Thursday, November 1, 2012

ராஜீவ் காந்தி கொலை: முக்கிய திருப்பம் எம்.கே. நாராயணன்மீது பார்வை!



சென்னை, அக். 31- ராஜீவ் காந்தி படுகொலையில் முக்கிய வீடியோவை மறைத்ததன்மூலம் மத்திய உளவுப் பிரிவின்முன்னாள் இயக்குநரும், இன்றைய மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே. நாராயணன்மீது பார்வை திரும்பியுள்ளது.

சி.பி.அய். முன்னாள் அதிகாரி கே. ரகோத்தமன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைமை விசாரணை அதிகாரி யாக இருந்தவர் கே.ரகோத்தமன். ராஜீவைக் கொல்ல நடைபெற்ற சதி: சி.பி.அய். ஆவணங்களில் இருந்து' (Conspiracy to Kill Rajiv Gandhi - From CBI files) என்ற புத்தகத்தில் அவர் இந்த பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

சென்னை அருகே சிறீபெரும்புதூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் 1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது படுகொலைக்கு அடுத்த நாள் எம்.கே. நாராயணன் அன்றைய பிரதமரான சந்திரசேகருக்கு விடியோ ஆதாரம் தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

நாராயணனின் ரகசிய கடிதத்தில்...

ரகோத்தமன் தனது புத்தகத்தில் இணைத்துள்ள அந்தக் கடிதத்தின் விவரம்:
ராஜீவ் காந்தி பங்கேற்ற கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மோசமாக இருந்தன. அங்கு தடுப்புகள் சரியாக அமைக்கப்படவில்லை. பொதுமக்கள் பகுதியிலிருந்து பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு யாரும் வருவதற்கு வாய்ப்புகள் இருந்தன.

கொலையாளி (தனு) பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு, ராஜீவ் காந்தி வரும்போதுதான் வந்தாரா அல்லது அவரை வரவேற்க நின்றிருந்தவர்களுடன் ஏற்கெ னவே இருந்தாரா என்பது குறித்து தெரியவில்லை.

இது தொடர்பான விடியோ ஆதாரம் இப் போது ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. அந்த கொலையாளியை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்று அந்தக் கடிதத்தில் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த விடியோ ஆதாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் எம்.கே. நாரா யணன் தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் ரகோத்தமன்.

பொதுக் கூட்டம் நடைபெற இருந்த இடத்துக்கு ராஜீவ் காந்தி வந்த பிறகே தனு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்ததாக தமிழ்நாடு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறீபெரும்புதூர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியைப் படம் பிடிப்பதற்காக உள்ளூர் விடியோகிராபர் ஒருவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நியமித்தி ருந்தனர். நீதிபதி வர்மா கமிஷன் இந்த விடியோ தொடர்பாக குறிப்பிட்ட பிறகே சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு இதுகுறித்து தெரியவந்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் பார்வைக்கு இந்த விடியோ கொண்டுவரப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டது என்று ரகோத்தமன் நிருபர்களிடம் கூறினார்.
நீதிபதி வர்மா கமிஷனின் ஆவணங்களில் இருந்து இந்தக் கடிதத்தைக் கண்டெடுத்து அவர் தனது புத்தகத்தில் இணைத்துள்ளார்.

நாராயணன் மறைத்தது ஏன்?

இந்த வீடியோ ஆதாரத்தை மறைத்தது தொடர் பாக எம்.கே. நாராயணன் மீது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியது. ஆனால், எங்கள் குழுவின் தலைவர் கார்த்திகேயன் இந்த விசாரணையை நடத்த அனுமதிக்கவில்லை என்றும் ரகோத்தமன் கூறினார்.

இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயனிடம் கருத்து கேட்டபோது, புத்தகத்தைப் படித்த பிறகே இந்த விஷயம் குறித்து எதுவும் சொல்ல முடியும் என்றார்.

மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணனின் கருத்தை அறிவதற்காக அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் சென்றுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...