Wednesday, October 24, 2012

விளையாட்டு மைதானமா கோயிலா? எது முக்கியம்?

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலின், ஒரு பகுதியை, கோவிலுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரின் மய்ய பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 80 ஆண்டு பழைமையான இப்பள்ளியில், 3,000 மாணவர்கள் படிக்கின் றனர்.  பள்ளிக்கு சொந்தமாக, 4 ஏக்கர் விளையாட்டுத் திடல் உள்ளது.
இந்த திடலில், ஈரோடு மாவட்ட அளவில் மற்றும் பெருந்துறை வட்டார விளையாட்டு போட்டி நடக்கும்; காலை, மாலையில் ஏராளமானோர், நடைப்பயிற்சி மேற்கொள் கின்றனர்.
மைதானத்தில், 30 சென்ட் இடத்தை, அருகில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. கோவிலைச் சேர்ந்த சிலர், இம்மாதம் 15ஆம் தேதி, விளையாட்டு மைதானத்தை அளவீடு செய்து, கல் நட்டனர். கட்டட பணிக்காக மணல் கொண்டு வந்து கொட்டியதால், மைதானம் பறி போவதை அறிந்த மாணவர்கள், சென்னை - கொச்சி தேசிய நெடுஞ்சாலை, குன்னத்தூர் நான்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பெருந்துறை காவல்துறை அதிகாரி இதுபற்றி அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளோம்; உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும், என கூறியதை தொடர்ந்து, வகுப்புக்கு மாணவர்கள் திரும்பினர். மறியலால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
இந்தச் செய்தி தெரிவிப்பது என்ன? பள்ளி மாணவர் களுக்கு விளையாட்டு மைதானம் முக்கியமல்ல; கோயில்தான் முக்கியம் என்று கருதுகின்ற அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்பொழுதெல்லாம் குறிப்பாக சென்னை பெரு நகரம் போன்ற பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் என்பது அறவே கிடையாது.
சில பள்ளிகளில் மாலை விளையாட்டு என்பது கிடையாது. காலையில் ஒரு வகுப்பு - விளையாட்டுக்கென்று ஒதுக்குவதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. விளையாட்டை வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. மாலை நேரம்தான் விளையாட்டுக்கு உகந்தது.
மாணவர்களுக்குக் கல்வி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் விளையாட்டு என்பதாகும். விளையாட்டு என்பது தனி மனித உணர்வை வெளியேற்றி கூட்டுணர்வை (Team Spirit)  உண்டாக்கக் கூடியதாகும்.மனதிற்குள் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கும் பண்பைக் கொண்டது; உடல் திறனையும் வளர்க்கக் கூடியது.
மாணவர் பருவத்தில் அளிக்கப்படும் உடல் ரீதியான பயிற்சி என்பது எதிர்காலத்தில் அவர்களின் உடல் நலம் பாதுகாப்புக்கு உத்தரவாதமாகும்.
சமச்சீர் கல்வியில் வெறும் எழுத்துத் தேர்வுக்கு மட்டு மல்ல; விளையாட்டு, கைத்திறன் உள்ளிட்டவைகளுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன.
இவ்வளவ முக்கிய அம்சங்கள் மாணவர்களுக்கு இருக்கும் பொழுது ஒரு விளையாட்டு மைதானத்தை கோயில் கட்ட ஒப்படைப்பது எவ்வளவுப் பெரிய கீழ்க்குணமும், பொறுப்பற்றதும் ஆகும்.
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சில நாட்களுக்குமுன் நாட்டுக்குத் தேவை கழிவறைகளே தவிர கோயில்கள் அல்ல என்ற அருமையான கருத்தினைத் தெரிவித்தார். அதன் தன்மையை உணர்ந்து கொள்ளாத ஆரோக்கியமற்ற மனப்பான்மையினர் கண்டனம் தெரிவித்தனர்.
கோயில்களுக்கு என்ன நாட்டில் பஞ்சமா? தடுக்கி விழும் இடத்தில் எல்லாம் கோயில்கள் தானே?
முதலில்லா வியாபாரம் ஒன்று உண்டென்றால் அது கோயில் தொழில்தானே. நடைப் பாதையில் ஒரு கல்லை நட்டு வைத்து, அதில் குங்குமத்தை அப்பி, ஒரு மாலையைப் போட்டு, பக்கத்தில் ஓர் உண்டியல் வைத்தால் போதுமே! பண மழை கொட்டுமே! இரவில் அதை உடைத்து சமூக விரோதிகள் சர்வ தீர்த்த சல்லாபத்தில் மூழ்கி விடுகிறார்கள்.
கடவுள்தான் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பாரே - (பக்தர்கள் அப்படித்தானே சொல்லுகிறார்கள்) அப்படிபட்டவருக்குத் தனியாக வீடு - அதாவது கோயில் எதற்கு?.
கடவுளுக்குக் கோயில் கட்டுவது கடவுளை அமவதிப்ப தாகும். கடவுள் எங்கும் நிறைந்தவர் அல்ல. குறிப்பிட்ட இடத்தில் குடி இருப்பவர் என்று ஆக்குவது கடவுளுக்கு இழைக்கப்படும் அவமானமும் சிறுமையும் அல்லவா!
சட்டம் இருக்கிறது, விதிமுறைகள் இருக்கின்றன. அனுமதியின்றி பொது இடத்தில் கோயில் கட்டக் கூடாது என்று; உச்சநீதிமன்றமேகூட தெளிவாக ஆணையிட் டுள்ளது.
இந்தியாவில் பொது இடங்களை ஆக்ரமித்து கட்டப்பட்ட கோயில்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு; அவை அகற்றப்பட வேண்டும்; அந்த விவரத்தை நேரில் வந்து தமிழக அரசின் தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் எம்.கே. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. சட்டத்தை மீறி கோயில் கட்டப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் பெருந்துறையில் பள்ளி மைதானத்தை கோயில் கட்ட கருத்துரு கொடுத்த அதிகாரிகள்மீது விசா ரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டால், மற்ற மற்ற இடங்களிலும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்கப்படும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...