Friday, January 4, 2013

மனிதர்களை படிக்கிறேன்


வழக்கறிஞர், ஆசிரியர் கி.வீரமணி 80ஆவது பிறந்த நாள் - வாழ்த்துப் பெறுவோம்
திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை நாளிதழ் ஆசிரியரும், வழக்கறிஞருமான திரு. கி.வீரமணி அவர்கள் தனது 80ஆவது பிறந்த நாளை டிசம்பர் 2ஆம் தேதி கொண் டாடினார்.
தமிழர் தம் பண்பாட்டில் - 80 வயதில் வாழ்ந்து தொடர்ந்து வெற்றி நடைபோடும் மூத்த குடிமக்களிடம் வாழ்த்துப் பெறுவது சமூக கடமையாக கருதப்படுகிறது. வாழ்த்துப் பெறுவது மன மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு மேலும் மேலும் உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங் கும். 80ஆவது பிறந்த நாள் விழாவை சென்ற டிசம்பர் 2ஆம் தேதி தமிழ் கூறு நல்லுலகமே ஒன்று சேர்ந்து ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடியது.
விடுதலை நாளிதழில் ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் இவரை ஆசிரியர் என்று கூறி அழைப்பதில் தமிழ் கூறும் நல்லுலகம் மகிழ்ந்து பாராட்டுகிறது. தமிழர் துன்பப்படும்போதெல்லாம் அவர்களுக் காக குரல் கொடுக்கவும், தமிழர் களுடைய உரிமைகள் மறுக்கப்படுகிற போதெல்லாம் அவர்களுக்காக போராடுவதும், தமிழர்களுடைய பண்பாடு சிதைக்கப்படுகிறபோது அதை எதிர்த்து குரல் கொடுப்பதும் இருவடைய நற்றொண்டு. தொடர்ந்து தன் இளம் பருவத்திலிருந்து இன்று வரை அயராது உழைத்து வருபவர்தான் திரு. கி.வீரமணி. தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையால் ஈர்க் கப்பட்டு, சுயமரியாதை பிரச்சார நிறுவனம், பகுத்தறிவு இயக்கம், திராவிடர் கழகம் இணைந்த சமூக பொருளாதார மறுமலர்ச்சி இயக்கத் தில் சேர்ந்து தன்னுடைய இளமைக் காலம் தொட்டு கடந்த 70 ஆண்டு காலமாக தொடர்ந்து பணியாற்றி வருபவர்தான் திரு கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட திராவிடர் கழகம் தமிழர்களுடைய வளர்ச்சிக்காக, திராவிட இன மேம்பாட்டுக்காக, திராவிடர்களுக்கு என்று தனி நாடு பெற வேண்டும் எனும் நோக்கத் திற்காக இந்தியா விடுதலை அடையும் வரையில் போராடியது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் திராவி டர்களை மேன்மை பெறச் செய்யவும், திராவிட இன மக்கள் சுயமரியாதையுடன் வாழவும் அதன் மூலம் சமூக அந்தஸ்தில், அரசியலில், அரசாங்கத்தில், உரிய இடத்தை பெற வேண்டும் எனும் சமூக நீதிக்காக காலமெல்லாம் இயக்கம் நடத்தி வந்த தந்தை பெரியார் அவர்களுக்கு உறுதுணையாக, சீடராக, தொண்டராக, செயலாளராக, திராவிடர் கழகத்திற்கு பொதுச் செயலாளராக பணியாற்றி தலைவராக உயர்ந்தவர்தான் திரு. கி.வீரமணி அவர்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் எம்.ஏ. பொருளாதாரத்தில் தங்கப் பதக்கம் பெற்று முதலாவது மாணவராக பட்டம் பெற்று தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியிலும் சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றியவர் திரு. கி.வீரமணி அவர்கள்.
10 வயது முதல் இன்றுவரை சமூகப் பணி, பொதுப் பணி, சட்டப் பணி, சுய மரியாதைப் பணி என பல்வேறு பணி களில் முத்திரை பதித்து, மனித இனத்தை சமநோக்கில் எடுத்துச் செல்லவும், உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்கிற பேதத்தை ஒழித்து, சமதர்ம சமுதாயத்தை படைக்க கடவுள் மறுப்புமூலம்தான் மனித உரிமையை நிலைநாட்ட முடியும் என்ற தந்தை பெரியார் கொள்கையை ஏற்று தீவிரமாக பணியாற்றியவர் திரு. கி.வீரமணி அவர்கள்.
1976இல் இந்தியாவில் அவசரக் காலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது போலீசாரால் கைது செய்யப்பட்டு ஓராண்டு மிசா கைதியாக சிறைக்கூடத் தில் இன்னல்களை எதிர்கொண்டவர் திரு.கி.வீரமணி அவர்கள்.
தமிழ்நாட்டில் அனைத்து கிராமங் களுக்கும், குக்கிராமங்களுக்கும், நகரங் களுக்கும் பயணம் செய்து தமிழர்களைத் தட்டி எழுப்பிய திறமைமிகு பேச்சாளர் திரு கி.வீரமணி அவர்கள். தந்தை பெரியார் கொள்கையை  இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் தலைமைத் தளபதியாக எடுத்துச் சென்று பணியாற்றி வந்தார், வருகிறார்.
