும் இல்லை; பயணமும் இல்லை; பாடல் பதிவும் இல்லை, இன்றைய வாழ்வும் இல்லை.
இப்படி எல்லாவற்றிற்கும் விஞ்ஞானத்தைச் சார்ந்திருக்கும் இவர், விஞ்ஞானத்தை மூட்டைக்கட்டச் சொல்வதுதான் மூடம்; விஞ்ஞானமே இல்லையென்றால் இவர் ஆகிவிடுவார் முடம்!
இளையராஜாவிற்கு நிறைவாக ஒன்று சொல்லி, இவ்விளக்கத்தை முடிக்க விரும்புகிறேன்.
இளையராஜா அவர்களே, விஞ்ஞானம் என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? புயலை நிறுத்துவதுதான் விஞ்ஞானமா?
வேளாண் துறையில் முதலில் நிலத்தைக் கீற, கூறான கல்லைச் செதுக்கி எடுத்தானே அது விஞ்ஞானம்! வட்டமாக சக்கரத்தை வடிவமைத்து வாகனம் செலுத்தினானே அதுதான் அடுத்த விஞ்ஞானம்.
இன்றைக்குள்ள டிராக்டரும், நடவு, அறுவடை எந்திரங்களும் அதன் வளர்ச்சி. இப்படி ஒவ்வொரு துறையிலும் ஏராளமான விஞ்ஞானம்தான் வாழ்வையும் வளர்ச்சியையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
மூங்கில் குழாயில் ஓட்டையிட்டு காற்றை இசையாக்கினானே அது விஞ்ஞானம்! ஆர்மோனியம் அடுத்த விஞ்ஞானம். இப்படி பல இசைக் கருவிகளும் விஞ்ஞானம் தந்தவை. இந்த இசைக் கருவிகளும் இல்லையென்றால், இசையமைப்பாளரே இல்லை! வெறும் வாய்ப்பாட்டுக்காரன் மட்டுமே பாடிக் கொண்டிருப்பான்.
என்ன இளையராஜா, விஞ்ஞானத்தால் வாழ்ந்து கொண்டு, விஞ்ஞானத்தை மூடச் சொல்லலாமா? நுனிக் கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டும் அறிவீனம் அல்லவா இது?
இசையமைப்பாளர் அந்த வேலையைப் பார்க்க வேண்டும்; பேச வேண்டும். நான் இசையைப்பற்றி விமர்சிக்கலாமா? தெரியாத விஞ்ஞானம்பற்றி நீங்கள் பேசுவது 402ஆம் குறளையே நினைவுபடுத்துகிறது!
இளையராஜாவின் இன்னொரு பதிலை அடுத்த இதழில் பார்ப்போம்.
- மஞ்சை. வசந்தன்

செய்திகளை பகிர்ந்து கொள்ள

3 comments:

Prakash said...

அய்யா இளையராஜா நீர் இசையில் மட்டும்தான் மேதை. தேவையற்ற அதிகப் பிரசங்கித்தனம் வேண்டாம்.

Sunantha said...

அன்பர்களே ...இளையராஜா இசைக்காக வாழ்வை அர்ப்பணித்து விட்ட ஒரு மேதை...வாழ்வை, சக மனிதனை, சுற்றுப்புறத்தை நுட்பமாக அவதானிப்பது வேறு ஒரு கலை..அதை நாம் நெடுங்காலம் நம்நேரத்தை செலவழித்து , பயின்று அடைகிறோம்..இளையராஜா இசை தவிர வேறு விஷயங்களுக்கு நேரம் செலவழிப்பதை விரயமாக எண்ணுபவர்..அவருக்கு வேறு கலைகள் கைகூட வாய்ப்பு இல்லை...இதன் விளைவே அவரது சக மனிதனை எரிச்சலடைய செய்யும் கறாரான கருத்துக்களும், எவரிடமும் ஓட்ட முடியாத தன்மையும் ...முதிர்ந்த மனிதன் நீங்கள் என்றால் அவரை விமரிசிப்பது விடுத்து அவரது இசையை மட்டும் நீங்கள் ரசிக்கப் பழகலாம்..விமரிசிப்பது கண்டு அவர் மாறப்போவதில்லை...விமரிசிப்பதால் எரிச்சல் தவிர வேறு நல்லுணர்வு உங்களுக்கு கிட்டப்போவதில்லை...நன்றி..

Anonymous said...

You have a basic flaw in your write-up...

If someone needs to be the best expert in a field to have opinions on the same...then noone can comment on any subject...

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...