Wednesday, February 20, 2013

இராமேசுவரத்தில் தமிழர்களின் குரல்!


தமிழ்நாட்டுப் பிரச்சினை, தமிழர்களின் பிரச்சினை என்றால் மத்திய அரசுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை இருக்கிறது; ஓரவஞ்சனை இருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் கூறி இருப்பது அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல.
நடந்திருக்கிற - நடந்து கொண்டு இருக்கிற பிரச்சினைகளைச் சீர்தூக்கிப் பார்த்தால் அந்த முடிவுக்குதான் வர வேண்டியிருக்கிறது. லண்டனில் ஹெல்மட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்ற விதிமுறை உண்டு. அங்கு வாழும் பஞ்சாபிகள் அந்நாட்டு விதிக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்று வரும்பொழுது, இந்திய அரசு உடனடியாகத் தலையிடுகிறது.
இங்கிலாந்து செல்லும் இந்தியப் பெண்களுக்கு வர்ஜினி சோதனை நடத்தினால் மூக்கின்மேல் கோபம் வருகிறது இந்திய அரசுக்கு.
ஆனால் தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர்களான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டாலும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்டாலும் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை. மிஞ்சிப் போனால் வருத்தத்தைத் (Concern) தெரிவித்துக் கொள்வார்கள். அவ்வளவுதான். இவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது மானமிகு தொல். திருமாவளவன் வைத்த குற்றச்சாற்றைப் புறந்தள்ளிட முடியாது.
ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஒரு கலவரம் ஏற்பட்டது. சீக்கியர்களில் இரு பிரிவுகள் உண்டு. தலைப்பாகை கட்டிக் கொள்பவர்கள் அதர்மி பிரிவினர். தலைப்பாகை கட்டிக் கொள்ளாதவர்கள் தேரா பிரிவைச் சேர்ந்தவர்கள் - இவர்கள் சீக்கியர்களில் தாழ்த்தப்பட்டவர்களாம்.
(இந்து மதத்தை விட்டு விலகி ஓடினாலும், இந்தப் பாழாய் போன ஜாதியும், தீண்டாமையும் ஒழியாது போலும்!)
தேரா பிரிவுக் குரு நிரஞ்சன்தாஸ் வியன்னா சென்றிருந்தபோது, அவரது ஆதரவாளர்கள் குருஜியின் காலைத் தொட்டு வணங்கினர். சீக்கியர்கள் அவர்களின் புனித நூலான கிரந்த் சாகிப்பை மட்டுமே வணங்க வேண்டும் என்று இருக்கும் பொழுது, எப்படி குருவின் காலில் விழலாம் என்று வியன்னாவில் சீக்கியர்களிடையே கலகம் மூண்டது. கலவரத்தில் சீக்கிய குரு கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்தார்.
அதன் எதிரொலியாக இந்தியாவிலும் குறிப்பாக பஞ்சாபிலும் கலகம் மூண்டது. இந்திய அரசு தலையிட்டு சமாதானம் செய்தது. அதே நேரத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா எப்படி நடந்து கொள்கிறது?
பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனிரோ நகரில் ரியோபிளஸ் 20 அய்.நா. மாநாடு 2012 ஜூனில் நடைபெற்றது.
அம்மாநாட்டில் பங்கு கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கைக் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வந்தால் 20 ஆண்டுகள் சிறையில் அடைப்பேன் என்று கத்தினார்.
அந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டிருந்தும் அதுகுறித்து ஒரு வார்த்தை பேசவில்லையே.
இராமேசுவரத்தில் நேற்று உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முக்கியமாக ஒரு கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கான கடல் எல்லைகள் வரையறுக் கப்பட்டுள்ளன. கரையிலிருந்து 22 கி.மீட்டர் தூரத்தை உள்நாட்டுக் கடல் எல்லையாகக் கொள்ள வேண்டும். 44 கி.மீட்டர் தூரம் வரை சுங்கம் வரி வசூலிக்கும் எல்லையாகும். 320 கி.மீட்டர் தூரம் பொருளாதார எல்லை என்று வரையறை செய்யப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேவிப்பட்டினத் திலிருந்து 34 கடல் மைல்கள் வரை சென்று மீன் பிடிக்கலாம். ஆனால் தனுஷ்கோடியிலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க  6 மைல் தூரம் சென்றாலே இலங்கை எல்லை வந்து விடுகிறது என்று முக்கிய மான நிலையை எடுத்துக் கூறினார்.
இதைப்பற்றி எல்லாம் இலங்கை சிங்கள அரசு அலட்சியம் செய்வதைக் கூடப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்தியா ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் கேள்விக்குறி.
ஜனநாயக வழிமுறைகள் இந்தியாவுக்கு உரைக் காதோ என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இந்த நேரத்திலாவது இந்தியா புரிந்து கொள்ளத் தவறுமேயானால், இந்தியாவிலேயே அமைதியாக இருக்கக் கூடிய தமிழ் மண்ணையும் உஷ்ணப்படுத்தி விடும் என்று எச்சரிக்கின்றோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...