Monday, November 19, 2012

இராம. கோபாலன் கோரிக்கையும் நமது கோரிக்கையும்


எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இந்துத் துவாவாதிகளுக்கு அவை எல்லாம் ஒரு பொருட்டல்ல.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளரான திருவாளர் இராம. கோபாலன் அய்யர் அரசுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.
1) ஒவ்வொரு கோயிலிலும் உள்ள விக்கிரகங்கள், அவற்றின் நகைகள் ஆகியவைபற்றி முழு மதிப்பீடு செய்து குறிப்பிட்ட கால அளவில் பதிவு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அவை சரி பார்க்கப்பட வேண்டும். இதில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிறார் திருவாளர் இராம. கோபாலன்.
இந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி வந்த இவர்களுக்கு இப்பொழுது நல்ல புத்தி வந்துவிட்டதா? அரசின் கையில் இருந்தால்தான் அவை பாதுகாப்பு என்று மனம் மாற்றம் பெற்று இருக்கிறார்களா?
சர்.சி.பி, இராமசாமி அய்யர் தலைமையிலே அமைக்கப்பட்ட இந்துக் கோயில்களுக்கெல்லாம் நேரில் சென்று ஆய்வு செய்து கோயில்கள் எப்படி எல்லாம் அர்ச்சகர்ப் பார்ப்பனர்களின் சுரண்டல் கூடாரங்களாக இருக்கின்றன - பாழடைந்த மண்டபங்களாகக் காட்சி அளிக்கின்றன. அர்ச்சகர்களே கோயில் சிலைகளை அபகரிக்கின்றனர் என்றெல்லாம் விலாவாரியாக வெளிப்படுத்தியதுண்டு.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அற நிலையத் துறை என்ற ஒன்றை உருவாக்கி, இந்துக் கோயில்களை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த காரணத்தால்தான் ஓரளவு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராசன் கோயில் தீட்சதர்ப் பார்ப்பனர்களின் தனி உடைமையாக இருந்தது. அதனை தி.மு.க. ஆட்சியில், கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராகவிருந்தபோதுதான் இந்து அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
நீதிமன்றம் வரை சென்று பார்த்தனர் தீட்சதர்கள்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கை சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பும் அளித்தது. அதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆண்டு ஒன்றுக்கு வெறும் 32 ஆயிரம் ரூபாய்தான் வருமானம் என்று நீதிமன்றத்தில் தீட்சதர்கள் கணக்குக் காட்டினர். அதிலும் பெரும்பாலும் செலவு என்று கணக்குக் காட்டினர்.
அதே நேரத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில் ஆண்டு ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை விலக்கிக் கொள்ள முயற்சி எடுப்பாரா இந்து முன்னணி அமைப்பாளர்?
இன்னொன்றையும் கோயில்களில் உள்ள சாமி சிலைகளின் கணக்கெடுப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.
கடவுள் சிலைகளின் சக்திமீது அந்த அளவுக்குத்தான் நம்பிக்கை போலும்! அந்த சிலைகளின்மீது யாரும் கை வைக்க முடியாது - சர்வ சக்தி வாய்ந்தது என்று இராம. கோபாலன்கள் உண்மையிலேயே நம்புவார்களேயானால், இது போன்ற கோரிக்கைகளை வைக்க முன் வருவார்களா?
கோயில் சிலைகள் திருட்டு என்பது அன்றாட செய்தி யாகிவிட்டது. சில திருட்டுகளில் அர்ச்சகப் பார்ப்பனர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதும் நிரூபணமாகி விட்டதே - இதைப்பற்றி  எல்லாம் இந்துத்துவாவாதிகள் வாய் திறக்க மாட்டார்கள்.
இந்துத்துவா பேசும் இந்தப் பேர்வழிகள் இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் அதனை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? தி.மு.க. அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவானேன்? மற்ற மற்ற விடயங்களில் எல்லாம் இந்துக் களே! ஒன்று சேருங்கள் என்று அழைப்புக் கொடுக்கும் இவர்கள். அந்த இந்துக்களில் பயிற்சி அளிக்கப்பட்ட எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை ஏற்றுக் கொள்ளாதது ஏன்?
காரணம் வெளிப்படையானதே! இந்து மதக் கோயில்கள் எல்லாம், அவை பார்ப்பனர்களின் தனி உடைமை, பார்ப்பனர்கள்தான் கடவுளுக்குப் பக்கத்தில் செல்லும் உரிமை பெற்றவர்கள் என்பதை நிலை நாட்டுவதன் மூலம்,  சமூக அமைப்பில் தங்களின் உயர் ஜாதித் தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் இதில் உள்ள சூட்சுமம் ஆகும்.
பார்ப்பனர் அல்லாதாரில் பக்தியில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
2) அனைத்து ஊர்களிலும் தேர்த் திருவிழா நடைபெற வேண்டும், அதற்கு இந்து அற நிலையத்துறை ஆவன செய்ய வேண்டும், என்பது அடுத்த கோரிக்கை
தமிழ் செம்மொழியாவதுதான் முக்கியமா? நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன;அவற்றை எல்லாம் விட்டு விட்டு, செம்மொழி ஆக வேண்டும் என்று குரல் கொடுப்பது ஏன்? என்று பார்ப்பனத் தலைவர்களும், பார்ப்பன ஊடகங்களும் விழுந்து விழுந்து எழுதுவார்கள்.
இப்பொழுது அதையேதான் நாமும் திருப்பிக் கேட்க வேண்டும்.
நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன - கடும் மின்வெட்டு உட்பட! இந்தநிலையில் தேர் ஓட்டம்தான் முக்கியமா? என்று கேட்க விரும்புகிறோம்.
மக்களில் அடிப்படை பிரச்சினைகள், தேவைகள் தீர்க்கப்பட கோயில் சொத்துக்களை அரசு பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் - அரசுக்கு நாம் வைக்கும் கோரிக்கை இதுதான்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...