Wednesday, October 24, 2012

சிங்கள அரசின் பாசிசம் அம்பலமாகிறது!


இலங்கைத் தீவில் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்த கொடூரம் நடந்து மூன்று ஆண்டுகள் ஓடி விட்டன. உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவி, தப்பி விடலாம் என்று மனப்பால் குடித்த இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு இப்பொழுது திரும்பும் இடமெல்லாம் மொத்துதல்தான்.
அதன் உச்சக் கட்டம்தான் அய்.நா.வே தலையிட்டு மூவர் குழுவை நியமித்ததும், அந்தக் குழு ஈழத்தில் இனப்படுகொலை (Genocide) நடைபெற்றது உண்மைதான் என்பதற்கான ஆதாரங்களை காரணக் காரியத்துடன் வெளியிட்டு விட்டதுமாகும்.
பிரிட்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட படங்கள் உலகையே குலுக்கி விட்டன. இலங்கைக் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க் களங்கள் (Sri lanka Killing Fields - War Crimes Unpunished) என்ற பெயரில் ஆவணப் படங்களாக வெளிவந்து வெளி உலக வெளிச்சத்தில் சிங்களக் கொடிய அரசின் கோர முகம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.
உலக மக்களின் குருதியையே உறையச் செய்துவிட்டன. அய்.நா. நியமித்த மூவர் குழுவும் இதனையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.
இந்தப் படங்கள் எல்லாம் போலி என்று வழக்கம் போலவே சிங்கள அரசு மறுத்தது. ஆனால் அந்தச் சித்திரவதைப் படங்கள் உண்மையானவை தான் என்று பிரபல தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் அறுதியிட்டுக் கூறிவிட்டார்.
அடுத்து அய்.நா.வின் மனித உரிமைச் சட்டத்தில் சிங்கள அரசின்மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியமானது. அந்தத் தீர்மானத்தை வர விடாமலும், வந்தாலும் நிறைவேற்றப்படாமலும் ஆக்க வேண்டும் என்று இலங்கை அரசு எடுத்த கடும் முயற்சியும் படுதோல்வி அடைந்தது.
ஜெனிவாவில் நடக்க இருந்த அய்.நா. கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்களைத் தாக்குவதற்காக இலங்கையிலிருந்து ரவுடிகளை அனுப்பியிருந்தனர் என்றால் இந்தப் பாசிஸ்டுகளை என்னவென்று நினைப்பது!
இலங்கைப் பாசிச ஆட்சியின் எல்லா நடவடிக்கை களும் உலக நாடுகள் மத்தியில் அம்பலமாகி வரு கின்றன. இலண்டனுக்குச் செல்லும் பொழுதெல்லாம் ராஜபக்சே விரட்டியடிக்கப்படுகிறார்  - அமெரிக்கா சென்றபோதும் இதே பரிதாப நிலைதான்!
இலங்கையில் ஈழத் தமிழர் பகுதிகளை சிங்கள இராணுவம் ஆக்ரமித்து, சிங்களவர்களை திட்டமிட்ட வகையில் குடியேற்றும் கொடுமையை எதிர்த்து பிரான்சில் வாழும் ஈழத் தமிழர்களால் பிரான்சு நாட்டு நாடாளுமன்ற முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இப்பொழுது அடுத்த கட்டமான முக்கிய நிகழ்வு பிரிட்டனில் நடந்துள்ளது. அந்நாட்டின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரிட்டனில் வாழும் தமிழர்களைக் கொண்ட உபகட்சி (British Tamils Conservative BTC) ஒன்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்து மிகப் பெரிய அங்கீகாரம் ஒன்றை அளித்துவிட்டது. (பிரிட்டனைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளனர்).
இன்னொரு செய்தி இப்பொழுது; இலங்கையில் நடைபெற்ற போரின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தனிக் குழு அமைத்து சுதந்திரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2013 சனவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக இச்சேல் கிரிம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படக் கூடாது என்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சிங்கள ராஜபக்சே அரசு மேற்கொண்டு வருகிறது. கடைசியில் இதிலும் மூக்கு உடையப்படத்தான் போகிறது.
உண்மையைச் சொல்லப் போனால் சிங்கள ராஜபக்சே அரசின் மனித விரோத நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வரும் ஒரு கால கட்டத்தில், மனித உரிமைக்காகக் குரல் கொடுப்பதில் இந்தியா முன்னுதாரணமானது என்று சுட்டிக் காட்டப்பட்டு வந்த பெருமைக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் இந்தியா நடந்து கொள்கிறது என்கிற அவப் பெயர்தான் விஞ்சும் போல் தெரிகிறது.
ஈழத் தமிழர்களுக்கு வெகு தொலைவில் உள்ள நாடுகள் காட்டும் அக்கறையில் - பாத்தியதை உடைய இந்தியா ஒரு சதவிகிதம்கூட நடந்து கொள்ளாதது தலை குனிவானதுதான்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...