Friday, December 28, 2012

தனிமையை ஒதுக்கி நட்பு வட்டத்தைப் பெருக்குங்கள்!


தனிமையை இனிமை என்று பலர் சொல்வதுண்டு; ஆனால் அது சில நேரங்களுக்கு மட்டுமே; சில மனிதர்களுக்கு மட்டுமே.
எப்படி, எதையும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அதுவே உடலுக்கு ஊறு செய்கிறதோ, அதுபோலத்தான் தனிமையும்கூட. உயிர்க் கொல்லியாக, முடியாத மனிதர்களாக நம்மை ஆக்கி முடக்கி - விரைவில் முதுமையின் உச்சத்திற்கு அழைத்துச் சென்று நம்மை உருட்டி விட்டிடக் கூடும்.
நல்ல பிள்ளைகளைவிட  நாம் சம்பாதித்துக் கொள்ள வேண்டியது நல்ல நட்புறவு  கொண்ட நல்லவர் களான நண்பர்கள் வட்டத்தைத்தான்.
எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பது, நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், குறிப்பெடுத்தல் - அதுபற்றிய அசை போடுதல் (Reflecting thinking - Proactive thinking) ஆக்க ரீதியான எண்ணவோட்டங்களை வளர்த்தல் இவையெல்லாம் முதுமையை பெரும் அளவு வீழ்த்தும் விவேகமான வாழ்க்கை நடைமுறைகளாகும்.
இவற்றுக்கெல்லாம் மேலானதும், தேவையானதும் நண்பர்களிடம் கலந்து கலகலப்பாகப் பேசுதல்; அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் நடத்திடும் சுயமரியாதைத் திருமணங்களில்கூட உற்ற நண்பர்களாக வாழுவோம் என்ற உறுதிமொழியை மணமக்கள் இருவரும் எடுக்கும்படிச் செய்தார்கள்.
மனந்திறந்த நட்பு, லாபக் கணக்குப் போடாது நம்மின் உண்மை நலம் விரும்பிய நட்பு, நகுதற்பொருட்டு இருக்காது, மிகுதியாக நாம் செல்லும் போது, இடித்துச் சொல்லி, அல்லது படித்துப் படித்துச் சொல்லி நம்மை நல்வழியை விட்டு நகராது பார்த்துக் கொள்ளும் முறை சார்ந்த நட்பு மிக மிக அவசியம் அல்லவா?
அப்போதுதான் அது உடுக்கை இழந்தவன் கை போன்ற நட்பாக அமைய முடியும்; இன்றேல் உடுக்கை (இடுப்பு வேட்டி) பறிப்பாக அல்லவோ மாறி விடக் கூடும்?
தனிமையை ஒரு தண்டனை போல் கருதிட வேண்டும்; (சிறைச் சாலைத் தண்டனை களிலேயே கொடுமை யான தண்டனை தனிமைச் சிறைதானே! - ஒரு குறிப்பிட்ட அளவு தனிமை என்றால் அத் தகைய கைதிகள் தங் களது நடத்தைப்பற்றி தாங்களே சுயபரிசோ தனை செய்து மாற்றத் திற்கு ஆளான மனிதர் களாகவும் மாறலாம். ஆனால் அதுவே 24 மணி நேரமும் என்றால் அக்கைதி அல்லது அதுபோல் வாழ்பவர்கள் பைத் தியம் பிடித்து, சலிப்படைந்து, விரக்தியின் விளம்பிற்கே சென்று தெருவார்க்கும் பயனற்ற வீணன் ஆகி விடுவார்கள்.
இத்தனிமை, முதுகுடிமக்களுக்குத் திணிக்கப்படும் சூழல்தான் இன்று எங்கும்!
பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோ, படிப்பு, கல்வி, வீட்டில் உள்ள பலரும் வேலை பார்ப்பவர்கள். அவர்கள் யந்திரங்களாகி விட்டு வீடுகளுக்கு வரும்போது உண்ணக் கூட எண்ணாது, அப்பாடி களைப்பு நீங்க படுத்தால் போதும் என்று வரும்போது, தன் துணைவி மக்களுடன்கூட பேச முடி யாமல் அரக்க பறக்க உண்டு உறங்கிடச் செல்வர்; இல்லையேல் வீடுகளில் அறைக்கு அறை அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து, அப்போதைக்கு ஆளாகி உறங்கிடுவர்;
வீட்டின் பெரியவர்கள் பேட்டி கேட்டு வரம் பெற்று வாழும் நவீன வாழ்க்கையின் அங்கங்களாக நாளை எண்ணுவோராக அல்லது தள்ளுபவர் களாக வாழ்ந்து முடிய வேண்டியவர் களாகிறார்கள்.
எனவே ஊன்றுகோல் எப்படி முதுமை யில் பயன்படுகிறதோ அப்படி முதியவர் களுக்குப் பயன்பட வாழ்விணையர்கள் 2 பேரக் குழந்தைகள் (வீடுகளில் குடும்பங் களில்) வெளியில் கிளம்பி அல்லது சங்கடமில்லை என்றால் வீடுகளுக்கு உயிர்த் தோழர், தோழியர்களை வர வழைத்துக்கூட பழகி உரையாடி மகிழலாமே!
அதுகூட இருவழிப் பாதையாக அமைவது அவசியம் - எப்படி என் கிறீர்களா? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் குடும்ப விளக்கு அய்ந்தாம் பாகமான முதியோர் காதல் என்ற நூலைப் படித்து அதுபோல வாழுங்கள்; அல்லது வாழ முயலுங்கள்.
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லியை சற்று ஒதுக்கி வையுங்கள் - நம் சுயமரியாதை, வசதி எவ்வளவு முக் கியமோ அதுபோல நம்முடன் உள்ளவர் களின் வசதி, சுயமரியாதையையும் பற்றி நினைத்துப் பழகுங்கள்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள சன் என்ற பத்திரிகை குழுமம் தனிமை எவ்வளவு மனிதர் களின் உயிர்க் கொல்லி என்பதுபற்றி அண்மையில் விளக்கி ஓர் ஆய்வினை வெளியிட்டுள்ளது.
அதன்படி உடல் பருமனால் உயிருக்கு எப்படி ஆபத்தோ, 15 சிகரெட்டுகளை ஒரு நாளைக்குக் குடித்தால் அது எப்படி ஆபத்தானதோ, அது போன்றே தனித்தே இருப்பது; அதைப் போக்க எப்போதும் டி.வி.யின் முன்பே அமர்ந்து பார்த்திருப்பதைத் தவிர்த்து அந்தநாள் ஞாபகம் வந்ததே, நண்பனே நண்பனே என்று தழுவி வாழுங்கள்.
குறிப்பாக இது 75 வயது ஆன அனைத்து (இருபால்) முதியவர்களுக் கும் பொருந்தும் WRVS என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஒரு சர்வே நடத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள 65 வயதுக்கு அதிகமான பத்து லட்சம் பேர்.
600,000 பேர்கள் வெறும் தொலைக்காட்சி முன்னே உட் கார்ந்தே தம் நேரத்தைத் தொலைப் பதிலேயே வாழ்வின் எஞ்சிய காலத்தையும் தொலைக்கிறார்களா?
அடிக்கடி நண்பர்களோடு அரட்டை அடித்தாலும் பரவாயில்லை. நடைபயிற்சியில் காலை, மாலை, இடையில் தூக்கம் ஓர் அளவு (Cat’s Nap) உடற்பயிற்சி பேரப் பிள்ளை களுக்கு உதவுதல் - பொதுநலப் பணிகள் அமைப்புகளுக்குச் சென்று உதவிடுதல் - இவை மூலம் உங்கள் நேரத்தைப் பகிர்ந்து, தனிமையை ஒதுக்கி, பொதுமையை - நட்பு வட்டத்தை வளர்த்து, உங்கள் ஆயுளை யும் வளர்த்து  வாழக் கற்றுக் கொள்ளுங்கள், முதியவர்களே!
- கி.வீரமணி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...