Tuesday, January 1, 2013

உள ரீதியான உறுதி தேவை!


இந்தியா உலக நாடுகள் முன் தலைகுனியும் நிகழ்வுகள் அவ்வப்பொழுது நிகழ்வதுண்டு.
இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறி மகிழ்ச்சிக் கூத்தாடிய கால கட்டத்தில், அதற்காகப் போராடிய தலைவரான காந்தியாரை இந்துத்துவா வெறியன் ஒருவன் சுட்டுக் கொன்றான்.
காந்தியாரை நாங்கள் காப்பாற்றினோம் - உங்களால் காப்பாற்ற முடியவில்லையே என்று வெள்ளைக்காரன் ஏகடியம் செய்த நிலை!
450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக் களான இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலத்தை அயோத்தியில் பெருந் தலைவர்கள் வழிகாட்ட, இந்துத்துவா காவி வெறி கூட்டமான சங்பரிவார்க் கும்பல் பட்டப் பகலில் எந்தவிதக் கூச்சமுமின்றி இடித்து முடித்தனர் (1992 டிசம்பர் 6)
2002 பிப்ரவரியில் குஜராத் மாநில அரசே முன்னின்று சிறுபான்மை மக்களான முசுலிம்களை ஆயிரக்கணக் கில் கொன்று குவித்தது.
அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதமரான வாஜ்பேயியே எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்லுவேன் என்று கூனிக் குறுகினார்.
இந்தியாவில் இந்து சாமியார்கள் என்பவர்கள் ஆயிரக்கணக்கில் நிர்வாணமாக வந்து கும்பமேளாவில் குளிப்பது - இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இந்தியா காட்டுவிலங்காண்டி நாடாக இருக்கிறதே என்று வெளி நாட்டவர்கள் பரிகசிக்கும் போக்கு இன்னொரு பக்கம்.
இந்தக் கால கட்டத்தில் மிகக் கேவலமான அவமானம் என்பது இந்தியாவில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை.
இந்தியாவின் தலைநகரான டில்லியே இதற்குத் தலைமை தாங்குகிறது என்றால், இது படுகேவலம் அல்லவா!
புதுடில்லியில் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கயவர்களால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு எவ்வளவோ முயன்றும் அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடியாத பரிதாபமே!
அதனைத் தொடர்ந்து வட மாநிலங்களிலும்,தமிழ் நாட்டிலும் சிறுமிகள் காம மிருகங்களால் வேட்டை யாடப்படும் கேவலம்!
இதில் வேதனை என்னவென்றால், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், சென்னை ஆர்ப்பாட்டத் தில் (29.12.2012) குறிப்பிட்டது போல புதுடில்லியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி பெண் முதல் அமைச்சர்கள் இருக்கும் நிலையில், இத்தகு கொடுமைகள் பெண்களுக்கு நடந்திருக்கிறதே என்பதுதான். இந்தியாவில் நிலவும் இந்துத்துவா மனப்பான்மை என்பது பெண்களை ஓர் உயிராகக் கூடப் பாவிக்காத தன்மை கொண்டதாகும்.
பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல் லுதல் பாவமாகாது என்கிறது இந்துக்களின் முக்கிய சாஸ்திர நூலான மனுதர்மம் (அத்தியாயம் 11, சுலோகம் 66).
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தனை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் என்பதும் அதே மனுதர்மம்தான் (அத்தியாயம் 9, சுலோகம் 17).
இத்தகைய மனப்பான்மை உள்ள இந்து சமூக அமைப்பில் பெண்களைக் காமப் பொம்மைகளாகக் கருதும் நிலை இன்னும் தொடர்கிறது.
இதற்கு என்ன தீர்வு? முத்தேவிகள் இந்து மதத்தில் இருக்கிறார்களே. அவர்களைப் பூசை போட்டால் தீர்வு கிடைக்குமா? எத்தனை எத்தனை ஆண்டு காலமாக நவராத்திரி பூஜைகளை நடத்தி வந்திருக்கின்றனர்? சக்தி, கல்வி, செல்வம் என்றெல்லாம் வியாக்கியானம் செய்து வந்துள்ளனர்.
அதன் பலன் இதுதானா? சிந்திக்க வேண்டும்  -குறிப்பாகப் பெண்கள்!
பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளுதல், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களைத் தாக்குதல் என்கிற அளவுக்குப் பக்குவமும், சக்தியும் பெற்றாக வேண்டும்.
பள்ளிகளில் பெண் பிள்ளைகளுக்குக் கராத்தே பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், துப்பாக்கி அனுமதி வேண்டும் என்றும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மகளிரணி மற்றும் பாசறையினர் முழக்கமிட்டது வெறும் ஆர்ப்பாட்டச் சொற்கள் அல்ல.
இன்றைய நடைமுறையில் தேவைப்படக் கூடியவை. நான்கு இடங்களில் பெண்களைச் சீண்டியவர்கள் பெண்களால் தாக்கப்பட்டனர்; அடித்து விரட்டப்பட்டனர் என்று செய்தி பரவினாலே போதுமே,  நிலைமை கட்டுக்குள் வந்து விடாதா?
தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை என்றார் புரட்சிக் கவிஞர். பெண்கள் இராணுவ அதிகாரிகளாக, விமான ஓட்டிகளாக வளர்ந்துவிட்ட காலம் இது அல்லவா!
உரிய பயிற்சி அளிக்கப்பட்டால் பெண்கள்மீதான வன்முறை   விடை பெறும். அதைவிட மிக முக்கியம், பெண்கள் உளரீதியாக, உறுதிபடைத்தவர்களாக வளர்த்தெடுக்கப்படுவதாகும். பாடத் திட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியச் சிந்தனைதான் அதற் குத் துணை நிற்க முடியும் - அரசுகள் சிந்திக்கட்டும்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...