Monday, December 24, 2012

தந்தை பெரியார் நினைவு நாள் சிந்தனை


தந்தை பெரியார் மறைந்து 39 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனாலும் தந்தை பெரியார் மக்கள் சிந்தனையிலிருந்து மறையவில்லை. மக்கள் வாழ்வோடு நீக்கமற நிறைந்துள்ளார்.
நாட்டு நடப்பு ஒவ்வொன்றும் தந்தை பெரியார் சிந்தனை என்ற உரைகல்லில் வைத்து உரசப்படு கின்றன.
தமிழ்த் தேசியம் என்று கூறி தொடக்கத்தில் தந்தை பெரியார் அவர்களை உரசிப் பார்த்தவர்கள் கூட பிற்பாடு பதுங்குக் குழியைத் தேடும் நிலைதான் இன்று.
காரணம் - சமூக அடிப்படையின் சகல கூறுகளிலும்  அவரின் தாக்கம் இருக்கிறது.
மனித உரிமைகள் என்று பட்டியலிட்டு, மனித சமத்துவம், சகோதரத்துவம், பாலியல் உரிமை, கல்வி உரிமை, வேலை வாய்ப்பு என்ற வேட்கைத்தளம் ஒரு பக்கம்; மனிதனிடத்தில் குடிகொண்டுள்ள பகுத்தறிவுக்கு விலங்கு பூட்டப்பட்ட நிலையில், அதிலிருந்து அவனை விடுவிக்கும் மிகப் பெரிய முயற்சி மறுபுறம்;   இவையெல்லாம் ஒரு தனி மனிதரால் சாதிக்கப்பட்டது என்பதை இதற்கு முன் வரலாறு கேள்விப்பட்டதில்லை.
அதனால்தான் தந்தை பெரியார் பற்றி அறிஞர் அண்ணா குறிப்பிடும்பொழுது பெரியார் ஒரு சகாப்தம், கால கட்டம், ஒரு திருப்பம் என்று மிகத் துல்லியமாகக் கணித்தார்.
அய்யா மறைந்தாலும், எதிர்காலத்தில் நம் பயணம் எந்தத் திசையில் இருக்க வேண்டும் என்ற பார்வையையும் கொடுத்துச் சென்றுள்ளார்.
தந்தை பெரியார் தம் இறுதிப் போராட்டமாக அறிவித்தது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியதாகும்.
அதன் தத்துவம் அனைவரும் கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட வேண்டும் என்பதல்ல, மிக முக்கியமான இடமாக பெரும்பாலான மக்களால் சரியாகவோ தவறாகவோ நினைக்கப்படும் ஓரிடத்தில் - கருவறையில் ஒரு குறிப்பிட்ட மக்க ளுக்கு மட்டுமே ஆதிபத்தியம்; மற்றவர்களுக்குக் கிடையாது - அது பிறப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்று என்ற சகிக்க முடியாத பிறவி ஏற்றத் தாழ்வை உடைப்பதுதான் - மனித உரிமையைக் காப்பதுதான்  தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் போராட் டத்துக்குள் அடங்கியுள்ள தத்துவமாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டமும் சரி, நீதித்துறையும் சரி, பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் இந்த ஏற்பாட்டுக்குப் பக்க பலமாக இருப்பது என்பது வெட்கப்படத்தக்கதாகும்.
மண்ணுக்குச் சுதந்திரமா - மனிதனுக்குச் சுதந் திரமா என்ற தந்தை பெரியார் அவர்களின் கேள் விக்கு நாணயமான பதில் இதுவரை கிடைக்க வில்லை.
பொது வீதிகளில் நடப்பதில் தொடங்கி, பொது நீர் நிலைகளைப் பயன்படுத்துவது - உணவு விடுதியில் சமமாக உட்கார்ந்து உண்பது - கல்வி, வேலை வாய்ப்புகளில் இடம் என்று - தடைகள் தகர்க்கப்பட்டு கதவுகள் திறக்கப்பட்ட கால கட்டத்தில் இந்த ஜாதி என்னும் சர்ப்பம் கோயில் கருவறைக்குள் மிகப் பாதுகாப்பாகப் படம் எடுத்து ஆடுகிறதே என்ற அய்யாவின் கேள்விக்கு என்ன விடை? படித்தவர்களைக் கேட்கிறோம் - ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களைக்  கேட்கிறோம் - ஏன் ஆன்மிகவாதிகளையும் கூடக் கேட்கிறோம்.
தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு என்ன விடை? வெறும் ஆடைகளில், உடைகளில், அணிகலன்களில் மாற்றம் வந்தால் போதுமா? சிந்தனையில் மாற்றம் வர வேண்டாமா? அந்த மாற்றம் என்ற வகையில் பேதமற்ற சமத்துவ நிலை என்ற பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டாமா?
மயிர்க் காம்பு பிளந்து எழுதும் எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் தான் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.
ஜாதியைத் தூக்கிக் கொண்டு விட்டேனா பார் என்று திமிர் முறிக்கும் சக்திகள் தலைதூக்காது இருக்க வேண்டுமானால் அமாவாசைகளும், தொப்புளான்களும், ஊமையன்களும் கோயில் கருவறைக்குள் நின்று அர்ச்சனை செய்யவும், ஆராவமுத அய்யங்கார் வெளியில் நின்று கொண்டு என் பெயரில் அர்ச்சனை செய்யுங்கோ! என்று கேட்கும் ஒரு நிலை ஏற்பட்டாக வேண்டும். அது நமது சமூகத்தில் மிகப் பெரிய உளவியல் அதிர்வு அலைகளை உண்டாக்குமே!
அய்யா நினைவு நாளில் உரத்த முறையில் சிந்திப்போம்! உரத்த முறையிலும் செயல்படுவோம்!
இன்றைய கால கட்டத்தில் முற்போக்குச் சிந்தனை  - இடதுசாரித்தனம் என்று எந்தப் பெயர் கொடுத்தாலும் இதனைத் தாண்டி எதுவும் இருக்க முடியாது - முடியவே முடியாது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...