Thursday, October 11, 2012

கருநாடக அரசின்மீது 365 அய் பயன்படுத்தவேண்டும்:தமிழர் தலைவர் பேட்டி


சென்னை, அக்.10- காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவர் என்கிற முறையில் பிரதமர் பிறப்பித்த ஆணையை மதித்துச் செயல்படுத்தாத - உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் புறந்தள்ளி செயல்படும் கருநாடக மாநில அரசின்மீது இந்திய அரசமைப்புச் சட்டம் 365 அய் பயன்படுத்தவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப் பெற்று அதன் தலை வராக இருக்கக் கூடிய பிரதமர் மன்மோகன்சிங் தெளி வாக ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். தமிழ்நாட்டுக்கு நொடிக்கு 9000 கன அடி நீரை கருநாடகம் அளிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆணை.
அந்த ஆணையையும் கருநாடக அரசு மதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும், பிரதமர் கூறிய அதே ஆணையை வழிமொழியும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த இரண்டு ஆணையையும் கருநாடக மாநில அரசு செயல்படுத்தவில்லை.
சில நாள்கள் மட்டும் தண்ணீரைத் திறந்துவிட்டு, பிறகு நிறுத்திவிட்டது.
மறு ஆய்வு மனுவை கருநாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன்மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாத நிலையில், ஏற்கெனவே பிரதமரும், உச்சநீதிமன்றமும் பிறப்பித்த ஆணை செயலில் இருக்கிறது என்று பொருள்.
1. பிரதமர் ஆணையைச் செயல்படுத்தாத நிலை; 2. உச்சநீதிமன்ற ஆணையைச் செயல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு என்று மேலும் மேலும் கருநாடக மாநில அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொண்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு என்ன செய்யவேண்டும்?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 365 ஆவது பிரிவைப் பயன்படுத்தி கருநாடக மாநில அரசின் நிருவாகத்தை மத்திய அரசே கையில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
356 அய் பயன்படுத்துவதற்காவது ஆளுநர் அறிக்கை தேவைப்படும். 365-க்கு அது தேவைப்படவேண்டிய அவசியம் இல்லை.
365 பிரிவு என்ன கூறுகிறது?
Effect of failure to comply with, or to give effect to, directions given by the Union. - Where any State has failed to comply with, or to give effect to any directions given in the exercise of the executive power of the Union under any of the provisions of this Constitution, it shall be lawful for the President to hold that a situation has arisen in which the Government of the State cannot be carried on in accordance with the provisions of this Constitution.
இந்திய அரசியல் சாசனப்படி வழங்கப்பட்டுள்ள செயல் அதிகாரத்தின்கீழ், மத்திய அரசுக்கு வகுக்கும் ஆணைகளை நிறைவேற்றுவதற்கு அல்லது அமல்படுத்துவதற்கு ஒரு மாநில அரசு தவறினால், அந்த மாநிலத்தில் இந்திய அரசியல் சாசனப்படி அரசை நடத்துவதற்கு இயலாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்று குடியரசுத் தலைவர் கருதுவது சட்டப்படி சரியானதாகும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 365 ஆவது பிரிவு தெளிவாகக் கூறுகிறது.
மூன்றாவதாக மாநிலத்தில் கலவரத்தைத் தூண்டும் ஒரு வேலையிலும் கருநாடக அரசு நடந்துகொண்டு வருகிறது.
பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்களையும் குருக்களையும் பயன்படுத்தி, கருநாடக மாநிலத்தில் கலவரத்தை உண்டாக்கும் போக்கு நடந்துகொண்டு இருக்கிறது. கலவரம் நடைபெற்றால் அந்தப் பகுதியை Disturbed Area என்று அறிவித்து, இராணுவத்தை அனுப்பலாம். இராணுவத்தின்மூலம் அணைகளைக் கையகப்படுத்தலாம்.
திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு
திராவிடர் கழகத்தைப் பொருத்தவரையில் கருநாடக மக்களுக்கோ, அம்மாநில விவசாயிகளுக்கோ நாங்கள் எதிரியல்ல; அவர்களும் வாழட்டும்; தமிழ்நாட்டு மக்களும் வாழ விடப்படவேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு.
இரு மாநில மக்களிடையே மோதல் போக்கை யாரும் உருவாக்கிவிடக் கூடாது - உணர்ச்சிவயப்படவும் கூடாது. சமூக விரோதிகளுக்கு இடம்தரும் வகையில் நடந்துவிட எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது.
இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் விரோதிகள் அல்ல; மனிதாபிமான அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சினை இது.
தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன?
கருநாடக மாநிலம் உரிய நேரத்தில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிடாததால், தமிழ்நாட்டில் குறுவைச் சாகுபடி அறவே நடைபெறவில்லை.