திரு. கி.வீரமணி அவர்கள் சமூகநீதிக் கொள்கையையும், அதை நடை முறைப்படுத்திய விதத்தையும் பாராட்டி 2003ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி அவரது சாதனைகளுக்கு பல்கலைக் கழக அங்கீகாரம் வழங்கியது. தமிழ் நாட்டில் - இந்தியாவில் வாழும் திராவி டர்கள் ஏன் உலகம் முழுவதும் வாழ்கிற திராவிடர்களுடைய வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டு வரும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், திராவிடர் தலைவர் கி.வீரமணி என்று அழைக்கவும் பொருத்தமானவராவார்.
ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர் களை நான் மாநில கல்லூரியில் 1974இல் படித்துக் கொண்டிருந்தபோது முதன் முதலாக சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை அவரை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சந்திப்பதையும், அவரிடம் சமூகநீதி, தமிழர் வளர்ச்சி குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுவதையும் நான் எப்பொழுதும் வாடிக்கையாக கொண்டிருப்பேன். தமிழர் களுள் எவரொருவர் திறமையானவராக இருந்தாலும் அவரை அழைத்து ஊக்கு விப்பதும், பாராட்டி மகிழ்வதும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைசிறந்த பண்புகளில் ஒன்றாகும். அதன் அடிப் படையில் ஆசிரியர் அவர்கள் பல நேரங் களில் சட்டக்கதிர் பணியினையும், அதைத் தொடர்ந்து 20 ஆண்டு காலமாக நான் நடத்தி வருவதைக் கண்டும் மகிழ்ச்சி அடைவதோடு சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பில் சட்டக்கதிரை பாராட்டி விருதும் வழங்கி மகிழ்ந்தார். நன்றி என்பதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் பிரச்சினைகள் வருகிறபோ தெல்லாம் தமிழர்களுக்கெல்லாம், முரசாய், கேடயமாய் விளங்கி வருபவர் திரு. கி.வீரமணி அவர்கள்.
வழக்கறிஞர் கி.வீரமணி அவர்கள் செல்வி மோகனா அவர்களை திருமணம் செய்து கொண்டார். இது கலப்புத் திருமணம். இவர்களுக்கு இரண்டு மகன் களும், மகளும் உள்ளனர். இவர்களும் கலப்புத் திருமணம் செய்துகொண் டனர். ஜாதி, மதம், கடவுள் மறுப்பு கொள்கையில் இவரது குடும்ப உறுப்பி னர்கள் உறுதி யுடன் இன்றுவரை கடைப்பிடித்து வரு கின்றனர். இவரது மகன் திரு.அன்புராஜ் தலைசிறந்த கல்வியாளராக தன்னை உயர்த்திக் கொண்டு தன் தந்தையின் கொள்கை களை தொடர்ந்து உலகமெல்லாம் உள்ள தமிழர்களிடம் எடுத்துச் செல்லும் தளபதியாக விளங்கி வருகிறார்.
சமூகநீதிக் காவலராக விளங்கும் திரு.கி.வீரமணி அவர்களுக்கு இந்தி யாவின் உயரிய விருதான பத்மசிறீ விருது வழங்கி அவர் செய்துவரும் பணியினை ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டை சார்ந்த அரசியல்வாதி மணிசங்கர் அய்யர், நடிகைகள் வைஜயந்திமாலா, ஹேமமாலினி, ரேகா, அறிவியல் அறிஞர் எம்.எஸ். சாமி நாதன், பத்திரிகையாளர் சோ ராமசாமி, வழக்கறிஞர் பராசரன், அணுவிஞ் ஞானி கஸ்தூரிரங்கன் ஆகியோர் குடியரசுத் தலைவரால் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட் டுள்ளனர். சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் திராவிடர்களின் கலை பண்பாட்டினை பிரதிபலிக்கும் விடு தலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்க தமிழக தலைவர்கள் குடியரசுத் தலை வருக்கு பரிந்துரை செய்திட வேண்டும்.
80ஆவது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் திரு. வீரமணி அவர்கள் வழக்கறிஞராகவும், சமூக சேவையாள ராகவும், கடவுள் மறுப்பாளராகவும், சமுதாய சீர்திருத்தவாதியாகவும், திராவிடர்களின் தலைவராகவும் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து  பணி யாற்றி வருபவர். அவரை வாழ்த்து வதிலே, வாழ்த்துப் பெறுவதிலே சட்டக் கதிர் மகிழ்ச்சி கொள்கிறது. அவர் மேலும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் கூறு நல்லுலகத்திற்கு பணியாற்ற வேண்டும் என்பதனையே திராவிட இன மக்கள் என்றும் எதிர்நோக்கிக் காத்திருக் கிறார்கள்.
வாழ்க, வாழ்க பல்லாண்டு.
(நன்றி: சட்டக்கதிர் சனவரி 2013)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...