Saturday, November 24, 2012

மத்தியப் பல்கலைக் கழகங்கள்!


புதுச்சேரியில் மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு 27 ஆண்டுகள் ஓடி விட்டன. என்றாலும் இதைப் பல்கலைக் கழகத்தின் சாதனை என்று சொல்லும்படியாக பெரிதாக எதுவும் இல்லை.
புதுவையையோ, தமிழ் நாட்டையோ, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஒருவர்கூட இதுவரை துணைவேந்தராக வந்ததில்லை. பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் பிற மாநில ஆதிக்கம்தான் ஆங்கே கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.
தமிழர்கள் பெரும்பாலும் வாழக் கூடிய மாநிலத்தில்தான் இந்த பல்கலைக் கழகம் இருக்கிறதா என்று அய்யப்படும் அளவுக்கு வடமாநில ஆதிக்கம்!
நடப்பு அய்ந்தாண்டுத் திட்டத்தில் புதுவைப் பல்கலைக் கழகத்திற்கென்று ரூபாய் 900 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழ் நாட்டிலிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் குவிந் துள்ளன.
ஆனால் நிருவாகம் என்ன செய்தது?  கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
2012-2013ஆம் ஆண்டுக்கு முது அறிவியல் பாடத்துக்கு ரூ.14,500 முனைவர் பட்டத்துக்கு ரூ.29,000 என்று கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்குக் கதவு சாத்தப்பட்டு விட்டது.
ஆசிரியர்கள் நியமனம் என்பதெல்லாம் தமிழர் அல்லாதவர்கள் தாம். குறிப்பாக புவி அறிவியல் துறையில் கடைசியாக நியமிக்கப்பட்டவர் தமிழர் 1994 ஆம் ஆண்டுதான். அவருக்குப் பிறகு 18 ஆண்டு காலமாக எந்தத் தமிழரும் நியமனம் செய்யப்படவில்லை.
இந்தக் கால கட்டத்தில் ஆறு முறை தேர்வுக் குழு (Selection Board)  நடைபெற்றுள்ளது. 12 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பரிதாபம் என்னவென்றால் இந்த12 பேர்களில் ஒருவர்கூட புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவரோ, தமிழ் மொழி பயின்றவரோ கிடையாது.
மத்தியப் பல்கலைக் கழகம் என்று சொன்னாலே அது ஆரிய ஆதிக்கபுரி என்று சொல்லும் நிலைதான்! இவ்வளவுக்கும் சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் நிலம், நீர், மின்சாரமெல்லாம் கொடுத்து உதவுகிறது. இவ்வளவு சலுகைகளையும் பெற்றுக் கொண்டு கால் பதித்தவுடன் உள்ளூர் மக்களைப் புறக்கணிக்கும் நிலைதான். இடஒதுக்கீட்டினை முறையாக செயல்படுத் துவதும் கிடையாது.
திருவாரூரில் அப்படிதான் மத்தியப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. தேவையான நிலத்தை தமிழ்நாடு அரசுதான் அளித்தது. விழாவில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
அந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய மனிதவளத் துறை அமைச்சர் கபில்சிபல் விழா முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது - இடஒதுக்கீடு எல்லாம் அளிக்க முடியாது என்று சொன்னாரே!
திருவாரூரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தின் பொதுப் பேரவைக்கு (செனட்டுக்கு) நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 30 பேர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 17 பேர்கள். இந்த 17 பேர்களில் சிலர் யார் யார் தெரியுமா?
1) திரு. சித்தார்த்த வரதராஜன் இந்துப் பத்திரிகை ஆசிரியர்.
2) நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் (ஓய்வு பெற்ற நீதிபதி)
3) திரு. கிருஷ்ணமூர்த்தி (தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்)
4) செல்வி பத்மா சுப்ரமணியம் (பரத நாட்டியக்காரர்)
இவர்கள் அத்தனைப் பேருமே அசல் அக்கிரகார வாசிகள்தான் என்று சொல்லித் தான் தெரிய வேண்டுமோ!
திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தில் செயற்குழுவிற்கு (சிண்டி கேட்டிற்கு) 12 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இப்படி பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லை என்ற போக்குத்தான் தலை விரித்தாடுகிறது.
அதே நேரத்தில் வெளி மாநிலங்களில் உருவாக்கப் படும் மத்தியப் பல்கலைக் கழகங்களின் நிலை என்ன? வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் அங்கெல்லாம் உண்டா? அப்படியிருந்தால் அம்மாநிலத்தவர் அதனை அனுமதிப் பதும் இல்லை.
ஏமாந்த கோணகிரியாக தமிழர்கள்தான் இருந்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசும், புதுச்சேரி அரசும் இதில் தலையிட்டு, மத்திய பல்கலைக் கழகங்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் படிக்க வழி செய்யப்பட வேண்டும். பணி நியமனங்களிலும் குறிப்பிட்ட  சதவிகிதமாவது அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட உத்தரவாதம் தேவை! தேவை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...