சம்பா சாகுபடியும் கேள்விக் குறிக்கு ஆளாகிவிட்டது. இந்த நிலைக்கு என்ன காரணம்? விரைவில் தேர்தல் வர இருக்கின்ற காரணத்தால், கருநாடக மாநில அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு அணுகுகிறார்கள். பாமர மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற மலிவான யுக்தியாக இதனைக் கைகொண்டுள்ளனர்.
வெளியுறவுத் துறை அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தான் ஒரு மத்திய அமைச்சர். எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானவர் என்பதைக் கூட மறந்து, புறந்தள்ளி கருநாடக மாநிலத்துக்காரராக நடந்துகொள்கிறார். அவரும் வாக்கு வங்கி அரசியலை நடத்திட முன்வந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.
யார் பிரிவினை வாதிகள்?
இந்திய ஒருமைப்பாடு பேசும் தேசிய வாதிகள்தான் இப்பொழுது பிரிவினைவாதிகளாக மாறியுள்ளனர்.
எங்களை எல்லாம் பார்த்து பிராந்தியவாதிகள்  என்று வருணித்தவர்கள், கேலி செய்பவர்கள் எல்லாம் இப்பொழுது பிராந்தியவாதிகளாக, பிரிவினைவாதி களாக மாறி விட்டார்களே!
வேற்றுமையில் ஒற்றுமை என்றார் அன்றைய பிரதமர் நேரு. இது வெறும் காகிதத்தில்தானே அது இருக்கிறது?
- செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர்.

நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம்!
கருநாடகத்தில் காவிரி உற்பத்தியாவதால் அந்த நீர் முழுவதும் கருநாடக மாநிலத்துக்கே சொந்தம் என்றால், நெய்வேலியில் உற்பத்தியாவதால் அந்த மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்ற நிலையில் வரும் 15 ஆம் தேதி காலை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடு போராட்டம் எனது தலைமையில் நடைபெற உள்ளது. முதல் நாள் நெய்வேலியில் நடக்க இருக்கும் போராட்ட விளக்கப் பொதுக் கூட்டத்திலும் நான் பேசுகிறேன்.  முற்றுகைப் போராட்டம் வன்முறைக்கு இடமின்றி அறப் போராட்டமாகவே நடைபெறும்.
- செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர்.

தீர்வுதான் என்ன?
(1) வட மாநிலங்களில் அசாம், பிகார் போன்ற மாநிலங்களில் ஆண்டு தோறும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. தென்னகத்திலோ போதிய அளவு நீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா முழுமையும் உள்ள நதிகளை ஒன்றிணைக்கும் தேசிய அளவிலான திட்டத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். முதற் கட்டமாக குறைந்த பட்சம் தென்னக நதிகளையாவது இணைக்க வேண்டும். நிதி தேவைப்படும் என்றால் உலக வங்கியில் கடன் வாங்கலாம். நாற்கர சாலைகள் போன்ற வற்றிற்காக மத்திய அரசு கடன் வாங்க வில்லையா? இந்தியாவில் கோயில்களில் இல்லாத செல்வமா? திருப்பதி கோயிலிலும், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலிலும் இல்லாத சொத்துக்களா? தங்கத்தின் இருப்புகளை மக்களுக்குப் பயன்படும்படி, மக்கள் நலத்திற்காகப் பயன்படுத்துவது என்பதுதானே முக்கியம்!
(2) இந்தியாவில் உள்ள எல்லா நதிகளையும் நாட்டுடமை ஆக்க வேண்டும். நதிநீர்ப் பிரச்சினைக்கு இவைதான் நிரந்தரத் தீர்வுகளாக இருக்க முடியும்.
- செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...