Tuesday, October 30, 2012

எக்கணமும் சிக்கனமே சிறந்தது!



இன்று உலக சிக்கன நாள்  - என்று அறிவிக்கப்பட்டு ஆண்டு தோறும் மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். ஒரு நாள் மட்டுமல்ல என்றுமே நமது வாழ்வு. சிக்கன வாழ்வாக அமைந்தால் அதைவிட சிறப்பான வாழ்க்கை வேறு இருக்கவே முடியாது!

சிக்கனம் என்பது எப்போது பெருமை அடைகிறது தெரியுமா?

ஏராளமான வசதி வாய்ப்புப் பெற்றுள்ளவர்கள் எளிமையையும், சிக்கனத்தையும் கடைப்பிடிக்கும் போதுதான் அது மேலும் பாராட்டத் தகுந்ததாக அமையக்கூடும்.

ஏழை, எளியவர்கள் சிக்கனத் திருமணத்தைச் செய்தால், உலகத் தார் உடனே, அவருக்கு வேறு வழி என்ன? சிக்கனத்தைத் தவிர? என்று எளிதாகக் கூறி விடுவார்கள்.

ஆனால் நிரம்ப வசதி படைத் தவர்கள் சிக்கனத் திருமணம் செய்து கொள்ளும்போது அதைப் பாராட்டுவர் - சரியான தெளிவு படைத்த மனங் கொண்டோர். கோணல் இல்லாத குணங் கொண்டோர்.

கோணல் புத்தியுள்ளவர்களோ, பாரய்யா இவ்வளவு வசதியிருக்கிற இவர், ஏன் தாராளமாகப் பணத்தைச் செலவழிக்கக் கூடாது? இவர் சாதாரண ஆள் இல்லப்பா; உலக மகா கஞ்சன் என்று கூறிடும் நிலையும் உண்டு!

நாம் எவரும் யாருக்காகவும், ஊருக்காகவும் வாழ வேண்டிய தில்லை; நமக்காக, நமது சுயமரி யாதைக் காப்புறுதிக்காக வாழ வேண்டும்.

வரவுக்குட்பட்டு செலவழிக்கும் எவருக்கும் கடன் வாங்க வேண்டிய கட்டாயமோ, அல்லது அப்படியே தவறிப் போய் கடன் வாங்கினாலும்கூட ஒழுங்காகத் திருப்பி அதனை உரிய காலத்திற்குள் அடைத்திடும் வாய்ப்பும், வழியும் உண்டே!

அண்மைக் காலங்களில் தொலைக் காட்சிகளின் விளம்பரங்கள் பல நடுத்தர வர்க்க மக்களைக்கூட தொற்று நோய் போல் தொற்றிக் கொண்டு, ஆடம்பரப் பொருள்களை வாங்கிக் குவிக்கச் செய்கிறது!

அதிலும் வங்கிகள் தந்த (Credit Cards)  கடன் அட்டைகளை வைத்துக் கொண்டு ஆடம்பரப் பொருள்களை வாங்குவது - தேவையைக் கருதி அல்ல - ஆசையைக் கருதி, அந்தஸ்தை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வெளிச்ச வியாதிக்குப் பலியாகி, கண்டபடி குறிக்கோள் அன்றிச் செலவழிப்பர்.
தொலைக்காட்சியில் ஒரு பிரபல ஜவுளிக் கடைக்கு ஒரு பெண்மணி செல்லுகிறார். (நான் பார்த்தேன் - நேற்று - விளம்பரம் அல்ல உண்மையான செய்தி!) தீபாவளிக்கு ஒரு புடவை எடுப்பதற்காக இங்கு வந்தேன். இங்கு வந்து பார்த்தவுடனே எல்லாம் மிகவும் கவர்ச்சியாக இருக்கின்றபடியால் 12 புடவைகள் எடுத்துள்ளேன் என்று சிறிதுகூட லஜ்ஜையின்றிக் கூறுகிறார் தொலைக்காட்சி செய்தியாளரிடம்!

12  புடவைகளை ஒரு நபர் வைத்து எப்படித்தான் மாற்றிக் கட்டுவார்; வீட்டில் ஏற்கெனவே ஏராளம் அடுக்கி வைத் திருப்பார்களே!

இது ஒரு சிறு நிகழ்வு. இதுபோல தேவையைக் கருதாது, மனம் போன போக்கில், ஆசைக்கு லகான் போடத் தெரியாமல் சென்றால் அவர்கள் வாழ்க்கை என்னவாகும்?
வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தார்!

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்          (குறள் 479)

அளவறிந்து அதற்குத்தக்கபடி வாழ்க்கை நடத்தாதவனுடைய ஆடம்பரச் சிறப்பு, இருப்பது போல் இருந்து இல்லாமற் போய் மீண்டும் தலைதூக்க விடாமல் கெட்டுப் போகும் என்கிறார் வள்ளுவர்!

என்னே அருமையான, தேவை யான எச்சரிக்கை!

தந்தை பெரியார் அவர்கள் எப்போதும் சிக்கனக்காரராக இருந் தவர் - மண்டிக் கடை வியாபாரியாக இருந்த காலம் முதல் பொது வாழ்க்கையில் மக்கள் ஏற்ற தலைவராக உயர்ந்து உள்ளத்தார் உள்ளத்தில் எல்லாம் உள்ளவராகி வாழும் நிலை பெற்ற பிறகுகூட.

வீட்டை விட்டு வெளியேறி,  காசியில் பசியால், பட்டினியால் எச்சில் இலையிலிருந்து வழித்துச் சாப்பிட்ட நிலையை அனுபவித்து, அதைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஞானி அவர்!

தனது தந்தை ஆந்திராவிற்கு வந்து மகனைக் கண்டறிந்து மகிழ்ந்த போது, அவரது நண்பர் வீட்டில் தனது பொன்னகைகளையெல்லாம் மூட்டை கட்டி நம்பிக்கையுடன் கொடுத்து அப்படியே திருப்பி தந்தையிடம் ஒப்படைத்த கதை மெய் சிலிர்க்க வைப்பதல்லவா?

ஏண்டா இராமா - சாப்பாட்டிற்கு என்ன செய்தாய் என்று தந்தை வெங்கட்டநாயக்கர் கேட்டபோது, அது ஒன்றுமில்லை நைனா, நீங்கள் போட்ட தானத்தை - சதாவிருத்தி களை நான் அங்கே திரும்ப வசூலித்துவிட்டேன் என்று கூறியது -  வெறும் நகைச்சுவை உணர்வு மட்டுமா? 

எவ்வளவு பெரிய சிக்கனத்தின்  செதுக்கல்? எங்கும் சிக்கனம் பெருகுக! 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...